
மகளிர் மட்டும்
``வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே வைத்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெரும்பாலான நிறுவனங்கள் உருவாக்கித்தருவதில்லை. இதற்கான தீர்வையே ஒரு நிறுவனமாக உருவாக்கியிருக்கிறேன்'' என்று தொடங்குகிறார் சென்னையைச் சேர்ந்த `வி ஸ்கோயர்’ நிறுவனத்தின் உரிமையாளர் வந்தனா ராமநாதன்.

``நான் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்குக் குழந்தை பிறந்திருந்த நேரம், வேலையைத் தொடர முடியவில்லை. நான்கு வருஷம் கழித்து வேலைக்குச் சேரும்போது நிறைய தடுமாற்றங்கள் இருந்துச்சு. ஒருபக்கம் குழந்தையோட நினைப்பு, மறுபக்கம் அலுவலகம் கொடுக்கும் டார்கெட்டுகள். இப்படிக் கூடுதல் மனஅழுத்தம் ஏற்பட்டுச்சு. என் தோழிகளிடம் பேசியபோது, தாய்மை அடைந்த எல்லா பெண்களுக்குமே இதே பிரச்னை இருப்பது தெரிந்தது. அதனால் தோழிகளுடன் சேர்ந்து, வீட்டில் இருந்தே பணிபுரியும் வகையில் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தைத் தொடங்கினேன். நாங்க 30 பேர் அந்த குரூப்பில் இருந்தோம். வீட்டில் இருந்தே மற்ற நிறுவனங்களுக்குத் தேவையான விளம்பரங்களையும் புரொமோஷன்களையும் உருவாக்கித்தரும் வேலைகளைக் கையில் எடுத்தோம். இந்திய அளவில் 35 நிறுவனங்களுக்கு புரொமோஷன்கள் செய்தோம். நல்ல வருமானம் கிடைச்சது. அடுத்தடுத்த வளர்ச்சி பெற்றபோது எங்களுக்குன்னு ஓர் அலுவலகம் தேவைப்பட்டுச்சு. ஆனால், குழந்தைகளை விட்டுவிட்டு மீண்டும் ஆபீஸ் செட்டப்பில் வேலை செய்ய விரும்பாமல் நிறைய பேர் எங்க குரூப்பில் இருந்து விலகிட்டாங்க. அப்போ தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ஒரு வேலையிடத்தை உருவாக்கலாம்னு ஓர் ஐடியா மனசுக்குள் வந்துச்சு. என் குடும்பத்தில் இந்த ஐடியாவை சொன்னேன். எல்லோரும் புதுசா இருக்குன்னு சொன்னாங்க. அதாவது `வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் பணிபுரியும் பெண்கள், எங்கள் அலுவலகத்தின் இடத்தை சில மணி நேர வாடகைக்கோ, மாத சந்தா கட்டியோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

நெருங்கிய தோழியான ஜீனேலும் நானும் சேர்ந்து திட்டமிட்டோம். சில மாதங்களிலே எங்கள் ஐடியாவை நடைமுறைக்கும் கொண்டு வந்துட்டோம்” என்கிற வந்தனாவை தொடர்ந்து பேசுகிறார் ஜீனேல்.
``இந்தப் பணியிடத்தில் பாலூட்டும் அறை, ஓய்வெடுக்கும் அறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் டேகேர் என ஓர் அம்மாவுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் உருவாக்கினோம். எங்கள் முயற்சிக்கு, தோழிகளிடம் இருந்தே வரவேற்பு கிடைச்சது. ஒரு மணி நேரத்துக்கு அவர்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப கட்டணம். பயனாளர்களே என் நிறுவனத்துக்குத் தேவையான விளம்பரத்தைச் செய்ய, நிறைய பெண்கள் எங்கள் அலுவலகத்தைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. பிறகு மீட்டிங் அறை, பயிற்சி வகுப்புகள் என ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்தினோம். ஆரம்பத்தில் சில ஆயிரங்கள் மட்டுமே வருமானம் கிடைச்ச எங்கள் நிறுவனத்தின் இப்போதைய மாத வருவாய் ஒரு கோடி ரூபாய்.
தாய்மை அடைந்த எல்லா பெண்களுக்குமே இதே பிரச்னை இருப்பது தெரிந்தது.
புதிதாக ஒரு பிசினஸை எப்படித் தொடங்குவது, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எப்படிக் கொண்டுபோவது, ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கான திறன் பயிற்சி வகுப்புகள் எனப் பெண்களுக்கு அவர்களை வளர்த்துக்கொள்ளத் தேவையான எல்லாப் பயிற்சிகளையும் வழங்குகிறோம். சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் டைஅப் செய்து வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்க ஆரம்பிச்சோம்'' என்கிறார் ஜீனேல்.

``இதுவரை எங்கள் நிறுவனத்தின் மூலமாக 50,000 பெண்கள் பயன் அடைஞ்சிருக்காங்க. இத்தனை பெண்களின் வெற்றியைத்தான் எங்களின் அடையாளமாகப் பார்க்கிறோம்” என்று விடைபெறுகிறார்கள் தோழிகள்.