
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே இந்தப் பொங்கலை வைத்து விடுகிறார்கள். பொங்கி வந்தவுடன் வாழையிலையில் பொங்கலுடன் பொரி, கடலை, மிட்டாய், பிஸ்கட், ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றையும் சேர்த்துப் படையிலிடுகிறார்கள்
‘சித்திரை அப்பன் தெருவிலே’ என்கிறது பழமொழி. சித்திரையில் பிறக்கும் குழந்தைகளால் தெருவில் நிறுத்தப் படுவார்களாம் அப்பாக்கள். இதற்கு பயந்து சித்திரையில் பிறக்கும் குழந்தைகளை தத்துக் கொடுக்கும் வழக்கமும் சில சமூகத்தினரிடம் இருக்கிறது. ‘ஆடியில கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ளை வரும். ஆகாது... ஆகாது மச்சானே” என திரைப்பட பாடல்கள்கூட சித்திரையில் குழந்தைகள் பிறப்பது ஆகாது என்கின்றன. ஆடி மாதத்தில் புதுமண ஜோடியைப் பிரித்து வைப்பதன் பின்னணியிலும் இதுவே இருக்கிறது.
சித்திரையில் குழந்தை பிறப்பதென்பது ஆகாததாகப் பார்க்கப்படுவது ஏன்?
பொதுவாக தமிழகத்தில் சித்திரை மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். வெயில் உக்கிரமாக உள்ள சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதன் தாக்கத்தால் உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டுதான் அந்தக் காலத்தில் சித்திரையில் குழந்தைகள் பிறந்தால் ஆகாது என்று கூறியிருக்கிறார்கள். இது காலப்போக்கில் மருவி சித்திரையில் குழந்தைகள் பிறந்தால் குடும்பத் துக்கே ஆகாது என்று மாறிவிட்டது.
சித்திரையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளதை அறிவீர்களா?
கோவை, அவிநாசி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதி களில் சித்திரையில் பிறந்த குழந்தைகளுக்காக பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். இதற்கு ‘சித்திரை புத்திர பொங்கல்’ என்று பெயர்.

காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே இந்தப் பொங்கலை வைத்து விடுகிறார்கள். பொங்கி வந்தவுடன் வாழையிலையில் பொங்கலுடன் பொரி, கடலை, மிட்டாய், பிஸ்கட், ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றையும் சேர்த்துப் படையிலிடுகிறார்கள். இவற்றுடன் ஒரு படியில் அரிசியை நிரப்பி, அதில் மயிர்கோதியைக் குத்தி வைப்பர். ‘சித்திர புத்திர நாராயண நமஹ’ என்று பனை ஓலையில் எழுதி இந்த மயிர்கோதியில் சுற்றி வைப்பர். படையலுக்குப் பிறகு, பொங்கல் அந்தக் குழந்தைக்கே வழங்கப்படும்.
பெரும்பாலும் சித்திர புத்திர பொங்கலை, சித்திரை மாதத்தில் வரும் குழந்தையின் பிறந்தநாள் அன்றுதான் கொண்டாடுகிறார்கள். ஆனால் சிலர் அவர்களது வசதிக் கேற்ப சித்திரையில் ஏதாவது ஒரு நாளில் கொண்டாடு கிறார்கள். அவிநாசி வட்டாரத்தில் இருப்பவர்களோ அவிநாசி தேரோட்டம் அன்று இந்நிகழ்வைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பொங்கலைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி இருபாலினத்தவருக்குமே வைக்கப்படுகிறது. அவர்களது கடைசிகாலம் வரை சித்திர புத்திர பொங்கல் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.