லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்: முதுமைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து மாத்திரை...

மாத்திரை
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்திரை

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

இது சரியா?

சமீபத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் குழந்தைகள் எங்களிடம், ‘உங்க மொபைல்ல விளையாடிட்டு தரட்டுமா?’ என்று கேட்டு வாங்கி, கேம் டவுன்லோடு செய்து, விளை யாடிவிட்டு, பேட்டரி தீரும் நிலையில் வந்து கொடுத்தனர். கொடுத்ததோடு, இதேபோல மற்றொரு விருந்தினரிடம் செல்போனை கேட்டு வாங்கிச் சென்றனர். அவர்கள் பெற்றோர் இதை கண்டிக்கவில்லை. நான் நாசுக்காக, ‘பிள்ளைங் களை இப்படி தொடர்ந்து செல்போன்ல விளை யாட விடாதீங்க, கண்ணுக்குக் கெடுதல்’ என்ற போது, ‘தொல்லை கொடுக்காம இருந்தா சரினுதான் விடுறோம்’ என்றனர். குழந்தைகள் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை.

அனுபவங்கள் ஆயிரம்: முதுமைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து மாத்திரை...

மற்றவர்களிடம் இப்படி அவர்கள் செல்போனை கேட்பதால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகர்யம், சார்ஜ் தீர்ந்துபோனால் அவசர அழைப்பு அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே விளையாட்டு, ஓவியம், கிராஃப்ட் வேலைகள் போன்ற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை பழக்குங்கள் பெற்றோர் களே!

- எம்.வசந்தா, சென்னை-64

திடீர் விருந்தினர், திடீர் குலாப் ஜாமுன்!

தோழி வீட்டுக்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்கூட்டியே தெரிவிக்காமல் சென்று விட்டேன். அவள் என்னைப் பார்த்தவுடன், ‘அச்சோ வீட்ல ஒரு ஸ்நாக்ஸும் இல்லையே...’ என்று கூறியபடி நெய், கெட்டித்தயிர், சர்க்கரை மூன்றையும் தலா ஒரு கப் அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு சர்க்கரை கரையும் வரை நன்றாகக் கலக்கினாள். அதில் ஒரு சிட்டிகை சோடா மாவுடன் சளித்த மைதா மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்தாள். கலவை கையில் ஒட்டாமல் வரும்போது மைதா மாவு சேர்ப்பதை நிறுத்தினாள். உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் சேர்த்து, `இந்தா இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன்’ என்று கையில் கொடுக்க, பதற்றப்படாமல் திடீர் விருந்தினரைச் சமாளிக்கும் பண்பையும், அந்த ரெசிப்பியையும் அவளிடமிருந்து கற்றுக்கொண்டேன்!

- இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி

குலாப் ஜாமுன்
குலாப் ஜாமுன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்!

கணவரின் நண்பர் போன் செய்து, தன் வீட்டை சீர்திருத்திக் கட்டியிருப்பதாகவும், குறிப்பிட்ட சில நண்பர்களை மட்டும் மாலை விருந்துக்கு அழைத் திருப்பதாகவும் சொல்லி அழைத்தார். கணவர், அவர் நண்பர்கள் அனைவருமே 80 வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்கள். ஆனாலும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்து கொண்டு கணவருடன் நானும் கிளம்பினேன். அங்கு செலவிட்ட நேரத்தின் மகிழ்வை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை எனக்கு. முதுமை, பலவீனங்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிய, உற்சாகமாக நண்பர்கள் கூடி குசலங்கள் கொஞ்ச, அந்த இடமே மலரும் நினைவுகளால் மணத்தது. உடல்நிலை, உறவுகள், பேரப் பிள்ளை கள் அப்டேட் அவரை அனைத்தும் பரிமாறப்பட்டு, அலசப்பட்டன. பெரியவர்களுக்கு ஏற்ற எளிமையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, இனி இதுபோல் அவ்வப்போது சந்தித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் விடைபெற்றனர். அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்து மாத்திரை இது என்று புரிந்தது.

-  ஸ்ரீ.மல்லிகா குரு, சென்னை-33

ஒரு ரூபாய் என்றால் ஏளனமா?

நான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வழக்கமாக நான் எடுத்துக்கொள்ளும் குறிப்பிட்ட ஒரு மாத்திரையை எப்போதும் வாங்குவேன். நான் வாங்கும் ஒரு மாத்திரையின் விலை ஒரு ரூபாய் 50 பைசா. நான் ஆறு ஆறு மாத்திரைகளாக வாங்குவது வாடிக்கை. கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்தால் பாக்கி ஒரு ரூபாய் மீதி சில்லறை தர வேண்டும். ஆனால் நான் எப்போது 10 ரூபாய் கொடுத்தாலும் அவர் பாக்கி சில்லறையான அந்த ஒரு ரூபாயைக் கொடுப்பதேயில்லை. சில்லறை அவரிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கல்லா வில் சில்லறைக் காசுகள் இருந்தாலும் அவர் கொடுப்பதில்லை. ஒருமுறை கடைக்காரரிடம், ‘வாடிக்கையாளர்கள் மருந்து, மாத்திரை வாங்கிச் செல்லும்போது சரியான சில்லறை கொடுக்க வேண்டாமா? எப்போதோ ஒருமுறை என்றால் பொறுத்துக்கொள்ளலாம். எப்போதும் இப்படியே செய்வதால் எப்படி? தொடர்ச்சியாக நான் பத்து ரூபாய் கொடுத்து வருகிறேன். ஒன்பது ரூபாய் மாத்திரைக்குப் போக பாக்கி ஒரு ரூபாய் தந்து விட வேண்டியதுதானே’ என்று கேட்டேன். உடனே கடை ஊழியர் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு, ‘பெரிய மனுஷன் மாதிரி இருக்கீங்க. ஒரு ரூபாய்க்குப் போய் இவ்ளோ பேசுறீங்க’ என்று மனது புண் படும்படி பேசிவிட்டார்.

ஒரு ரூபாய் நாணயம்
ஒரு ரூபாய் நாணயம்

ஒரு ரூபாய் என்றால் அவ்வளவு ஏளனமா? ஒருவேளை நாம் ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்தால் வாங்கிக்கொண்டு மாத்தி ரையைக் கொடுத்துவிடுவார்களா? அப்படி இருக்கும்போது நமக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய சில்லறைக்கு நம்மை ஏளனமாகச் சித்திரிப்பது அர்த்தமற்றது. இதுபோல பல இடங்களில் அனுபவம் உண்டு என்றாலும் சில இடங்களில் குறைந்தபட்சம் சாக்லேட் கொடுத்து சமாளித்து விடுகிறார்கள்.

இந்த அனுபவத்தால் அடுத்த முறை சமயோசிதமாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த முறை 20 ரூபாய் கொடுத்து பத்து மாத்திரைகள் வாங்கினேன். பாக்கி 5 ரூபாயைக் கொடுத்துவிட்டார் கடைக்காரர். சிறிய விஷயமாக இருந்தாலும் நமக்கும் சமயோசிதம் தேவைப்படுகிறது என்பதையும் இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது. ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவேயில்லை. ஒரு ரூபாய் என்றால் ஏளனமா?

ஜெ.என்.ஜெயக் குமார், பாளையங்கோட்டை

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com