சினிமா, ஊடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓ.டி.டி மற்றும் ஊதியம் வழங்கப்படும் எந்தவொரு ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட கலைத்துறைகளில் பணிபுரியும் குழந்தை நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் NCPCR புதிய சட்ட வரையறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக பெரும்பாலான நாடுகள் குழந்தை நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு சட்ட விதிமுறைகளை வரையறுத்துள்ளன. வெளிநாடுகளில் குழந்தை நட்சத்திரங்கள் 4 - 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று சட்டங்களை வரையறுத்துள்ளன. ஆனால், இந்தியாவில் 12-16 மணி நேரம் வரையில் கூட குழந்தை நட்சத்திரங்களை வேலை வாங்குவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் இதை முறைப்படுத்தவும், குழந்தை நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 'NCPCR' புதிய சட்ட வரையறைகளை அறிவித்துள்ளது.

அதில் முக்கியமான சில கட்டுப்பாடுகளும் வலியுறுத்தப்படுகின்றன. அவை இங்கே ஒரு பார்வை...
* ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை நடிக்கவோ அல்லது ஊதியம் வழங்கப்படும் ஏதேனும் கலை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும்போதோ, அந்தக் குழந்தைகளின் பெற்றோரோ அல்லது அதிகாரபூர்வமான காப்பாளர்களோ அவர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.
* குழந்தை நட்சத்திரங்களின் இருபது சதவிகித சம்பளம் சம்பந்தப்பட்ட அக்குழந்தைகளின் நிலையான வைப்புத்தொகையாக (fixed deposit) செலுத்தப்பட வேண்டும்.
* குழந்தையை நடிக்க வைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

*தொடர்ச்சியாக 27 நாள்கள் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது. கல்வி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லுவதில் எந்தவித சிக்கல்களும் இருக்கக் கூடாது. முக்கியமாக, குழந்தைகளின் கல்வி உறுதிசெய்யப்பட வேண்டும். கல்வியில் இடை நிற்றல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரே நாளில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை வேலை செய்ய வைக்கக் கூடாது.
* குழந்தைகளுக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவுகளும் ஏற்படக்கூடாது. அதோடு உழைப்புச் சுரண்டல்கள் போன்ற எந்தவித தொந்தரவுகளும் நேர்ந்துவிடாமல் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பல புதிய விதிமுறைகள் அந்த NCPCR அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.