Published:Updated:

தீபக் சஹார் செய்ததை நீங்கள் செய்துவிடாதீர்கள்... மற்றவர் செய்வதையும் கொண்டாடாதீர்கள்?!

ஒரு உறவின் முக்கிய சாரம்சமே மரியாதையும் சுதந்திரமும்தான். ஆனால், இந்த ப்ரபோசல்களில் அவர்கள் யோசிப்பதற்கான சுதந்திரம் கூடக் கொடுக்கப்படுவதில்லையே. சொல்லப்போனால், இப்படியான ப்ரபோசல்கள், 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் வருவதுபோல், ஒற்றை விரலை நீட்டி அதைத் தொடச் சொல்லும் கதைதான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர் தீபக் சஹார் நேற்று செம வைரல். அவரோடு அவர் காதலும். பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டி முடிந்ததும், தன் காதலிக்கு சஹார் ப்ரபோஸ் செய்ய, அவர் அதை ஏற்றுக்கொண்டார். அந்த ப்ரபோசல் வீடியோ இணையத்தில் வாழ்த்துகள் சுமந்து வலம் வந்துகொண்டிருகிறது. பலர் ‘ச்சோ கியூட்’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சந்தோஷமான தருணத்தைக் கொண்டாடுவது சரிதான். ஆனால், இது?

Stalking போன்ற விஷயங்கள் தவறானது என்பதை அறிவுறுத்தும் நாம், இதுவும் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மோதிரத்தை ஏந்தி மண்டியிட்டிருப்பவர், எதிர்ப்புறம் உள்ளவர்களை எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும், அது ஏற்படுத்தும் அழுத்தத்தை உணர்ந்துகொள்வதும் அவசியம். இதைக் கொண்டாடுவது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்ளவேண்டும். இது தீபக் சஹார் ப்ரபோசலைப் பற்றியது அல்ல. இப்படியான Grand Proposals பற்றியது.

A proposal during an India vs Australia match
A proposal during an India vs Australia match

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, மிகப்பெரிய அரங்குகளில் ப்ரபோசல் செய்வது சமீப காலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மட்டும் 5 ப்ரபோபசல்கள் நடந்திருக்கின்றன. வீரர்கள் தவிர்த்து, விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களும் இந்தப் போக்கைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம், இந்திய ரசிகர் ஒருவர் தன் ஆஸ்திரேலிய காதலிக்குப் ப்ரபோஸ் செய்ய, அந்த சர்வதேசக் காதலும் இதுபோல் கொண்டாடப்பட்டது. இது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்திலும் Yes என்பது பதிலாக வந்துவிட்டது. ஆனால், அதுதான் அவர்கள் சொல்ல நினைத்த பதிலாக இருக்குமா? காதலிப்பவர்கள் எல்லோரும் திருமணத்துக்குத் தயாராக இருந்துவிடுவதில்லை. தயாராக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. காதிலிப்பதே திருமணத்துக்காகத்தானே என்று கேட்டுவிடாதீர்கள். காதலுக்கும் திருமணத்துக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. ஒரு தாலியோ, மோதிரமோ, கையெழுத்தோ… அது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. கழுத்தையும், விரல்களையும் கட்டுப்பாடுகளால் இறுக்கிவிடக்கூடியது. அதனால், காதலிப்பவர்களெல்லாம் திருமணத்துக்குத் தயாராக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதனால், சிலர் NO சொல்லலாம்.

முழுமையாக தங்கள் காதலரைப் புரிந்துகொள்ளாமல் இருந்தாலோ, அவர்களின் பர்சனல் சூழ்நிலை அவர்களுக்குப் பாதகமாக இருந்தாலோ, அப்போது அவர்கள் திருமணத்துக்குத் தயாராக இல்லாமல் இருக்கலாம். அதனால், இவர்களும் NO சொல்ல நினைக்கலாம். ஆனால், இவர்களுக்கெல்லாம் இங்கே No சொல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை!

தீபக் சஹார் வீடியோவைப் பாருங்கள். அந்த முக்கியமான இருவரையும் விட்டுவிட்டு, சுற்றியிருக்கும் மற்றவர்களைக் கவனியுங்கள். சஹார் மோதிரத்தை ஏந்தியவுடனேயே கை தட்டத் தொடங்கிவிடுவார்கள். அந்தப் பெண் தலையாட்டும் வரை கூட யாரும் காத்திருக்கவில்லை. மோதிரம் நீட்டப்பட்டவுடன் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிட்டனர். இதுதான் மிகப்பெரிய பிரச்னை. ஒருவேளை அந்தப் பெண் ‘Yes’ சொல்லத் தயாராகாமல் இருந்திருந்தால்?!

அந்தப் பெண்ணுக்கு யோசிப்பதற்கு எந்த அளவுக்கு இடம் தரப்பட்டிருக்கிறது! அப்படியொரு சூழ்நிலையில் அவரால் No சொல்ல முடியுமா? நினைத்துப் பாருங்கள். அத்தனை பேர் மத்தியில், அதை மறுத்தால் antagonist ஆக்கப்படுவாள். 'யோசித்து சொல்கிறேன்' என்றும்கூட சொல்ல முடியாது. இதை Cute Romantic gesture என்று நினைக்கும் சுற்றியிருப்பவர்கள் அந்தப் பெண்ணின் பதில் வருவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு மத்தியில் ப்ரபோஸ் செய்பவரைக் காயப்படுத்தவும் முடியாது. ஏற்றுக்கொள்வதை விட அவருக்கு அங்கு என்ன ஆப்ஷன் இருக்கிறது?

''நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மனிதர்கள் மறந்துவிடுவார்கள். என்ன செய்தீர்கள் என்பதை மறந்துவிடுவார்கள். ஆனால், அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதை மட்டும் எப்போதும் மறக்கமாட்டார்கள்” என்றார் மாயா ஏஞ்சலூ. மனித உளவியலின் உண்மை அதுதான். அதனாலேயே ஒரு சிலர், எதற்காக ஒருவரைக் காயப்படுத்தவேண்டும் என்று மனதில் பட்டதைச் சொல்லவே மாட்டார்கள். இந்த கிராண்ட் ப்ரபோசல்கள் ஒருவரை நிற்கவைக்கும் இடமும் அதுதான். அத்தனை பேர் முன்னிலையில் No சொல்லி காயப்படுத்திவிடக்கூடாது என்ற அழுத்தம் ஏற்பட்டுவிடும். நம்மால் சொல்லிவிட முடியுமா?

உறவுகளுக்குள் கேட்கப்படும் கேள்விகளில் 'NO' சொல்வதற்கான வெளி இருக்கவேண்டும். பதில் சொல்லும் இடத்தில் இருப்பது எந்தப் பாலினத்தவராக இருந்தாலும், அவர்கள் சுதந்திரமாக பதில் சொல்ல அனுமதிக்கவேண்டும். ஒரு உறவின் முக்கிய சாரம்சமே மரியாதையும் சுதந்திரமும் தான். ஆனால், இந்த ப்ரபோசல்களில் அவர்கள் யோசிப்பதற்கான சுதந்திரம் கூடக் கொடுக்கப்படுவதில்லையே. சொல்லப்போனால், இப்படியான ப்ரபோசல்கள், 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் வருவதுபோல், ஒற்றை விரலை நீட்டி அதைத் தொடச் சொல்லும் கதைதான். இந்த ப்ரபோசல்களுக்கும், பெற்றோர்கள் கேட்கும் ‘பையனை/பொண்ணை பிடிச்சிருக்கா’ என்ற கேள்விகளுக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது.

இப்படியான ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைக்கும்போது, 'ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிந்துதான் புரபோஸ் செய்திருப்பார்கள்’ என்று வாதம் செய்வார்கள். அது சரி இல்லை. எல்லோருக்கும் அப்படி இருக்காது என்பதுதான் பிரச்னை. Pop Culture உதாரணத்தோடே இதைப் பற்றிப் பேசுவோமே.

தீபக் சஹார் செய்ததை நீங்கள் செய்துவிடாதீர்கள்... மற்றவர் செய்வதையும் கொண்டாடாதீர்கள்?!

'Sex Education' மூன்றாவது சீசனில் ஓடிஸ் - ரூபி உறவுக்குள் ஏற்பட்டது இந்தச் சிக்கல்தானே. ரூபிக்கு தான் boy friend-ஆக இருக்கவேண்டும் என்று நினைத்தான் ஓடிஸ். ஆனால், அவள் ப்ரபோஸ் செய்யும்போது தனக்குள் காதல் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறினான். ரூபி அதனால் காயமடைந்தாள். ஆனால், நிச்சயம் அதில் தவறில்லை. பாய் ஃபிரண்ட் - காதலன், இந்த இரண்டு கட்டங்களுக்கு இடையிலேயே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இரண்டும் ஒரே விஷயமல்ல என்பதை உணர்ந்து உடனடியாக மறுத்தான் ஓடிஸ். அதன்பின் அதைப் பற்றி அவன் பேசியபோது சொன்ன விஷயம்: “I have to be honest with you” என்பது. இதுதான் இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது. ஒருவேளை ஒட்டுமொத்த பள்ளிக்கும் முன்னால் ரூபி ப்ரபோஸ் செய்திருந்தால் ஓட்டிஸால் நேர்மையாக அதை மறுத்திருக்க முடியுமா!

‘நான் Netflix பார்க்கும் ஆள் இல்லை, தமிழ் சினிமா பார்க்கும் ஆள்’ என்று சொல்பவரா நீங்கள், 'தீயா வெலை செய்யணும் குமாரு' படம் ஞாபகம் இருக்கிறதா. அதில் கணேஷிடம் ஹன்ஷிகா பிரேக் அப் செய்யும்போது சொன்ன விஷயம்: “நீ ப்ரபோஸ் பண்ணும்போது நான் ஓகே சொல்லிருக்கக்கூடாது. பல பேரு முன்னால நீ டிரமாட்டிக்கா ப்ரபோஸ் பண்ணதால, I got carried away. அதான் நான் பண்ண பெரிய தப்பு. இப்போ புரியுது நான் உன்னை உண்மையா லவ் பண்ணலைனு. I’m really sorry”.

இதுதான் இப்படியான ப்ரபோசல்களில் இருக்கும் பிரச்னை. அது யோசிக்க வைக்காது. யோசித்தாலும், உண்மையைச் சொல்லிவிட முடியாது. எங்கே காயப்படுத்திவிடுவோமோ, நாம் கெட்டவராகி விடுவோமோ என்று பயத்தை ஏற்படுத்தும். No என்ற வார்த்தை குற்றமாகத் தோன்றும். ஹன்சிகாவைச் சுற்றியிருந்தவர்கள் கூட, ‘Yes சொல்லு, Yes சொல்லு’ என்று வற்புறுத்துவார்கள். ஆனால், சுற்றியிருப்பவர்கள் அப்படிச் சொல்லித்தான் நெருக்கடி ஏற்படுத்தவேண்டும் இல்லை. சஹார் வீடியோவில் இருப்பதுபோல் கைதட்டுவதே அழுத்தம்தான். சொல்லப்போனால், சுற்றி சிலர் இருப்பதே அழுத்தம்தான்.

செக்ஸ் - காதலுக்கும், காதல் திருமணத்துக்கும் முதல் படி இல்லை. இல்வாழ்க்கைக்கு வீசப்படும் ட்ரயல்ஸ் இல்லை காதல். டெஸ்ட் மேட்ச்சின் முதல் இன்னிங்ஸும் இல்லை அது. இரண்டும் வேறு வேறு ஆட்டம். அந்த இரண்டு ஆட்டத்துக்கும் தனித்தனி டாஸ் அவசியம். அந்த டாஸ் போடும்போதும், Heads or Tails என்று இரண்டு வாய்ப்புகளையும் இன்னொருவர் முன்பு நாம் வைக்கவேண்டும். அவர்கள் கேட்பதற்கும், அதை வெற்றி பெற்றால் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைத் தேர்வு செய்வதற்கும் ஒரு வெளியை அமைத்துக்கொடுக்கவேண்டும். அதுதான் ஒரு உறவு கொடுக்கும் மரியாதை. அதுதான், அந்த உறவுக்கும் மரியாதை.

இந்த மாதிரியான கிராண்ட் ப்ரபோசல்கள், ஏற்கெனவே இருவரும் பேசி திட்டமிட்டும்கூட செய்யப்படுகின்றன. அதற்கு அர்த்தமே இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதைப் பார்ப்பவர்களுக்கு அதன் சிக்கல்கள் புரிவதில்லை என்பதுதான் பிரச்னை. உறவுகளுக்குள் கேட்கப்படும் கேள்விகளை, நமக்கான பதிலை எதிர்பார்த்துத்தான் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதுதான் அவர்கள் வாயிலிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் சிந்திப்பதற்கோ, சிந்துக்கும் பதிலைச் சொல்வதற்கோ ஒரு வெளி ஏற்படுத்திக் கொடுக்க மறுக்கிறோம். இது எந்த உறவையும் சிதைத்துவிடும். இவையெல்லாம், நமக்கே புரியாமல்தான் செய்துகொண்டிருக்கிறோம். இந்த ப்ரபோசல்களைக் கொண்டாடும்வரை நமக்கு அது புரியப்போவதில்லை! Please don’t try this.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு