
கற்பனையும் கைத்திறனும்
கொரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மாலை வேளைகளில் வானில் பறக்கும் பட்டமும், அதை உற்சாகத்துடன் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சந்தோஷமும் அதிகரித்திருக்கிறது. உங்கள் பட்டமும் வானில் உயரமாகப் பறக்க அவற்றை வீட்டிலேயே செய்யக் கற்றுத்தருகிறார் ‘யூனிக் ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்’டின் உரிமையாளர் கார்த்தீஸ்வரி.

தேவையானவை
கிஃப்ட் பேப்பர், நூல், ஃபெவிக் கால், செல்லோ டேப், குச்சிகள் - 3, கத்தரிக்கோல்.
ஸ்டெப் - 1:
கிஃப்ட் பேப்பரைப் படத்தில் காட்டியுள்ளபடி மடித்து, சதுர வடிவில் வெட்டவும்.

ஸ்டெப் - 2
பட்டத்தின் வால் மற்றும் இறகுப் பகுதிக்கு கிஃப்ட் பேப்பரை வெட்டவும். அதேபோன்று கண், மூக்கு போன்ற பாகங்களை வெட்டவும்.
ஸ்டெப் - 3
சதுரமாக வெட்டிய கிஃப்ட் பேப்பரைப் பின்புறமாகத் திருப்பி (வெள்ளைப் பகுதியில்) இடது மூலையில் மேலிருந்து கீழாக ஃபெவிகால் தடவி, இரண்டு குச்சிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒட்டவும்.

ஸ்டெப்- 4
இடது மூலையின் கீழ் பகுதியி லிருந்து வலது பகுதியின் மேல் பகுதி வரை குச்சியை லேசாக வளைத்து, படத்தில் காட்டியுள்ளது போன்று மற்றொரு குச்சியை ஒட்டவும்.
ஸ்டெப் - 5
கிஃப்ட் பேப்பரின் கிளிட்டர் பகுதியில் கண், மூக்கு, போன்ற வற்றை ஒட்டவும்.

ஸ்டெப் - 6
நான்கு மூலைகளிலும் இறகு, வால் போன்று ஒட்டினால் பட்டம் தயார்.
ஸ்டெப் - 7
பட்டம் பறக்க விடுவதில் முறையாக நூல் கட்டுவதுதான் மிக முக்கியம். பட்டத்தைக் குச்சி இருக்கும் புறமாக திருப்பிக்கொள்ளவும். வளைத்து ஒட்டப்பட்ட குச்சிக்குப் பக்கத்தில் மேலும் கீழுமாக (எதிரெதிராக) இரண்டு துளையிட்டுக்கொள்ளவும். துளையிட்ட இடத்திலிருந்து கைகளால் ஒரு சாண் அளவுக்கு அளந்து குச்சிக்கு அருகில், படத்தில் காட்டியுள்ளபடி இரு துளைகள் இட்டுக்கொள்ளவும்.

ஸ்டெப் - 8
15 செ.மீ அளவுக்கு இரண்டு நூல்களை வெட்டி வைத்துக் கொள்ளவும். பட்டத்தைக் குச்சிகள் இல்லாத பகுதிக்குத் திருப்பி வளைவுப் பகுதியின் அருகில் இருக்கும் துளைகளின் வழியாக நூலின் இரண்டு பகுதிகளையும் உள்ளே விட்டு, குச்சிகள் இருக்கும் பகுதி வழியாக எடுத்து முடிச்சிட்டுக் கொள்ளவும். அதேபோல இன்னொரு 15 செ.மீ நூலை எடுத்து வளைவுப் பகுதியிலிருந்து ஒரு சாண் அளவில் துளையிட்டுள்ள இடத்திலும் நூலை இறுக்கமாக முடிச்சுட்டுக் கொள்ளவும்.
ஸ்டெப் - 9
இரண்டு முடிச்சுகளிலும் மீதம் இருக்கும் இருக்கும் நூலை ஒரு சாண் அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு இரண்டு நூலையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவின் முடிச்சுப் போட்டுக்கொள்ளவும். இப்போது ஒரு நீளமான நூலை எடுத்து, நடுப்பகுதியில் சேர்த்துக் கட்டி பட்டத்தைப் பறக்க விடுங்கள்.