லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாழ்க்கை மனநிறைவுடன் வாழ்வதற்கானதே!

பாரதி பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரதி பாஸ்கர்

கற்றதும் பெற்றதும்

பேச்சுத் திறமையால் மேடைகள்தோறும் நல்ல கருத்துகளையும் தன்னம்பிக்கைக் கதைகளையும் எடுத்துரைக்கும் நம்பிக்கை உரையாளர்கள், இந்த லாக் டெளன் காலகட்டத்தில் தாங்கள் கற்றதும் பெற்றதுமான விஷயங்களைப் பகிர்கிறார்கள்.

ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன்

கற்றவை

நான் வசிக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தின் அமைதியைச் சீர்குலைத்தது, 1998-ல் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம். விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பினோம். பிறகு, சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், சில புயல்கள் உட்பட பல இயற்கைச் சீற்றங் களிலிருந்து மீண்டு வந்தவர்கள் நாம். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரைதான் ‘கோவிட் 19’ வைரஸின் மிரட்டல். பின்னர் நாம் நம் வழக்கமான பணிகளில் களமிறங்கிவிடுவோம். மீண்டும் ஒரு பேரிடருக்கு எதிராகப் போராடும் வல்லமையைப் பெறுவோம். இதுதான் வாழ்க்கை!

வாழ்க்கை மனநிறைவுடன் வாழ்வதற்கானதே!

தொழில்நுட்பங்கள் பெருகினாலும் இயற்கைச் சீற்றங்களுக்கு எதிரான போராட்டத்தை எப்போதும் தடுக்க முடியாது. ஆனால், அவற்றிலிருந்து நம் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நிறைய பாடங்களைக் கற்கலாம். உரிய விலை கிடைக்கவில்லை என விளைபொருள்களை வீண் செய்யாமல், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு விற்பனை செய்த விவசாயிகள் பலரையும் நான் அறிந்தேன். பிரச்னையைப் பிரச்னையாக மட்டுமே பார்க்கும் மனிதர்களுக்கு, ஆண்டவனே நேரில் வந்து நின்றாலும் அவரும் பிரச்னையாகவே தெரிவார். அனைவரிடமும் ஆற்றல் உண்டு. அதைப் பயன்படுத்தி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற்றால், புதிய வளர்ச்சிக்கான பாதை நிச்சயம் பிறக்கும் என்பதை நானும் ஆழமாகக் கற்றிருக்கிறேன்.

பெற்றவை

‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ என்று மக்கள் நலப் பணியாளர்கள் வேண்டுகோள்விடுத்து உயிரைப் பணயம் வைத்து உழைக்கிறார்கள். இவர்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம். மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உட்பட சிலர்மீது சில செய்திகளின் வாயிலாக முந்தைய காலங்களில் மாறுபட்ட கண்ணோட்டங்கள் எனக்கும் இருந்தன. அந்த எண்ணம் ஒட்டுமொத்தமாக இப்போது தகர்ந்துள்ளதுடன், அவர்கள்மீது பெரும் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ஒட்டுமொத்த மனித இனத்தின் மீதும் அவ்வப்போது வரும் சந்தேகங்களும் மறைந்திருக்கிறது. என் அகராதியில் ‘குறை’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன். இந்த மனமாற்றத்தை லாக் டெளன் காலத்தில்தான் பெற்றேன். எல்லோர்மீதும் அன்பு அதிகரித்திருக்கிறது. அன்பு செலுத்துவது மட்டுமே இந்த உலகை எல்லாக் காலங்களிலும் மேம்பட்ட நிலைக்கு அழைத்துச்செல்லும் என்ற உண்மையை லாக் டெளன் காலம் மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியிருக்கிறது!

பாரதி பாஸ்கர்

கற்றவை

தொழில்நுட்பம் பெருகப் பெருக, நுகர்வு கலாசாரம் விரிவடையும் வேகத்தில் நம் எண்ணங்கள் அவசியமற்ற, தவறான பாதைக்குச் செல்கின்றன. பிறரைப் பார்த்து, நம் நிலையை மறந்தோம். வருவாய்க்கு மீறிய செலவினங்களைச் செய்து நிம்மதியை இழந்தோம்.

இப்போது வீட்டில் இருந்தபடியே என் வங்கிப் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன். வழக்கமான செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும், இந்த இக்கட்டான சூழலில் அவசியத் தேவைகளை மீறிய செலவினங்களைக் குறைத்துக்கொண்டதால் மாதப் பட்ஜெட்டில் முன்பைவிட குறைவான செலவுதான் ஆகிறது. இதுதான் பெரும்பாலானோரின் கருத்தும்கூட. ‘போதாது’ என்று கூறிவந்த நாம், ‘இதுவே போதும்; இருப்பதே போதும்’ என்று பழகியிருக்கிறோம். ஆனாலும், ஆரோக்கியமாகத்தானே வாழ்கிறோம்? இதுதான் சரியான, உயர்வான எண்ணம். கடந்த இரண்டு மாதங்களில் அத்தியாவசியத் தேவைக்கு மீறிய பொருள்களை வாங்குவதை அடியோடு குறைத்துக்கொண்டோம்.

வாழ்க்கை மனநிறைவுடன் வாழ்வதற்கானதே!

‘எளிமையான வாழ்க்கை; உயர்வான எண்ணங்கள்’ என்ற சிந்தனையை நான் ஆழமாகக் கற்றுள்ளேன். ‘இன்றைய பொருளாதார நிர்பந்தங்களையே யோசித்துக்கொண்டிருந்தால் போதுமா? எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் நிம்மதியாக வாழ இந்தப் பூமியை நல்ல முறையில் விட்டுச் செல்ல வேண்டாமா?’ என்கிற மிகப்பெரிய பாடத்தை லாக் டெளன் காலம் உணர்த்தியிருக்கிறது.

பெற்றவை

பூமியை முழுவதுமாக மாசுபடுத்தி சுற்றுச்சூழலை மிக மோசமாக்கிவிட்டோம். எதற்குமே ஓர் எல்லை உண்டல்லவா! லாக் டெளன் சூழலில் இயற்கை தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது. காலங்கால மாகத் திட்டம் தீட்டி, ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டும் பலனில்லை. ஆனால், லாக் டெளன் தொடங்கிய ஒரே மாதத்தில் கங்கை உள்ளிட்ட நீர் நிலைகள் பலவும் தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொண்டு தெளிந்த நீரோடைகளாக மாறியிருக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேராத கடற்கரை. புகை மண்டலம் இல்லாத சாலைகள். ஆகாய விமானங்களின் இரைச்சல் இல்லாத வானம். ஓசோன் பாதிப்பும் குறைந்துள்ளது. நல்ல காற்றை சுவாசிக்கிறோம். முன்பைவிட மாசு குறைந்த நீரைப் பயன்படுத்துகிறோம்.

‘உடல் உழைப்பே இல்லாதது பெரும் பாவம்’ என்றார் காந்தி. அப்படித்தானே பலரும் இருந்தோம். நல்ல வேலை. நிறைவான சம்பளம். வீட்டு வேலைக்குப் பணியாள். இப்படி இருந்த நாம்தானே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீட்டு வேலைகளையும் செய்கிறோம். இதனால் நல்ல உடல்நலம், மனநலம் பெற்றோம். கடந்த இரண்டு மாதங்களில் எனக்கும் நமக்கும் கிடைத்த நன்மைகளைப் பட்டியலிட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது!

சுமதி

கற்றவை

உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே வாழ்க்கைக்கான அடிப்படை. இதை மீண்டும் ஆழமாக உணர்த்தி, இனி நம் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசிக்க வைத்திருக்கிறது லாக் டெளன் காலம். ‘இதெல்லாம் இல்லையென்றால் இருக்கவே முடியாது’ என்று நாம் ஏற்படுத்திக் கொண்ட தேவையற்ற விஷயங்கள் இல்லாமலும் வாழப் பழகியிருக்கிறோம். முன்பெல்லாம் நேரமில்லை எனக் கூறிய பல விஷயங்களைத் தவிர்த்திருக்கிறேன். அதற்கு மாறாக நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்பட நானும் பழகியிருக்கிறேன்.

சுமதி
சுமதி

எல்லா வாய்ப்புகளும் இருந்தபோது பலரிடமிருந்தும் விலகியிருந்தோம். இப்போது வாய்ப்புகள் குறைந்து, சமூக விலகலில் இருக்கும்போது அவர்களிடம் மீண்டும் அன்பு செலுத்துகிறோம். இதைத் தற்காலிகமாக இல்லாமல் வாழ்நாள் முழுக்க தொடர வேண்டும் என்பதைக் கற்றிருக்கிறேன். பலவித மனிதர்களின் உண்மையான பிரச்னைகளை கண்கூடாகத் தெரிந்துகொண்டேன். எளிய மனிதர்களுக்கு அதிகம் உதவ வேண்டும் என்று எனக்கான பொறுப்புணர்வை உணர்ந்துள்ளேன். முன்பு எல்லா நேரமும் வழக்கறிஞர் சிந்தனையுடன் இருந்திருக்கிறேன். அந்தப் பணியே வாழ்க்கையில்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிற பாடத்தை லாக் டெளன் ஏற்படுத்தியிருக்கிறது.

பெற்றவை

ஊரடங்கால் குற்றங்கள், சாலை விபத்துகள், தற்கொலைகள், மருத்துவமனைக்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதைத்தாண்டி குடும்ப வன்முறைகள் இப்போது அதிகரிக்கும் செய்தி களையும் அறிந்தோம். எந்தச் சண்டையும் ஆரம்பக் கட்டத்திலேயே மனம்விட்டுப் பேசினால் சரியாகும். இல்லையென்றால் அந்தச் சண்டை என்றாவது ஒருநாள் பெரிதாக வெடிக்கும். அப்படியான சண்டைகள்தாம் இப்போது அதிகரித்திருக்கின்றன. அதேநேரம் பலரும் மனம்விட்டுப் பேசி சமாதானம் ஆகியிருக்கிறார்கள். இப்படி நிறைய மாற்றங்களைப் பெற்றிருக்கிறோம். மிக அவசரமான சில வழக்குகளைத் தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் மற்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. என் வழக்கறிஞர் பணிகளும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால் வருமானம் நின்றுவிட்டதே என்று ஒருபோதும் நினைக்கவில்லை. என்னைப் புதுப்பித்துக்கொள்ள, புத்துணர்ச்சி ஏற்படுத்திக்கொள்ளச் சிறந்த வாய்ப்பாக லாக் டெளன் காலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். வாழ்க்கை மனநிறைவுடன் வாழ்வதற்கானதே தவிர, வெற்றிக்கானது அல்ல என்ற வாழ்வியல் உண்மையை லாக் டெளன் காலம் எனக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.