தஞ்சாவூரில் அரசு வேலையில் இருக்கும் நிலையிலும், சொத்துப் பிரச்னை காரணமாக இரண்டு சகோதரரர்கள் தங்கள் தாயைக் கவனிக்காமல் சில வருடங்களாக வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து தனிமைப்படுத்தி கொடுமை செய்து வந்துள்ளனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர், மகன்கள் கைவிட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த முதிய தாயை சமூக நலத்துறை சார்பில் மீட்க உத்தரவிட்டார். எலும்பும் தோலுமாக இருந்த அந்தத் தாயின் நிலை சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தஞ்சாவூர், காவேரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் 62 வயதாகும் ஞானஜோதி. இவரின் கணவர் அரசு தொலைக்காட்சி ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில் மகள் இறந்து விட்டார். ஞானஜோதியின் மூத்த மகன் சென்னையில் இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் அரசு தொலைக் காட்சியிலும் வேலை செய்து வருகின்றனர். அரசு வேலையில் இருவருமே இருந்து வருவதால் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்நிலையில் சொத்து பிரச்னை காரணமாக இரண்டு மகன்களுமே தங்கள் தாயைக் கவனிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அத்துடன், சில ஆண்டுகளாகவே பூட்டிய வீட்டுக்குள் தாயைத் தனிமையில் அடைத்து வைத்து, அடிப்படை வசதிகள் எதையும் செய்து தராமல் தவிக்கவிட்டுள்ளனர். அருகில் இருந்த ஒருவர் அந்த முதிய தாயின் நிலையைக் கண்டு பதறியதுடன் அவரை மீட்க வலியுறுத்தி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அது மாவட்ட சமூக நல அலுவலரான ராஜேஸ்வரியின் கவனத்துக்குச் சென்றுள்ளது. எந்தத் தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது எனக் கலங்கிய அவர், உடனடியாக முதிய தாய் ஞானஜோதியை மீட்டுக் கொண்டு வர ஊழியர்களை அனுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த மூத்த மகன், `எங்க அம்மாவை எங்களுக்குப் பார்த்துக்கத் தெரியும்' என்று சொல்லி அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து, சமூக நலத்துறை ஊழியர்களைத் திட்டி அனுப்பியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசு தொலைக்காட்சியில் வேலைசெய்யும் இளைய மகனும், சமூக நல அலுவலரான ராஜேஸ்வரியிடம் போனில் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு இந்தப் பிரச்னை சென்றுள்ளது. பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்த எப்படி மனசு வந்தது என்று வருந்திய அவர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று அந்தத் தாயை மீட்டு வரவும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சமூக நலத்துறை ஊழியர்கள், ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட குழுவினர் தாயை மீட்க சென்றுள்ளனர். இதையறிந்து அங்கு வந்த மூத்த மகனிடம் கேட் சாவியைக் கேட்க, அவர் தர முடியாது என்று மறுத்து வாக்குவாதம் செய்திருக்கிறார். இதையடுத்து கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நிலையில், சரியாக சாப்பிடாததால் எலும்பும், தோலுமாக இருந்த அந்த முதிய தாயை மீட்டுச் சென்றனர் பணியாளர்கள். மனம்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து சமூக நலத்துறை அலுவர்கள் தரப்பில் பேசினோம். ``அந்த முதிய தாயின் இரண்டு மகன்களும் அரசு வேலை செய்து வருவதுடன் நல்ல நிலையிலும் இருக்கின்றனர். சொத்து தொடர்பான பிரச்னை இருவருக்குமிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் தாயை இரண்டு பேருமே கவனிக்க வில்லை. மகன்கள் வெவ்வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில், தாயை மட்டும் காவிரி நகரில் உள்ள வீட்டுக்குள் அடைத்துவிட்டனர்.

வெளியில் இருந்து யாரும் பார்த்தால் தெரியாத அளவுக்கு சுற்றுச் சுவர் எடுத்துள்ளனர். தாய் வெளியே சென்று விடாதபடி வீட்டின் வெளி கேட்டை இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டி விட்டனர். சாப்பாடு கொண்டு வந்தால் வெளியே இருந்தே தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். பல நேரம் சாப்பாடு தர வரமாட்டார்களாம். அது போன்ற நேரங்களில் பசியால் துடித்த நிலையில் அந்தத் தாய் சாப்பாட்டுத் தட்டை தரையில் வேகமாகத் தட்டுவாராம். அப்போது அருகில் இருப்பவர்கள் கொண்டு வந்து சாப்பாடு கொடுப்பார்களாம்.
கட்டிக்கொள்ள புடவைகூட இல்லாமல் பல நேரம் நிர்வாண மாகவே இருந்துள்ளார். அந்தப் பெரிய வீட்டில் எந்த ஒரு பொருளும் இல்லை. தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் செய்துள்ளனர். மூத்த மகனிடம் கேட் சாவியைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டதற்கு, `நீங்க அவங்கள அழைச்சிக்கிட்டு போறதும் போகாததும் உங்க விருப்பம். நான் சாவி தர மாட்டேன்' என்று இரக்கமே இல்லாமல் சொன்னார்.

அதன் பிறகு, போலீஸ் உதவியுடன் கேட்டை உடைத்து உள்ளே சென்றோம். சரியான பராமரிப்பு இல்லாததால் எலும்பும் தோலுமாகப் பார்ப்பதற்கே பாவமாக இருந்த ஞானஜோதி நிர்வாணமாகத் தரையில் சுருண்டு கிடந்ததுடன் மண்ணை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாகவே மகன்கள் கவனிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்ததால் மனநிலையும் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது நிலை எங்களுக்குக் கண்ணீரை வரவைத்தது. பெத்து வளர்த்து ஆளாக்கிய மகன்கள் இரக்கமே இல்லாமல் எப்படி இப்படி நடந்துகொண்டனர் தெரியவில்லை. என்னதான் சொத்து பிரச்னை இருந்தாலும் ஒரு ஹோமில் சேர்த்தாவது அந்தத் தாயை கவனித்திருக்கலாம். பென்ஷன் வாங்கும் அவரின் நிலை பரிதாபமாக இருந்தது. இதுபோன்ற நிலை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது.

இனியாவது அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் கலெக்டர் உதவியுடன் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மகன்கள் கைவிட்ட அந்தத் தாயின் முகத்தில் சிரிப்பை வர வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். தாயைக் கவனிக்கத் தவறியதுடன் அலுவலர்களைத் தகாத முறையில் பேசிய மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றனர்.
இதையடுத்து, `நாங்க தெரியாம செஞ்சுட்டோம், இனிமே நாங்க சரியா பாத்துக்குறோம்' என ஞானஜோதியின் மருமகள் உள்ளிட்ட சிலர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகத் தெரிகிறது.