உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தமது டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித மாதிரி ரோபோவை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். ஆப்டிமஸ் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு நிகழ்வில் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பார்வையாளர்களுக்கு கை அசைத்து 'ஹாய்' சொன்னது.
உலகிலேயே முதல்முறையாக உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் உருவாக்கினர். உணர்கொம்புகளைப் போன்ற உணர்கருவியை இந்த மோப்பம் பிடிக்கும் ரோபோக்களுக்கு இஸ்ரேலின் டெல் அவிவ் பல்லைக்கழக விஞ்ஞானிகள் பொருத்தினார்கள்.
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் ரோபோ ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பதாகச் சமீபத்தில் செய்திகள் வந்து வியப்பில் ஆழ்த்தின. 'DoNotPay' என்ற பெயரில் செயல்படும் நிறுவனத்தின் உருவாக்கத்தில் அந்த ரோபோ வழக்கறிஞராகச் செயல்பட இருக்கிறது என்றும், இந்த ரோபோ போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்கு விசாரணையில் வாதாட இருப்பதாகவும் கூறுகிறார்கள். குறிப்பாகப் பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு இலவசமாகச் சட்டச் சேவைகளை வழங்குவதற்காக இந்த ரோபோ செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் ஏழு ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என்று கூகுள் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் சமீபத்தில் கணிப்பு தெரிவித்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட நான்கு செய்திகளும் சமீபத்தில் கண்ணில் பட்ட வைரல் செய்திகள். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை எனப் பட்டியலிடப்படுபவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் இடத்தை, அவர்களின் தொழில்களை இயந்திர மனிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ரோபோக்கள் எப்போது மனித வாழ்க்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கின?
நமக்குத் தெரிந்த ஆரம்பக்கால ரோபோக்கள் 1950களின் முற்பகுதியில் கென்டக்கியின் லூயிஸ்வில்லேவைச் சேர்ந்த ஜார்ஜ் சி. டெவோல் என்பவரால் உருவாக்கப்பட்டன. அவர் யுனிவர்சல் ஆட்டோமேஷனில் இருந்து "யுனிமேட்" என்று அழைக்கப்படும் மறு நிரல் படுத்தக்கூடிய கையாளுதலைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.
பண்டைய உலகில் ரோபோக்களின் வரலாறு கி.மு 4-ம் நூற்றாண்டில் கிரேக்கக் கணிதவியலாளர் ஆர்கிடாஸ் ஆஃப் டேரண்டம் நீராவி மூலம் இயக்கப்படும் 'The Pigeon' என்று அழைக்கப்படும் இயந்திரப் பறவையை முதன் முதலாக உருவாக்கிய போதே ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனால் உலகின் முதல் ரோபோக்களின் அறிமுகம் கி.மு 7-இலேயே நிகழ்ந்துவிட்டது என்கின்றன ஐரோப்பியப் புராணங்கள்.
கிரேக்கர்கள் உருவாக்கிய உலகின் முதல் ரோபோ
ரோபோக்களை முதலில் கற்பனை செய்தவர்கள் பண்டைய கிரேக்கர்கள்தான். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தலோஸ் எனப்படும் வெண்கல ஆண்ட்ராய்டு ஆட்டோமேட்டனைக் கண்டுபிடிப்பின் கடவுளான ஹெபஸ்டஸ் என்பவர் கிரீட் தீவைப் பாதுகாக்க உருவாக்கிய போது உலகின் முதல் ரோபோ உருவானது.

கிரீட் தீவு மற்றும் பிற ஏஜியன் தீவுகளில் 'Bronze Age' நாகரிகமான மினோவான் நாகரிகம், கி.மு 3500-ல் ஒரு சிக்கலான நகர்ப்புற நாகரிகமாகத் தொடங்கி கி.மு 2000-இல் உச்சத்தை அடைந்து பின்னர் கி.மு 1450-லிருந்து வீழ்ச்சியடை ஆரம்பித்து, கிரேக்க இருண்ட காலமான கி.மு 1100-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த நாகரீகத்தின் உச்ச காலகட்டத்தில் தற்கால மனிதனைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மக்கள் முன்னேறி இருந்தார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பாக, மிகவும் பிரபலமாக இன்றும் பேசப்படுவது, உலகின் முதல் மெட்டல் ரோபோ - தலோஸ்.
கைவினைஞர், தொழில்நுட்பம், தீ மற்றும் இரும்பின் கடவுளான டெய்டலோஸ் அல்லது ஹெபஸ்டஸ்ஸினால் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளான ஜீயஸின் உத்தரவின்படி உலகின் முதல் ரோபோ தலோஸ் உருவாக்கப்பட்டது.
ஃபைஸ்டோஸின் மினோவான் அரண்மனையில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாணயத்தில், நிர்வாணமான தலோஸின் உருவப்படம் பொரிக்கப்பட்டு உள்ளது. அந்தப் படத்தில் அவன் பெரும்பாலான கடவுள்கள் மற்றும் போர்வீரர்களைப் போலவும், இறக்கைகள் கொண்ட இளைஞனாகவும் சித்திரிக்கப்படுகிறான். கிரீட் தீவை முழுவதையும் ஒரு நாளைக்கு மூன்று முறை சுற்றி வரும் வேகத்தை அவருக்கு அந்த இறக்கைகள் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது. பழைய கிரெட்டன் மொழியில் தலோஸ் என்ற பெயர் 'சூரியன்' என்று பொருள்படும்.
கிரீட்டின் பாதுகாவலர் தலோஸ் பிறந்தான்
ஒலிம்பஸ் கடவுளான ஜீயஸ், தான் கடத்தி வந்த அழகிய காதல் மனைவி யூரோபாவை, தன்னைப்போலவே வேறு எவனாவது வந்து லவட்டிக்கொண்டு சென்று விடுவானோ என்று பயந்தார். அதேபோல தனது ராஜ்ஜியத்துக்குள் யாரும் உள்ளே அத்துமீறி நுழையக்கூடாது என்பதற்காகவும் எல்லையோர பாதுகாப்பைப் பலப்படுத்த எண்ணினார். எனவே தனது கிரியேடிவிட்டிக்களின் கடவுளான, ஹெபஸ்டஸ்ஸிடம் ஒரு சிறந்த பாதுகாப்பான காவலனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

ராஜ்ஜியத்திலிருந்த அனைத்து சிறந்த படைவீரர்களைச் சோதித்துப் பார்த்தும், ஜீயஸுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எனவே கடைசியாக ஹெபஸ்டஸ் தானே காரியத்தில் இறங்கினார். மனித சக்திகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்த ஹெபஸ்டஸ், தனது ஆளுமைக்குள் இருந்த இரும்பு, உலோகம் மற்றும் நெருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி ஒரு ராட்சச உலோக மனிதனை உருவாக்கத் தொடங்கினார்.
வெண்கல சதையும் உலோக ரத்தமுமாக உருவான தலோஸ்
ஹெபஸ்டஸ் தான் கற்ற அத்தனை வித்தைகளையும் மொத்தமாக இறக்கி ஒரு ரோபோவை வடிவமைக்கத் தொடங்கினார். அதற்கு தலோஸ் என்று பெயர் சூட்டினார்.
தலோஸின் உடலை வெண்கலத்தால் செய்தார். ஆனால் கழுத்தில் தொடங்கி கணுக்கால் வரை அவனுக்கு உயிர் கொடுக்க ஒரே ஒரு நரம்பு மட்டுமே இருந்தது. ரத்தத்திற்குப் பதிலாக, உருக்கிய உலோகம் அவன் நரம்புகளில் பாய்ந்தது. தலோஸின் இந்த ஒற்றை நரம்பு அவனது கழுத்திலிருந்து உடல் வழியாக அவன் குதிகால் ஒன்றிற்கு இட்டுச் சென்று, அங்கே ஒரு வெண்கல ஆணி மூலம் பாதுகாப்பாக மூடப்பட்டது.
தலோஸின் வேலை ஃபெஸ்டோஸில் உள்ள தனது இருக்கையிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை கிரீட் தீவைச் சுற்றி நடப்பதும், அனுமதியின்றி அந்நியர்கள் கிரீட்டை நெருங்குவதைத் தடுப்பதும், கிரீட்டை வெளிப்புற தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதுமாகும். படையெடுப்பாளர்கள் மீது ராட்சத பாறைகளை வீசுவதன் மூலம், கப்பல்களை நீருக்குள் மூழ்கடித்தான். சார்டினியாவைச் சேர்ந்த மக்கள் கிரீட்டின் மீது படையெடுக்க முயன்றபோது, தலோஸ் தன் உலோகத்தைச் சூடு பண்ணி தன்னை நெருப்பில் சிவக்கச் செய்து, எதிரிகளை கடுந் தணலில் போட்டுக் கொன்றான்.

தலோஸ், கிரீட்டின் சட்டப் பாதுகாவலர்
கிரீட்டை எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, எந்த வகையான அநீதியிலிருந்தும் பாதுகாக்கும் கடமை தலோஸுக்கு இருந்தது. தெய்வீக சட்டங்கள் பொறிக்கப்பட்ட வெண்கலப் பலகைகளைத் தன் முதுகில் சுமந்துகொண்டு, தீவின் அனைத்து கிராமங்களையும் வருடத்திற்கு மூன்று முறை சுற்றி வந்தான். மாகாணங்களில் சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது.
தலோஸின் முடிவு
ட்ரோஜன் போருக்கு முந்தைய ஆண்டுகளில் (கி.மு. 1300) கிரேக்கப் புராணங்களில் கோல்டன் ஃபிலீஸைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேசனுடன் கோல்கிஸுக்குச் சென்ற ஹீரோக்களின் குழுவில் ஆர்கோனாட்ஸ்ஸும் மெடினாவும் இருந்தனர்.
கொல்கிஸிலிருந்து திரும்பிய ஆர்கோனாட்ஸ் குழு, தங்களின் அடுத்த பயணத்திற்கு முன்னர் கொஞ்சம் ஓய்வு எடுக்கவும், தேவையான புதிய உணவு மற்றும் தண்ணீரைப் பெறுவதற்காகவும் கிரீட்டில் தமது கப்பலை நிறுத்த முயன்றனர். ஆனால் கிரீட்டை கரடி போலக் காவல் காத்துக்கொண்டு இருந்த தலோஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
அவர்கள் உணவு மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசர நிலையில் இருப்பதாகவும், சிறிது நேரத்திலேயே உடனடியாக வெளியேறப் போகிறார்கள் என்றும் ஜேசன், தலோஸை நம்ப வைக்க முயன்றார், ஆனால் தலோஸிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை. ஒரு அடி எடுத்து வைங்கடா பார்க்கலாம் என உறுமிக்கொண்டு நின்ற தலோஸைப் பார்த்து நடுநடுங்கிப் போனார்கள்.
இவனை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த போது, மாமிச மலை போல உயர்ந்து வளர்ந்து பிரமாண்டமாகவும், பார்க்கவே பயங்கர தோற்றத்துடனும் நிற்கும் ஒரு வெண்கல ரோபோவை நிச்சயமாக அம்புகளாலோ அல்லது பிற ஆயுதங்களாலோ கொல்ல முடியாது. அதே போல அந்த ரோபோக்கு மூப்பு பிணி வந்து மனிதர்கள் போலவும் இறந்தும் போக மாட்டான். எனவே தந்திரத்தால் மட்டுமே இவனைக் கொல்ல முடியும் என்று முடிவெடுத்தனர்.

பெண்ணால் அழிந்த ரோபோ!
பெண்ணாசையால் அழிந்த பேரரசுகளையும், சாம்ராஜ்ஜியங்களையும் அறிவோம். மனிதன்தான் பெண்ணாசையால் அழிந்தான் என்றால் ரோபோ கூட அதற்கு விதிவிலக்காக இல்லை.
மெடினா எனும் பெண் தலோஸ் எனும் ரோபோவைத் தனது தந்திரத்தால் வீழ்த்த முடிவு செய்தாள். கப்பலிலிருந்த யாரையும் கரையை அண்டவிடாமல் கறார் ஆபீஸராக இருந்த தலோஸ், சுட்டி ரோபோ போல அந்தக் கப்பலிலிருந்த மேடினா மீது மையல் கொண்டான். எனவே மெடினாவுக்கு தனது கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டான்.
வஞ்சத்தோடும் சூழ்ச்சியோடும் கப்பலிலிருந்து இறங்கிய மெடினா, தலோசுடன் சாமர்த்தியமாகப் பேச்சை ஆரம்பித்தாள். உலோகத்தால் செய்யப்பட்ட உருவமான உனக்கு, மனிதர்களைப் போல் மறுவுலக வாழ்க்கை என்ற ஒன்று இல்லையே என இல்லாத ஒன்றுக்கு தலோஸை ஆசைப்பட வைத்தாள்.
மெடினாவின் வஞ்ச வலையில் வீழ்ந்த தலோஸ் அதுபற்றி சிந்திக்கத் தொடங்கினான். “ஏனைய கடவுள்களைப் போல உனக்கும் சாகா வாரம் கொடுத்து, மறு உலக வாழ்க்கையை அனுபவிக்கும் வரத்தை என்னால் வழங்க முடியும். அதற்கு மாற்றாக உனது உள்ளங்காலில் உள்ள ஒரு சிறு ஆணியை முதலில் அகற்ற எனக்கு அனுமதி வேண்டும்” என்றாள் தந்திரமாக.

இவள் சொல்வதை நம்பலாமா இல்லையா என தலோசுக்கு ஒரு கணம் சந்தேகம் வந்து யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, பின் பக்கமாக வந்த மெடினாவின் கூட்டாளியான ஜேஸன், தலோஸின் கழுத்திலிருந்து உடல் வழியாக அவனது குதிகாலுக்கு இட்டுச் சென்ற ஒற்றை நரம்பின் வெண்கல ஆணியைச் சட்டென்று அகற்றினான். மறு கணமே தலோஸின் உடலில் உயிர் போல ஓடிக்கொண்டு இருந்த உலோக இரத்தம் அவன் கால் வழியே வடியத் தொடங்கியது.
உலோக ரத்தம் தலோஸ் உடலிலிருந்து வெளியேற, வெளியேற, தலோஸ் எனும் இரும்பு மனிதன் மெல்ல மெல்ல மயங்கிச் சரிந்தான். கடைசித் துளி ரத்தம் வெளியேறிய போது தலோஸ் செயலற்ற வெறும் உலோகத் துண்டுகளாக உடைந்து விழுந்தது.
இரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததோ!
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய ரோபோக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வெறும் கட்டுக்கதைகளைத் தாண்டியது. கிமு 4-ம் நூற்றாண்டில் கிரேக்கப் பொறியியலாளர்கள் ரோபோ வேலைக்காரர்கள் மற்றும் ரோபோ பறவைகளின் பறக்கும் மாதிரிகள் உட்படப் பல உண்மையான தானியங்கிகளை உருவாக்கத் தொடங்கினர். ஆனாலும் இந்தப் படைப்புகள் எதுவும் தலோஸ் அளவுக்கு அப்போது பிரபலமாகவில்லை.
செயற்கை நுண்ணறிவு பற்றிய பல நவீன கட்டுக்கதைகளைப் போலவே, டாலோஸின் கதையும் பிரதானமாக அவனது ரோபோ இதயத்தைப் பற்றியதாகவே இருந்தது. மனித உணர்வுகளால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தெய்வீக உணர்வு தலோஸின் இதயத்தில் உறைந்திருந்தது என்கிறார்கள் கிரேக்கப் புராணக் கதைகளின் ஆய்வாளர்கள்.

உடலில் உள்ள அனைத்து உலோக சக்தியும் கால் வழியே வடிந்து மரணத்தைத் தழுவிய நிமிடம், இரும்பு மனிதன் தலோஸின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர்த் துளி அவன் உலோகக் கன்னங்களில் உருண்டு ஓடியது.