உத்தரப்பிரதேசம் ஹாடோய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவம் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் குழந்தையின் நிலை கண்டு அதிர்ந்துள்ளனர். குழந்தையின் உடலானது பெரிய கருமைப் படலத்துடன், அடர்த்தியான முடி வளர்ச்சியுடன் இருந்துள்ளது. உடலில் 60 சதவிகிதம் வரை முடி பரவியிருந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், ``இக்குழந்தை `Giant congenital melanocytic nevus’ என்ற சருமப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிறவியிலேயே உண்டாகும் இப்பிரச்னையால், அசாதாரண அடர் கறுப்பு நிறமும், சருமத்தில் கேன்சரை ஏற்படுத்தாத படலமும் ஏற்படுகிறது. இது நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகளுடன் தொடர்புடையது’’ என்று கூறியுள்ளனர்.
குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் `ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யாக்ரம் (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற அரசு அமைப்பிடம் இக்குழந்தை குறித்து தெரிவிக்கப்பட்டது. இக்குழந்தையை லக்னோவிற்கு அனுப்பி சிகிச்சை அளிக்க இவ்வமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.

``குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். கூடிய விரைவிலேயே குழந்தை நலன் பெறும்” என மருத்துவர் இக்ரம் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
பிறந்த குழந்தை உடலில் 60 சதவிகித முடி இருக்கும் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வினோதமாகப் பிறந்த குழந்தையைக் காண உள்ளூர்வாசிகள் வந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.