ஆர்வக்கோளாறு வரமா சாபமா?
நமக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமான விஷயம்தான், ஆனால் அதுவே கொஞ்சம் அளவுக்கு அதிகமாகி ஆர்வக்கோளாறாக மாறும்போதுதான் சிக்கலாகிறது. ஆர்வக்கோளாறால் எதையாவது செய்யப் போய், பிள்ளையார் பிடிக்கக் குரங்காகும் கதையை ஆங்கிலத்தில் “It would open a Pandora’s box of problems” என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது என்ன பண்டோரா பெட்டியளவுக்கு பிரச்னை? இந்த உலகில் நோய், வறுமை, பஞ்சம், வெறுப்பு, பொறாமை, பழி என அத்தனை பிரச்னைகளும் உருவாகக் காரணம் பண்டோரா எனும் பேரழகியின் ஆர்வக்கோளாறு என்கின்றன ஐரோப்பியப் புராணங்கள்.
பண்டோரா பெட்டியின் கதை, கிரேக்கப் புராணங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த 'Father of Greek Didactic Poetry' என்று அழைக்கப்பட்ட கிரேக்க கவிஞரும் எழுத்தாளருமான ஹெசியோட்டின் தனது இரு கவிதைத் தொகுப்புகளில் பண்டோரா பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது 'Works and Days' எனும் முதல் கவிதைத் தொகுப்பில் பண்டோரா எனும் பெண் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத ஒரு மோசமான பெண் என்றும் உலகின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவள்தான் என்றும் சாடியுள்ளார்.

அவரது 'Theogony' எனும் இரண்டாவது கவிதைத் தொகுப்பில், பண்டோராவை ஒரு மிக அழகான ராட்சசி என்றும் அபாயகரமான பெண் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் (அழகான ராட்சசியே என்று பாடியிருப்பாரோ?). ஆனால் அதே ஹெஸியோட், "அழியாத கடவுள்களையும், அடங்காத மனிதர்களையும் அடக்கியாளும் அதிசயம் அவள்" என்றும் பண்டோராவை வர்ணிக்கிறார். கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்பது போல, மோசமான ராட்சசியாகவும் அழகான தேவதையாகவும் வர்ணிக்கப்படும் பண்டோரா எப்படி இந்த உலகின் அனைத்து துன்பங்களுக்கும் காரணமானாள்?
என்னதான் அழகியாக இருந்தாலும் பண்டோராவுக்குள்ளும் ஓர் ஆர்வக்கோளாறு குணம் இருந்தது. அதுவே உலகின் அத்தனை துயரங்களுக்கும் காரணமானது என்கிறார்கள் ஐரோப்பியர். அது எப்படி என்று தெரிந்துகொள்ள ஐரோப்பியரின் மிக முக்கிய புராணங்களில் ஒன்றான பண்டோரா பாக்ஸுக்குள் ஆர்வமாகக் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா (அய்யயோ!!)?
ஒலிம்பியன் கடவுள்களும் டைட்டன்களும்!
ஒலிம்பியன்களுக்கு முன் உலகை ஆண்ட கிரேக்கக் கடவுள்கள் டைட்டன்ஸ் என்று அழைக்கப்பட்டனர். ஒலிம்பியன் கடவுளுக்கும் டைட்டன்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒலிம்பியன் கடவுள்கள் வெற்றி பெற்றனர். ஆனால் அவர்களை எதிர்த்துச் சண்டையிட்ட டைட்டன்களில் எபிமேதியஸ் மற்றும் ப்ரோமிதியஸ் எனும் இரு சகோதரர்கள் ஒலிம்பிய கடவுள்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் (பொழைக்கத் தெரிஞ்ச புள்ளைங்க). இவர்களைப் பார்த்த ஒலிம்பியன் கடவுள், “காது ஆடுதுல... இவனுக நம்ம ஜாதில” என அந்த இரு டைட்டன்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டனர். சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக இரு சகோதரர்களும் ஒலிம்பியன்களுடன் இணைந்து கொண்டனர்.
எபிமேதியஸ் மற்றும் ப்ரோமிதியஸ் இருவரின் விசுவாசத்தை மெச்சும் விதமாக அவர்களுக்கு உலகத்தில் உயிர்களை உருவாக்கும் முக்கிய பொறுப்பை வழங்கினார் ஒலிம்பிய கடவுளான ஜீயஸ் (ஜீயஸ் பற்றித் தெரிந்துகொள்ள இந்தத் தொடரின் முதல் இரு அத்தியாயங்களைப் படியுங்கள்). எபிமேதியஸ் விலங்குகளையும் பறவைகளையும் படைத்தார். சிறகுகளை வழங்கி பறவைகளைப் பறக்க வைத்தார். மீன்களை நீந்த வைத்தார். கூரிய பற்களையும் பெரிய நகங்களையும் கொடுத்து விலங்குகளை வேட்டைக்குத் தயார்ப்படுத்தினார். பனிப்பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்குத் தடித்த தோலையும் அடர் ரோமத்தையும் வழங்கினார்.

அதே வேளை மறுபக்கம் கடவுள் கொடுத்த மண்ணை வைத்து ப்ரோமிதியஸ் மனிதர்களை உருவாக்கினார். நல்ல மனசுக்காரரான ப்ரோமிதியஸ் மனிதர்களையும் கடவுளைப் போலவே படைத்தார். அதைப் பார்த்த ஜீயஸ் கடுப்பாகி, “ச்செல்லாது, ச்செல்லாது” என அதை ரிஜெக்ட் செய்து, மனிதர்கள் எப்போதுமே அடிமைகளாகவும், எல்லாவற்றுக்கும் கடவுளை நம்பி வாழ்பவர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
ப்ரோமிதியஸ்ஸும் “இந்தாளு பெரிய முரடனாச்சே, இவன் சொன்னதைச் செய்யவில்லை என்றால் என்னையும் மற்ற டைட்டன்களைப் போலப் பொடியாக்கி, நெருப்புத் தணலில் வறுத்து எடுத்து விடுவான், எதற்குத் தேவையில்லாத வம்பு?” என எண்ணி கடவுள் ஜீயஸ் சொன்னபடியே மனிதனைப் படத்தார். ஆனாலும் நல்ல மனசுக்காரனான ப்ரோமிதியஸ் மனிதர்கள் எந்தச் சக்தியும் இல்லாமல் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கவலை கொண்டார். எனவே அவர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கொஞ்சம் வளமாக்க விரும்பினார். மக்கள் குளிரில் நடுங்குவதையும், சாப்பிட உணவின்றி வாடுவதையும், இருளில் தவிப்பதையும் பார்த்த ப்ரோமிதியஸ் நீண்ட யோசனைக்குப் பிறகு அவர்களுக்குக் கொஞ்சம் நெருப்பைக் கொடுக்கத் தீர்மானித்தார்.
ஆனால் நெருப்போ ஜீயஸ் வசம் இருந்தது. "ஜீயஸிடம் போய் 'நெருப்பு கொடுங்கள்' என்று கேட்டால் அதே நெருப்பில் என்னைப் போட்டு வறுத்து எடுப்பானே” என அஞ்சினார் ப்ரோமிதியஸ். ஆனாலும் அவர் மனசு, பூமியில் கஷ்டப்படும் மனிதர்களை நினைத்து உருக்கியது. என்ன செய்யலாம் என யோசித்தவர், கொழுத்த ராகு காலம் உச்சத்திலிருந்த ஒருநாள், ஜீயஸ் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்தபோது பூனை போல மெல்ல மெல்ல அடி வைத்துச் சென்று அங்கிருந்த நெருப்பைத் திருடிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
மக்களுக்கு நெருப்பு, ஜீயஸுக்கு வெறுப்பு, ப்ரோமிதியஸுக்கு ஆப்பு!
ஜீயஸிடம் இருந்து திருடிய நெருப்பைக் கொண்டு வந்து தாம் படைத்த மக்களிடம் கொடுத்தார் ப்ரோமிதியஸ். “யாரு சாமி நீ” என அவரைக் கையெடுத்துக் கும்பிட்ட மக்களின் வாழ்க்கை அன்று முதல் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. வேட்டையாடிய மாமிசத்தை பிரியாணி செய்து சாப்பிட்டார்கள். சூரியன் மறைந்ததும் தீ மூட்டி இரவை ஒளியேற்றினார்கள். குளிர் காலங்களில் தீயைச் சுற்றிச் சுற்றி, “தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடி” என ரொமான்டிக் நடனம் ஆடினார்கள். தீயைப் பயன்படுத்தி ஆயுதம் செய்தார்கள். இப்படி நெருப்பினால் மனித சமூகத்தின் நாகரீகம் படிப்படியாக முன்னேறியது. முன்னெல்லாம் எதற்கு எடுத்தாலும் கடவுளே கடவுளே என வானத்தைப் பார்த்து நின்ற மக்கள், இப்போது தம் சொந்த முயற்சியிலேயே தமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டார்கள்.

சிறிது காலமாகவே மக்கள் தம்மைத் தேடிவருவது கணிசமாகக் குறைந்து வருவதைக் கவனித்த ஜீயஸ் “என்னாச்சி ஒரு பயலயும் காணோமே?” என யோசித்தவர், மேலிருந்தபடியே பூமியை எட்டிப் பார்த்தார். அங்கே மக்கள் நெருப்பை மூட்டிக்கொண்டு நல்ல சொகுசாக வாழ்வதைக் கண்டு அப்படியே கொதித்துப் போனார். ப்ரோமிதியஸ் தன்னிடம் இருந்து நெருப்பைத் திருடிக்கொண்டு போய் மக்களுக்குக் கொடுத்திருக்கிறான் என்று அறிந்து கொண்டவர் “ஏய் ப்ரோமிதியஸ்! என்னையே ஏமாத்திட்ட... இந்த நாள் உன் டைரில குறிச்சி வச்சிக்கோ! இனிமேதான் இந்த ஜீயஸின் ஆட்டத்தைப் பார்க்கப் போற” என தனக்குள்ளே பன்ச் டயலாக் பேசிக்கொண்டார்.
தன்னை ஏமாற்றிய ப்ரோமிதியஸுக்கும், அவருக்குத் துணை போன ப்ரோமிதியஸின் சகோதரனுக்கும், ப்ரோமிதியஸிடம் நெருப்பைப் பெற்று குஷியாக இருக்கும் மனிதனையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஜீயஸ்.
முதலில் ப்ரோமிதியஸைத் தரதரவன்று இழுத்து வரச்செய்து காகசஸ் மலைகளின் உச்சியில் சங்கிலிகளால் கட்டிப் போட்டார். அந்த மலையில் கூடு கட்டி வாழ்ந்த கழுகு ஒன்று தினம் தினம் காலையில் ப்ரோமிதியஸ்ஸின் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவர் ஈரலைக் கொத்திக் கொத்தி சாப்பிட ஆரம்பித்தது. மாலையானதும் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியோடு அந்தக் கழுகு பறந்து போய்விடும். இரவு முழுதும் ப்ரோமிதியஸின் ஈரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். மறுநாள் விடிந்ததும் மீண்டும் அதே கழுகு வந்து கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். ப்ரோமிதியஸின் நாள்கள் தினம் தினம் இதே நரக வேதனையிலேயே கழிந்தன.
ஒரு நாள் தன் சகோதரன் ப்ரோமிதியஸைப் பார்க்க வந்த எபிமேதியஸ், கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த ப்ரோமிதியஸின் உடலைக் கொத்தி ஈரலைச் சுவைத்துக்கொண்டு இருந்த கழுகைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

அதைப் பார்த்த ப்ரோமிதியஸ், “அழாதே தம்பி. அந்த ஜீயஸ் என்னை மட்டும் தண்டித்ததோடு நின்று விட மாட்டான். எனக்கு எப்போதும் துணை நிற்கும் உன்னையும் தேடி வருவான். எனவே ஜாக்கிரதையாக இரு. இனிமேல் என்னைப் பார்க்க இங்கே வராதே. அந்த முரடன் கண்ணில் சிக்கும் முன் நீ போய் விடு” என்று சொல்லி அனுப்பி வைத்தார். போகும் முன் கடைசியாக “ஜீயஸ் எந்தப் பரிசுப் பொருளைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாதே” என்றும் கூறி அனுப்பினார், எதிர்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்றிருந்த ப்ரோமிதியஸ்.
ப்ரோமிதியஸ்ஸைத் தண்டித்தும் ஜீயஸின் கோபம் அடங்கவில்லை. அவரது சகோதரன் எபிமேதியஸுக்கும், தனக்குச் சொந்தமான நெருப்பை வைத்துக்கொண்டு தன்னை உதாசீனம் செய்யும் மக்களையும் பழிவாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டார். இவர்கள் இருவரையும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல ஏதாவது ஓர் ஆயுதத்தை வைத்தே பழி தீர்க்க வேண்டும். அது என்ன, என்று யோசித்தவரே வானத்துக்கும் மேகத்துக்குமாய் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு ஒரு சூப்பரான ஐடியா தோன்றியது.
அழகே அதிசயிக்கும் பேரழகி பண்டோரா பிறந்தாள்!
தனக்குத் தோன்றிய ஐடியாவை உடனடியாகச் செயல் வடிவம் கொடுக்க எண்ணியவர் கண்ணில் ஜீயஸின் மகனும், தீ மற்றும் கைவினைஞர்களின் கடவுளுமான ஹெபஸ்டஸ் (Hephaestus) கண்ணில் பட்டார்.

ஹெபஸ்டஸை அழைத்த ஜீயஸ், தனக்காக ஒரு பேரழகியை உருவாக்கித் தருமாறு கட்டளையிட்டார். “டேய் தகப்பா..! உனக்கே இது நியாயமா இருக்கா?” என சிங்கிளாகச் சுற்றும் ஹெபஸ்டஸின் மைண்ட் வாய்ஸ் கதறினாலும், அதைச் சத்தமாக வெளியே சொன்னால் எங்கே ப்ரோமிதியஸுக்குத் துணையாகத் தன்னையும் கொண்டு போய் காகசஸ் மலையில் பருந்துக்கு டின்னராக்கி விடுவானோ என்று அஞ்சி, “அப்படியே ஆகட்டும் தந்தையே” எனப் பணிவாக ஏற்றுக்கொண்டார்.
ஜீயஸ் கொடுத்த களிமண்ணிலிருந்து ஹெபஸ்டஸ் ஓர் அழகிய பெண்ணை உருவாக்கினார். அந்தப் பெண்ணைச் செய்து முடிக்கும் வரை பக்கத்திலேயே கரடி போல அமர்ந்திருந்த ஜீயஸ், அவளின் ஒவ்வொரு அங்கமும் அட்டகாசமான அழகுடன் இருக்கும் படி பார்த்துக்கொண்டார். பல நாள்கள் இரவு பகலாக கண்விழித்து வேலை செய்த ஹெபஸ்டஸ் கடைசியாக, ஒரு பேரழகியை உருவாக்கினான். பார்க்கும் யாரையும் அக்கணமே சுண்டியிழுக்கும் அழகும் கவர்ச்சியும் கொண்டிருந்த அப்பெண்ணைப் பார்த்ததும் காதல் மன்னன் ஜீயஸுக்கே லேசாகச் சலனம் தட்டியது (தட்டவில்லை என்றால்தான் அதிசயம்). “அழகியே, marry me! marry me! அழகியே...” என உடனே பாடத் தயாரானவர் பக்கத்திலேயே மனைவி நின்று முறைப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்.
நிர்வாணமாக நின்றிருந்த அப்பெண்ணுக்கு வானத்தில் துணியெடுத்து, விடிவெள்ளிச் சூரியனில் நிறம் எடுத்து, நட்சத்திரங்களை ஜரிகையாகத் தூவி ஓர் அழகிய ஆடையை வடிவமைத்தாள் ஆதீனா. ஏனைய ஒலிம்பஸ் தெய்வங்களும் வரிசையாக வந்து பல்வேறு பரிசுகளைக் கொடுத்தன. ஞானத்தின் தெய்வமான ஆதீனா அவளுக்கு அறிவையும் பகுத்தறிந்து சிந்திக்கும் திறனையும் தர, காதல் தெய்வமான அப்ரோடைட் அவளுக்குக் காதலையும் காமத்தையும் கொடுத்தார். கடவுள்களின் தூதரான ஹெர்ம்ஸ் அவளுக்குத் தந்திரத்தையும் ஏமாற்றும் திறனையும் கொடுத்தார். கடைசியாக, ஹெபஸ்டஸ் அவளுக்கு பண்டோரா என்று பெயர் சூட்டினார்.

அதுவரை ஓரமாக நின்று நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜீயஸ், இறுதியாக அழகி பண்டோராவுக்கு ஒரு முக்கியமான வரத்தைக் கொடுத்தார். அத்தோடு அவள் பிறப்பு முழுமையடைந்தது. ஆனால் அதுவே இந்த உலகின் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாகிப்போனது! ஜீயஸ் கொடுத்த அந்த ஸ்பெஷல் பரிசு என்ன? அடுத்த வார அத்தியாயத்தில்...