
நம் மூளைக்குள் இருக்கும் ஒரு பகுதி, கவனிப்பையும் சந்தோஷத்தையும் தேடும். அதற்கு எதன் மூலம் உற்சாகமும் வெகுமதியும் கிடைக்கிறதோ, அந்த விஷயத்திற்கு அடிமையாகி விடும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களை டிஜிட்டல் விரதம் கடைப்பிடிக்குமாறு சமீபத்தில் கேட்டுக்கொண்டார். டிஜிட்டல் விரதம், டிஜிட்டல் டி-டாக்ஸ், இன்டர்நெட் டி-அடிக்ஷன் எனப் பல சொல்லாடல்களை தற்போது கேட்டுவருகிறோம். போதைக்கு அடிமையானவர்களைப் போலவே கேட்ஜட்ஸ், சமூக வலைதளங்களுக்கும் இன்றைய இளைஞர்கள் பலர் அடிமையாக இருக்கிறார்கள். இதை மருத்துவர்கள் டிஜிட்டல் அடிக்ஷன் என்று கூறுகிறார்கள்.
டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டால், குழந்தைகளும் இளைஞர்களும் மனிதர்களுடன் எப்படிப் பழகுவது என்பதையே மறந்துபோய் பொறுமையிழந்து தனிமையில் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பங்களில் கணவன் மனைவிக்குள்ளேயே உரையாடல் குறைந்து இடைவெளி அதிகரிக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
டிஜிட்டல் விரதம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், அடிக்ஷன் குறித்து Neuropsychiatrist டாக்டர் கெளதம்தாஸ் உடுப்பியிடம் கேட்டேன்.

அடிக்ஷன் என்றால் என்ன?
‘‘அடிக்ஷன், நம் மனசுக்கும் மூளைக்கும் ஒரு உந்துதலை ஏற்படுத்தும். டிஜிட்டல் சாதனங்கள் பார்க்கும்போது மூளைக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன், எண்டோர்ஃபின் போன்றவை சுரக்கும். அதுபோல உற்சாகமான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்யும்போது அடிக்ஷனாக மாறுகிறது.
நம் மூளைக்குள் இருக்கும் ஒரு பகுதி, கவனிப்பையும் சந்தோஷத்தையும் தேடும். அதற்கு எதன் மூலம் உற்சாகமும் வெகுமதியும் கிடைக்கிறதோ, அந்த விஷயத்திற்கு அடிமையாகி விடும். இதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் சில எலிகளைக் கொண்டு பரிசோதனை செய்தார்கள். அவற்றின் மூளையில் இருக்கும் அந்த மகிழ்ச்சி தரும் சர்க்யூட்டைத் தூண்டும் ஒரு பட்டனைக் கொடுத்தார்கள். எலிகள் அந்த பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்தி இறக்கும் வரை அதைத் திரும்பச் செய்தன. இதுதான் அடிக்ஷன்.

அடிக்ஷன் எப்படி, எதனால் ஏற்படுகிறது?
உடற்பயிற்சி செய்யும்போது, நண்பர்களுடன் நேரம் செலவிடும்போது, விளையாடும்போது, பயணம் சென்று புதிய இடங்களைப் பார்க்கும் போதும், நம் மூளைக்குள் வெற்றிபெற்றது போல ஓர் உணர்வு தோன்றி, மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் சுரக்கும்.
கருவில் குழந்தை உருவாகும்போதே மூளைக்குள் இந்தப் பகுதியும் உருவாகி வளரும். சில குழந்தைகளுக்கு மூளைக்குள் இந்தப் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கலாம். மற்ற குழந்தைகளுக்கு எந்த விஷயங்களில் இருந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைக்கிறதோ, அந்த விஷயங்கள் இவர்களுக்கு எந்த ஒரு சந்தோஷத்தையும் வெற்றியையும் கொடுக்காது. டிஜிட்டல் கருவிகள், இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உடனடி சந்தோஷத்தைக் கொடுக்கின்றன.
பல ஆன்லைன் விளையாட்டுகளும் இதைச் சார்ந்தே உருவாக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் எளிமையாக ஆரம்பித்து, ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்றதற்கு பாயின்ட்ஸ் கொடுப்பார்கள். இந்த உடனடி வெற்றி ஹார்மோன்களைச் சுரக்கவைக்கிறது. போகப் போக விளையாட்டு கடினமாகி, எப்படியாவது இந்தச் சுற்றை வெல்ல வேண்டும் என்ற உந்துதலும் பதற்றமும் உண்டாகும். இரவு பகல் பார்க்காமல் விளையாட ஆரம்பிப்பார்கள்.
இதெல்லாம் அடிக்ஷனின் ஆரம்பக்கட்டம்தான். இதன் விரிவான வடிவம்தான், மனிதர்களுடன் பேசத் தெரியாமல், நேரிலேயே பார்க்காமல், சமூக வலைதளத்தில் நண்பர்கள் என நம்பி மோசடி கும்பலிடம் பணம் இழப்பது, சூதாட்டத்தில் ஏமாறுவது. காலப்போக்கில், சக மனிதர்களிடம் பேசும்போதும் பழகும்போதும் உற்சாகம் குறைந்து, டிஜிட்டல் கருவிகள் மட்டுமே இவர்களைச் சந்தோஷப்படுத்தும்.

தீர்வு:
ஒரு மனநல மருத்துவரால் மட்டுமே இந்தக் குழந்தைகளை அடையாளம் கண்டு, தகுந்த சிகிச்சையை அளிக்க முடியும். சில மருந்துகள் மூலம் மூளைக்குள் எழும் இந்த உந்துதலைக் குறைத்து, ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க முடியும்” என்கிறார் கௌதம்தாஸ்.
கோவையில் வசித்துவரும் துர்கேஷ் நந்தினி, தன் மூன்று குழந்தைகளையுமே பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம் - ஸ்கூலிங் செய்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுடன் பல புதிய இடங்களுக்குப் பயணம் செய்து, அதன் மூலம் கற்றலை உருவாக்குகிறார். அவர்களுக்கு விவசாயம், மினிமலிஸ்ட் வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுமுறை என அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தன் குழந்தைகளை எப்படி டிஜிட்டல் அடிக்ஷனிலிருந்து பாதுகாக்கிறார் என்று கேட்டேன்.
‘‘என் முதல் குழந்தைக்கு இப்போ ஒன்பது வயசு ஆகுது. சின்ன வயசில் அவள் சாப்பிட மறுக்கும்போதெல்லாம் டி.வி பார்க்க வைத்து சாப்பிட வைத்தேன். சில நாள்களிலேயே, டி.வி இருந்தால்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்க ஆரம்பித்தாள். அப்படியே படிப்படியாக எல்லா விஷயத்திற்கும் அழ ஆரம்பித்தாள். இந்த திடீர் மாற்றம் எனக்கு விநோதமாக இருந்தாலும், அதற்கு சரியான காரணம் தெரியவில்லை.
இதற்கு மத்தியில், எப்போதும்போல நானும் என் மகளும் புதிய இடங்களுக்குப் பயணித்தோம். அங்கே சரியான வசதிகள்கூட இருக்காது. ஆனால் அப்போதெல்லாம் என் மகள் பிடிவாதம் பிடிப்பதில்லை. மீண்டும் வீட்டுக்கு வந்ததும் அடம்பிடிப்பாள். உடனே வீட்டில் இருப்பவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லி ஒரே நாளில் டி.வி பார்ப்பதை எல்லோரும் நிறுத்தினோம். செல்போனையும் கொடுக்கவில்லை. அவளின் ஏழு வயசு வரை வீட்டில் டி.வி கிடையாது. செல்போன், லேப்டாப் எல்லாம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.
இப்போ எங்க வீட்ல பெரிய டி.வி வாங்கிட்டோம். எல்லா விஷயத்தையும் நாம நேர்ல போய் பார்த்துக் கத்துக்க முடியாது. அதனால டி.வி மூலமா நிறைய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், விவாதிக்கிறோம். எங்க குழந்தைங்க தனியா டி.வி பார்க்கமாட்டாங்க. நானோ, என் கணவரோ அவங்ககூட சேர்ந்துதான் டி.வி பார்ப்போம். டி.வி-ல பார்க்கும் விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். எந்தக் குழந்தையும் எனக்கு செல்போன் வேணும், டி.வி பார்க்கணும்னு கேட்பதில்லை. வெளிய போகணும், விளையாடணும்னுதான் சொல்லுவாங்க. ஆனா அதைச் செய்ய முடியாதபோது குழந்தைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க, நம்ம தேவைக்காகத்தான் செல்போனைக் கொடுக்கிறோம். ‘நாம பேசுறத யாரும் கேக்குறதில்ல’ங்குற எண்ணம் அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிடுது.

எங்கள் குழந்தைகள் சாப்பிடவும் தூங்கவும் மட்டும்தான் வீட்டுக்குள் வருவாங்க. மத்த நேரம் எல்லாம் தோட்டத்திலும் மாடியிலும் புழுதியிலும் விளையாடிட்டு இருப்பாங்க. இன்னொரு முக்கியமான விஷயம், குழந்தைகள் எந்தக் கட்டுப்பாடும் விதியும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும். அதாவது டென்னிஸ், கால்பந்துப் பயிற்சி எல்லாம் கட்டுப்பாட்டுடன் வெற்றி - தோல்வி என்ற இலக்கை நோக்கித் தயார்படுத்துபவை. ஆனால் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் இலக்கே இல்லாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு இளம் தாய் மகப்பேற்றுக்குப் பின் ஏற்படும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு, குழந்தையை சரியாகக் கவனிக்க முடியாமல், ஒரு நாளுக்கு 6 மணி நேரம் குழந்தையை டி.வி பார்க்க அனுமதித்திருக்கிறார். மூன்று வேளையும் சாப்பாட்டுடன் டி.வி, இது போக பொழுதுபோக்குக்காகவும் டி.வி இருந்ததால், அந்தக் குழந்தைக்கு ஆறு வயதாகியும், சரியாக தன் அம்மா அப்பாவிடம்கூடப் பேசமுடியவில்லை.
ஆனால், கோயம்புத்தூரில் எங்கள் சாச்சி (SAATCHI) அமைப்புடன் வந்து இயற்கையுடன் இங்கே வாழ்ந்து மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்த இரண்டே வாரத்தில் தன் அம்மாவுடன் நல்ல பிணைப்பை உருவாக்கி, குழந்தை பேச ஆரம்பித்தது. குழந்தை வளர்ப்பில் முதல் 10-15 வருடம் பெற்றோர்கள் குழந்தைகள் மேல் செலுத்தும் அன்பும், அவர்களின் வழிகாட்டுதலும்தான் குழந்தைகளை நல்ல மனிதர்களாக இந்தச் சமூகத்தில் உருவாக்கும். உங்களுக்கு நேரம் இல்லை என குழந்தை வளர்ப்பைத் தள்ளிப் போட முடியாது. குழந்தைகள் அவர்கள் போக்கில் வெகு சீக்கிரமே வளர்ந்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் போதிய நேரமும் கவனமும் கொடுத்து அவர்களை ரசியுங்கள்’’ என்கிறார் அவர்.