வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இரயிலில்,தன் ஒரே மகனோடு ஏறி உட்கார்ந்தாள் யாமினி.மகனுக்கு பதிமூன்று வயது,நேற்று தான் ஆரம்பித்தது.எதிர்பாராத இந்தப் பயணம்,தன் கணவன் என்ற உறவைப் பிரிந்த பிறகு,முதல்முறையாகத் தன் மகனோடு, ஒற்றைத் தாயாகத் தொடங்கியது,அந்த இரயிலில் தான்.
மகனோ, ஜன்னல் வழியாக, இயற்கையை ரசித்துக் கொண்டு, ஆர்வமாக, ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தான். அவன் கேள்விகளுக்கு,முழு மனதோடு பதில் சொல்ல முடியவில்லை என்றாலும்,
ஒப்புக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டே வந்தாள். ஆனால், மனம் முழுதும், பதினான்கு ஆண்டுகளாக இப்படி ஒரு வக்கிர புத்தி உடைய, ஆணோடு வாழ்ந்து தவறு செய்து விட்டோமே, என்ற குற்றவுணர்ச்சி அவளைக் கொன்று கொண்டிருந்தது.

எப்படி இப்படி அவனால் நடந்து கொள்ள முடிந்தது என்று தெரியவில்லை.
திருமணமான புதிதில், அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால்,நாளாக நாளாக, அவன் பார்வையில் ஏதோ களங்கம் இருப்பதை உணர்ந்து கொண்டாள். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவன் கண்களைப் பார்த்து பேசுவதில்லை. நேராகக் கழுத்துக்கு கீழே தான் அவன் பார்வை செல்லும். யாமினியும் அவனை மாற்ற, என்னென்னவோ முயற்சி செய்தாள், முடியவில்லை. இதுவே, போன வருடம் எல்லை மீறிச் சென்று விட்டது.
அவள் வீட்டில் இல்லாத நேரம்,வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, அவளுடைய பத்து வயது மகளை, வீட்டிற்குக் கூட்டி வந்திருக்கிறாள். எத்தனையோ முறை வேலைக்கு வந்த பெண்ணைத் தவறாகப் பார்த்து, அவளிடம் மாட்டிக் கொண்டுள்ளான். ஆனால் அன்று, அந்த சிறு குழந்தையிடம், எப்படி அவனால் தவறாக நடந்து கொள்ள முடிந்தது, என்று தெரியவில்லை.
அவளை ஏதோ பாலியல் சீண்டல் செய்து,அந்தக் குழந்தை,அவள் தாயிடம் இதைச் சொல்லி விட்டாள்.அந்தப் பெண்ணோ,ஆத்திரத்தில் அந்த மிருகத்தை அடித்து,உதைத்து விட்டாள். நான் என் வீட்டிற்குள் சென்ற போது கண்ட காட்சிகளே,எனக்கு எல்லாவற்றையும் உணர்த்தி விட்டன.

"அம்மா, இனிமேல் நான் உங்க வீட்டுக்கு வேலைக்கு வர மாட்டேன்,என்ன ஏதுன்னு தெரியனும்னா, உங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டுக்கோங்க,இவர்,இதுக்கும் மேல திருந்தலைன்னா,நானே நேரா போலீஸ்ட்டபிடிச்சிக் கொடுத்திருவேன் பாத்துக்கோங்க "என்று சொல்லி விட்டு, வெளியேறி விட்டாள்.
அதன் பிறகு யாமினி,அவனிடம் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மறுநாளே,டைவர்சுக்கு அப்ளை செய்து விட்டாள்.அவனும்,அந்த நிகழ்வுக்குப் பிறகு கூனிக்குறுகிப் போய் விட்டான்.
எத்தனையோ முறை,யாமினியிடம் தன்னை மன்னிக்குமாறு கெஞ்சிப் பார்த்தான். ஆனால், அவள் கண்களாலேயே அவனைச் சுட்டுப் பொசுக்கி விட்டாள்.
இப்போது,நிரந்தரமாக அவனைப் பிரிந்தும் விட்டாள்.இனி,தன் எதிர்காலம் எப்படி இருக்கும்,என்ற பயம் அவளுக்கு இருந்தாலும்,தன் மகனை அந்தக் கயவனைப் போல இல்லாமல், நல்லவனாக வளர்க்க வேண்டும்,என்ற எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது.
இப்படி அவள் எண்ண ஓட்டம் எங்கோ இருக்கையில்,எதிர் இருக்கையில்,ஓர் இளம் தாய்,கைக்குழந்தையோடு வந்து உட்கார்ந்தாள். ஏறியதில் இருந்து,அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. எப்படி தாய்ப்பால் கொடுப்பது,என்று தெரியாமல் தவித்துப் போனாள்.
"சர்வேஷ் கண்ணா,இங்க பாரு,அந்த ஆன்ட்டி குழந்தைக்கு ஃபீட் பண்ணனும் போல,நீ இங்க இருக்கதால,அவங்க சங்கடப் படுறாங்க. நீ பேசாம,அம்மா மடில படுத்து கண்ணை மூடிக்கோ,அந்த ஆன்ட்டிக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்" என்றாள்.

அவனும் "சரிம்மா" என்று படுத்துக் கொண்டான்.சிறிது நேரத்தில்,அந்தப் பெண் குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அவளும் தூங்கி விட்டாள். "சர்வேஷ்,இப்போ அம்மா ஒன்னு சொல்றேன்,பொறுமையாக் கேட்கனும் சரியா?" என்றாள்,யாமினி. "ம்,சொல்லுங்கம்மா"என்றான்.
"சர்வேஷ்,பசு அதோட கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கிறதைப் பார்த்துருக்கியா?" என்றாள்.
"ம்,பாத்துருக்கேன்மா" என்றான்.
"அது போலத் தான் டா லேடீஸ்க்கும், பிரெஸ்ட் இருக்கு.அதனோட வேலையே, குழந்தைக்குப் பால் தர்றது தான்.எல்லாக் குழந்தையும்,அவங்க அம்மா கிட்ட,அங்க இருந்து தான் பால் குடிச்சு வளர்றாங்க.
அதுவும் ஓர் உடல் உறுப்பு அவ்வளவு தான். அதனால, பெண்களோட மேலாடை விலகினால், அங்கேயே பார்க்கக் கூடாது, அது ரொம்ப தப்பு. உன் டிரெஸ் விலகினா உன்னை யாராவது, குறுகுறுன்னு பார்த்தா,உனக்கு எப்படி இருக்கும்?"என்று கேட்டாள்.
"அம்மா,ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்" என்றான்."அப்படித் தானே,அப்போ பெண்களுக்கும் இருக்கும்" என்றாள்.
"ஆமாம் மா"என்றான்.
"அப்போ ,உனக்கு இன்னிக்கு நான் ஒன்னு சொல்றேன், கேட்டுக்கோ ,எந்தப் பொண்ணைப் பாத்தாலும், அவ கண்ணைப் பாத்து தான், நீ என்னிக்குமே பேசனும். அவங்க போட்டிருக்க டிரெஸ்சையோ, அவங்க கழுத்துக்கு கீழேயோ,நீ பார்க்க கூடாது அது ரொம்ப ரொம்ப தப்பான செயல், அப்படி நீ எப்பவுமே செய்யக் கூடாது,சரியா?என்றாள்.
"சரிம்மா"என்றான்,ஏதோ புரிந்தது போல. கொஞ்ச நேரத்தில், அவள் உறக்கம் வராமல், புரண்டு கொண்டிருக்கையில், சர்வேஷ் மேல் பர்த்தில் இருந்து எழுந்து வந்து,"அம்மா அந்த அங்கிள்,அந்த ஆன்ட்டியோட சாரி விலகியிருக்குல்ல, அங்கேயே பாத்துட்டு இருக்காரும்மா, நா வேணும்னா, அவங்க மேல இந்த ஷாலைப் போட்டு விடட்டுமா" என்று, சத்தமில்லாமல், மெல்லக் கேட்டான்.
"வெரிகுட், போ,முதல்ல அதைச் செய். அப்போவாது, இது மாதிரி அறிவில்லாம வளந்த சில ஜென்மங்கள் திருந்துதான்னு பார்க்கலாம்", என்று தன் மகனைப் பெருமையோடு பார்த்தாள். அவன் மிகவும் அழகாக, அவன் கொண்டு வந்திருந்த ஷாலை, அந்தப் பெண் மீது போர்த்தி விட்டான். சர்வேஷ் அப்படிச் செய்த அடுத்த நொடி, அந்த எதிர் இருக்கைக் காரன் முகத்தில் செருப்பால் அடித்து போல இருந்திருக்கும் போல. பட்டென்று,வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
யாமினிக்கு, முதன்முறையாக ஒற்றைத் தாயாகத் தான் எதையோ சாதித்து விட்டதைப் போல்,பெருமையாக இருந்தது. உங்களுக்கும் தானே!
நன்றி..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.