கட்டுரைகள்
Published:Updated:

`பற்றி எரியும் பிரேசில்... பற்றவைத்த போல்சனாரோ’

போல்சனாரோ
பிரீமியம் ஸ்டோரி
News
போல்சனாரோ

போல்சனாரோவின் தோல்வியைத் தொடர்ந்துதான், பிரேசில் நாட்டில் மிகப்பெரிய வன்முறை வெடித்திருக்கிறது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அரசுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறை வெறியாட்டம், உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பிரேசிலின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், அதிபர் மாளிகைக்குள் புகுந்து முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் அந்த நாட்டின் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கி யிருக்கிறது.

பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தல், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சனாரோ, தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உட்பட 11 பேர் போட்டி யில் இருந்தனர். ஆனால், வெற்றி பெறுவதற்கான 50 சதவிகித வாக்குகளை யாரும் பெறவில்லை. ஆகவே, முதல் இரண்டு இடங்களைப் பிடித்த போல்சனாரோ, லூலா ஆகிய இருவருக்குமிடையே அக்டோபர் 30-ம் தேதி இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. அதில், 50.9% வாக்குகளைப் பெற்று, போல்சனாரோவைத் தோற்கடித்தார் லூலா.

`பற்றி எரியும் பிரேசில்... பற்றவைத்த போல்சனாரோ’

போல்சனாரோவின் தோல்வியைத் தொடர்ந்துதான், பிரேசில் நாட்டில் மிகப்பெரிய வன்முறை வெடித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, ‘தேர்தலில் நான் தேர்வுசெய்யப்படவில்லை என்றால், அது மோசடியால் மட்டுமே நடந்ததாக இருக்கும். வன்முறை வெடிக்கும்’ என போல்சனாரோ கூறிவந்தார். அவர் சொன்னதுபோலவே, பிரேசிலில் வன்முறை வெடித்திருக்கிறது

`பற்றி எரியும் பிரேசில்... பற்றவைத்த போல்சனாரோ’

இதற்கிடையே, ஜனவரி 1-ம் தேதி பிரேசில் நாட்டின் அதிபராக லூலா பதவியேற்றார். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, பிரேசிலிலிருந்து வெளியேறி, ஃபுளோரிடாவுக்குச் சென்றுவிட்டார் போல்சனாரோ. அவர் பிரேசிலைவிட்டுக் கிளம்பியவுடன் போராட்டத்தில் குதித்த போல்சனாரோவின் ஆதரவாளர்கள், ``அதிபர் பதவியை லூலா ராஜினாமா செய்ய வேண்டும். லூலா ஓர் இடதுசாரித் தலைவர் என்பதால், தென் அமெரிக்க நாடுகளான கியூபா, வெனிசூலா போல பிரேசிலிலும் இடதுசாரி ஆட்சியை நடத்துவார்’’ எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரேசிலின் தேசியக்கொடியில் இருக்கும் மஞ்சள், பச்சை நிறம்கொண்ட உடைகளை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், கடந்த ஜனவரி 8-ம் தேதி உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர் மாளிகை ஆகியவற்றுக்குள் திடீரெனப் புகுந்தனர். அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள், கண்ணாடிகள், அலங்கார ஓவியங்கள், கலைப்பொருள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி, பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த பல பத்தாண்டுகளில் இப்படியொரு மோசமான காட்சியை பிரேசில் கண்டதில்லை. ``வெறிபிடித்த பாசிஸ்ட்டுகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இது’’ என்று அதிபர் லூலா குற்றம்சாட்டியிருக்கிறார். முன்னாள் அதிபர் போல்சனாரோவோ, இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்திருக்கிறார்.

`பற்றி எரியும் பிரேசில்... பற்றவைத்த போல்சனாரோ’

2018-ம் ஆண்டு பிரேசில் அதிபராக போல்சனாரோ பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில், கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியது, 13,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது போன்ற பல பிரச்னைகள் எழுந்தன. அதற்கெதிராக அப்போதே ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடந்தன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் தேர்தல் பிரசாரத்தில் எடுத்துவைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தார் லூலா.

ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டபோதிலும், அடுத்தகட்டப் போராட்டத்துக்கு போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள். பாதுகாப்புக்காக நாடு முழுவதும் கலவரத் தடுப்பு போலீஸாரை லூலா அரசு நிறுத்தியிருக்கிறது. பிரேசிலின் இன்றைய நிலை குறித்து இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். ஃபுளோரிடாவில் இருக்கும் போல்சனரோ பிரேசிலுக்குத் திரும்பிய பிறகு இந்தப் போராட்டம் தனியுமா அல்லது தீவிரமடையுமா என்பது தெரியவரும்!