லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: கிராமத்து 2கே கிட்ஸின் கிரிக்கெட் அனுபவம்!

 2கே கிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
2கே கிட்ஸ்

வெ.தயாநிதி

ஐ.பி.எல் கிரிக்கெட்டோட பாஸா இருக்கலாம். ஆனால், நம்ம லோக்கல் கிரிக்கெட்தான் மாஸ். 2கே கிட்ஸ்லாம், ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடினு’ வாட்ஸ்அப்பில ஸ்டேடஸ் போட்டுவிட்டு, போன்ல பப்ஜிதான் ஆடுறாங்க; அவங்க களத்துல இறங்கி விளையாடுறது இல்லனு சொல்றவங்களுக்கு, ‘நாங்க அப்டி இல்ல’னு சொல்ற ‘கிழக்கு மருதூர்’ கிராமத்து 2கே கிட்ஸ் ஆகாஷ், அருள்ஜோதி, சிபிராஜ் மற்றும் பாலாஜி நல்ல உதாரணம்.

‘`கிரிக்கெட் ஒரு மைன்ட் கேம்ங்க. யாரு பிரஷரை நல்லா கையாள்றாங்களோ அவங்கதான் அதுல ஸ்டார். ஸ்டெம்பர் பந்து வாங்க 30 ரூபா இருந்தா போதும். பேட் கூட தென்னை மட்டையில பண்ணிக்கலாம். ஸ்டெம்புக்கு இருக்கவே இருக்கு சவுக்கு மரக்குச்சி. அப்படிதான் எங்க ஊர்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம். பிறகு காசு சேர்த்து பேட் வாங்குனோம்’' எனத் தொடங்கினார்கள் வில்லேஜ் கிரிக்கெட் ஸ்டார்ஸ்.

``எங்க ஊர் ஐ.பி.எல் மே மாசம்தான். கோடை விடுமுறைலதான் எங்க ஊருல அறுவடை முடிஞ்சு, அடுத்த பயிர் போடுறவரை நிலத்தைத் தரிசாப் போட்டுருப்பாங்க. அதான் எங்களுக்கு சேப்பாக்கம் ஸ்டேடியம். சாயந்திரம் மூணு மணிக்கெல்லாம் ஊர்ல இருக்குற பசங்கள கூப்பிடப் போய்டுவோம். அவங்க அப்பா, அம்மாக்குத் தெரியாம கூட்டிட்டு வர, நாங்க செய்ற தந்திரம் இருக்கே… தனி சுகம்தான். எங்களுக்குள்ளேயே ரெண்டு டீம் போட்டு மேட்ச் ஆரம்பிப்போம். நாங்க போடுற டாஸ் பூவா, தலையா கிடையாது. மேடா பள்ளமாதான். சின்ன பானை ஓட்டுலதான் டாஸ் போடுவோம். பந்து வீசுறவன் பும்ரா, பேட்டிங் ஆடுறவன் கோலி, கீப்பிங் செய்கிறவன் தோனி, பீல்டர்தான் ஜடேஜானு நமக்குள்ள ஒரு தனி ஃபீலிங் இருக்குங்க. அதுதான் நாங்க தினம் தோறும் கிரிக்கெட் விளையாட உந்துதலாக இருக்கு.

எங்களுக்கு ‘டிரிங்க்ஸ் பிரேக்’ அப்படின்னா அது மோட்டார்ல வரும் மண்வாசனை கொண்ட தண்ணிதாங்க. அதைவிட ஒரு ‘எனர்ஜி டிரிங்க்' எங்கயும் கிடைக்காது. எங்களோட `சியர் கேர்ள்ஸ்' யார் தெரியுமா... எங்க ஊர் பாட்டிங்கதான். நாங்க ஆடுற இடத்துக்கு பக்கத்துலதான் ஆடு, மாடு மேய்ப்பாங்க. விளையாடுற பசங்களோட பேரு தெரியாததால, அந்தப் பசங்களோட அப்பா பேரைச் சொல்லிக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தறது ஆட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

நல்ல ஆடுற 11 பேரைக் கூப்பிட்டுக்கிட்டு பக்கத்து ஊர்கள்ல நடக்கற மேட்ச்களுக்குப் போவோம். பஸ்ல போக காசு இல்லாம நம்ம ஊரு ‘கூகுள் மேப்’... அதாங்க எங்க வயல்வரப்புல டிராவல் பண்ணுவோம். மேட்ச்ல என்னென்ன செய்யணும்னு பேசிகிட்டே போவோம். மேட்ச் முடிஞ்சதும், ‘பிரசன்டேஷன் செரிமனி’கூட உண்டு. அன்னிக்குப் போட்டியில யார் செமயா பால் போட்டா, ரன் அடிச்சான்னு பாத்து அவங்களுக்குப் பரிசா சாப்பிட ஏதாச்சும் வாங்கிக்கொடுப்போம். ஜெயிச்சிட்டு ஊருக்குப் திரும்பறப்ப இந்திய அணி, ஆஸ்திரேலியா போய் முழுத் தொடரையும் ஜெயிச்சிட்டு வர்ற மாதிரி இருக்கும்.

2K kids: கிராமத்து 2கே கிட்ஸின் கிரிக்கெட் அனுபவம்!

எங்க ஊருக்குள்ள வந்ததும், ஜெயிச்ச காசுல குளுகுளுன்னு இதமா ரஸ்னா வாங்கி குடிச்சிக்கிட்டே வருவோம். அப்ப, ‘நெருப்புடா நெருங்குடா பாப்போம்’னு பிஜிஎம் எல்லாம் கேக்கும்னா பாருங்க. வெற்றி - தோல்வின்றது நாணயத்தோட இரண்டு பக்கம்னு சொல்லு வாங்க. அதுமாதிரி தோல்வியைச் சந்தித்த அனுபவங்களும் உண்டு. அதைக் கடந்து வரவும் கத்துக்கிட்டோம். இப்பப் பேருந்துல போறப்ப எங்களோட 'லோக்கல் சேப்பாக்க'த்தைப் பாக்குறப்பலாம், `மெல்ல விடை கொடு விடை கொடு'ன்னு 'துப்பாக்கி' க்ளைமேக்ஸ் பாட்டுதான் காதுல கேக்கும்'' எனப் புல்லரிப்போடு சொல்லி முடித்தார்கள்.

‘`ஆண்கள் கிரிக்கெட் சரி. பெண்கள்ல உங்க ஃபேவரைட் யார்?'' என்றதும் கோரஸாக ஒரே பெயரைதான் சொன்னார்கள். அவர், ஷபாலி வர்மா. அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தருவதால் ஷபாலிதான் ஸ்டார்.

``15 வயசிலே இவங்களோடோ அதிரடி ஆட்டம் மகளிர் கிரிக்கெட்டையே ஒரு கலக்கு கலக்குதுங்க. இவங்க ஸ்ட்ரைக் ரேட்டோ 148.3. அதனாலதான் எங்க ஃபேவரைட்'' என்றார்கள்.

இந்திய அணியில் இப்போது கிராமத்து பசங்கதான் அதிகம். அடுத்த நடராஜனை தமிழகத்தின் எந்தக் கிராமம் தரப்போகிறதென பார்ப்போம்.