Published:Updated:

``நான் அழுதேன்... நீங்களும் அழுங்கள் ஜென்டில்மென்!" - மனம் திறந்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் ( facebook )

எதையும் யோசிக்காமல் இந்த உலகத்தின் முன்பு உடைந்து அழுதேன். அப்போது உண்மையில் அதிசயக்கத்தக்க வகையில் ஓர் அமைதியை உணர்ந்தேன்.

`எந்த இடத்தில் சொல்லுக்கும் பொருளுக்கும் எல்லை முடிகிறதோ, அங்கு தொடங்குவதுதான் உணர்வு'.

இதை எவ்வளவு பெரிய அலங்கார வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. சந்தோஷம், துக்கம், பயம் என எந்த உணர்வும் எல்லை கடந்து போய் வாயடைத்து நிற்கும்போது, நம் கண்களில் வழியும் கண்ணீரே இதற்கு சாட்சி. உணர்வு என்றதும் நம்மில் பலருக்கும் சோகமான பொழுதுகளும் கண்ணீரும்தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் கண்ணீர், சில நேரங்களில் வலியாகவும், சில நேரங்களில் நம் வலிக்கு மருந்தாகவும் இருக்கும்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
facebook

அழுவதில் இருக்கும் சுகமும் போதையும் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே பரிச்சயமானது. துக்கம் நிறைந்த இரவுகளில் கண்ணீரால் தலையணையை நனைக்காத பெண்களே இருக்க மாட்டார்கள். அழுகையின் ருசி பெண்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆண்களுக்கு?

ஆண்கள் அழுவது தவறா... என்ன சொல்கிறது உளவியல்? #CanMenCry

ஓர் ஆண் அழுவது அவனது உரிமை. ஆனால் இந்தச் சமூகம், `ஆம்பளப்புள்ள அழலாமா?', `ஆம்பளப் புள்ளையா நடந்துக்கோ, தைரியமா இரு' என்றெல்லாம் காலங்காலமாகக் கூறிவந்து, அவன் அழுவதற்கான வாய்ப்பைத் தருவதே இல்லை. ஓர் ஆண் பொது இடத்தில் அழுதால் அவன் பலவீனமானவனாகப் பார்க்கப்படுகின்றான். இதனாலேயே கண்ணால் அழும் ஆண்களைவிட மனதால் அழும் ஆண்கள் இங்கு அதிகம்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

யதார்த்தம் இப்படி இருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை மட்டுமன்றி, அதிக ரசிகர்களின் மனதையும் சேர்த்து ஸ்கோர் செய்திருக்கும் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆண்களின் அழுகை பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார். ஆண்கள் தின வாரத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், `ஆண்கள் அழுவதற்கு வெட்கப்படக் கூடாது' என்பதை மையமாகக் கொண்டு தான் எழுதிய ஒரு கடிதத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், தான் அழுத சம்பவத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.

பேனாவால் எழுதாமல் தனது இதயத்தால் சச்சின் எழுதிய அந்தக் கடிதத்தின் சாரம்சம் இதோ உங்களுக்காக!

ஆண்களை நோக்கி சச்சின் கூறுவதாக உள்ள இந்தக் கடிதத்தில்,

``நீங்கள் விரைவில் தந்தையாக, கணவராகக் கூடும். சகோதரராக, நண்பராக, வழிகாட்டுபவராக, ஆசிரியராக இருப்பீர்கள். பிறருக்கு எடுத்துக்காட்டாக மாறப்போகும் நீங்கள் உறுதி உடையவராக, வலிகளைத் தாங்கும் சக்தி உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள்.

Sachin Tendulkar's post
Sachin Tendulkar's post
twitter.com

மேலும் பயம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். சந்தேகமே இல்லாமல் சில நேரங்களில் தோற்றும் போவீர்கள். கதறி அழுதுவிட வேண்டும்போல் தோன்றும். ஆனால் எல்லா உணர்வுகளையும் மறைத்துக்கொண்டு தைரியமாக இருப்பதுபோல நடிப்பீர்கள்.

ஆண்கள் அழுவது எப்போது தெரியுமா? #MensDay #VikatanPhotoCards

ஏனென்றால், நாம் அப்படித்தான் இருந்தாக வேண்டும், ஆண்கள் அழக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆண் அழுதால் கோழையாகிவிடுவான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். நானும் இதைத்தான் மனதார நம்பி வளர்ந்தேன். ஆனால், அந்த நம்பிக்கை தவறு என்பதை உணர்ந்ததால்தான் உங்களுக்கு இப்போது இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வலிகளும் போராட்டங்களும்தான் நீங்கள் பார்க்கும் சச்சினை செதுக்கி உள்ளன" என்று செல்லும் அந்த மடலில், தான் அழுத அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார் சச்சின். அது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் விடைபெற்ற தருணத்தின் அவர் கண்ணீரைச் சொல்கிறது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
facebook

``16 நவம்பர் 2013 - நான் ஆடுகளத்தில் நின்ற இந்த நாளை இதுவரையில் மறக்கவில்லை. அது குறித்து நான் நீண்ட காலமாக யோசித்து வைத்திருந்தேன்தான் என்றாலும், பெவிலியன் நோக்கிக் கடைசியாக நடைபோடும் அந்தக் கணத்திற்கு என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை.

ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக் கொண்டிருந்தேன். எல்லாமே முடியப்போகிறது என்ற அச்சம் என்னைச் சூழ்ந்துகொண்டது. ஏதோ தொண்டையை அடைத்தது. அக்கணத்தில் எதையும் என்னால் மனதில் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக நான் போராடவும் இல்லை. எதையும் யோசிக்காமல் இந்த உலகத்தின் முன்பு உடைந்து அழுதேன். அப்போது உண்மையில் அதிசயக்கத்தக்க வகையில் ஓர் அமைதியை உணர்ந்தேன். எனக்குக் கிடைத்த எல்லாவற்றிக்கும் நன்றி உடையவனாக, இன்னும் வலிமை கூடியவனாக மாறினேன். அப்போதுதான் நான் போதுமான அளவுக்கு ஆணாக உணர்ந்தேன்!

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
facebook

தான் கண்ணீர் சிந்திய அனுபவத்தை உணர்வுபூர்வமாக எழுதியுள்ள சச்சின் அடுத்ததாக, அழுவது அவமானம் இல்லை என்று தன் சக ஆண்களிடம் கூறுகிறார்.

``கண்ணீர் விட்டுப் பிறர் முன்பு அழுவது அவமானம் அல்ல. உங்களை வலிமையானவராக மாற்றும் ஒன்றை ஏன் மறைத்து வைக்க வேண்டும்? ஏன் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள்? உங்களின் வலியை, காயத்தை வெளிக்காட்ட உண்மையில் அதிக தைரியம் வேண்டும். ஆண்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்டிருப்பதை நம்புவதை விட்டு அதைத் தாண்டி வாருங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் இந்த தைரியம் உங்களுக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று அந்தக் கடிதம் முடிந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
facebook

`உணர்வுகளுக்கு ஆண் என்ன, பெண் என்ன?' மனிதராய்ப் பிறந்த அனைவருமே பவ்வேறு விதமான உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டவர்கள்தானே. பிறரை புண்படுத்தாத வகையில் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் பிறர் தங்கள் உணர்வை வெளிப்படுவதற்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். உணர்வுகளை வார்த்தைகளால் அல்ல; செய்கைகளாலேயே வெளிப்படுத்த முடியும். சச்சின் சொல்வதைப்போல, கண்ணீர் முட்டும்போது தைரியமாக அழுதுவிடுங்கள் ஆண்களே!

அடுத்த கட்டுரைக்கு