மூன்று ஆண்டுகளாக கொரோனாவிற்கு பயந்து மாஸ்க் அணிந்து வந்த ஜப்பானியர்கள், மாஸ்க்கிற்குப் பின்னால் சிரிப்பதையே நிறுத்தி, இப்போது மாஸ்க் இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்ட முடியாமல் சிரமப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானில் மூன்று ஆண்டுகளுக்குப் பின், கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று விதிகளைத் தளர்த்தினர். ஆனால், இப்போது மக்கள் பொது இடங்களில் ஒருவரை முதல் முறையாகப் பார்க்கும் போதும், ஒருவருக்கு நன்றி சொல்லும் போதும்கூட எப்படிப் புன்னகைப்பது என்று தெரியாமல் போலியான முகபாவனையோடு இருப்பதாகக் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் முகத்தில் உள்ள தசைகளை எல்லாம் உபயோகிக்காததால், உண்மையான புன்னகையை அவர்களால் முகத்தில் கொண்டுவர முடியவில்லை என்கின்றனர். இதனால், பலரும் வேலையிலும், மீட்டிங்களிலும் சிடுமூஞ்சியாக இருப்பதாகவும் அல்லது போலியாக சிரித்து மாட்டிக்கொள்வதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து ஜப்பானில், எப்படிச் சரியாகச் சிரிப்பது என்ற தலைப்பில் பல இணையவழி கருத்தரங்குகளும் வகுப்புகளும் உருவாக ஆரம்பித்தன. சிரிக்க மறந்த பலரும், மீண்டும் எப்படிச் சிரிப்பது என்று கற்றுக்கொள்ள இதுபோன்ற வகுப்புகளில் சேர ஆரம்பித்துள்ளனர். பல சிரிப்பு நிபுணர்களும் புதிதாக ஜப்பானில் முளைத்துள்ளனர். மக்கள் அந்தச் சிரிப்பு நிபுணரிடம் காசு கொடுத்து எப்படிச் சிரிப்பது என்று கற்றுவருகின்றனர்.
கொரோனா சமயத்தில் ’Hikikomori wave’ எனப்படும் ஒரு நோயால், 1.5 மில்லியன் ஜப்பானியர்கள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதாவது, ஆபத்தான சூழ்நிலைக்குப் பின், மக்கள் பயத்தில் நான்கு சுவருக்குள் தங்களைச் சுருக்கிக் கொண்டு, வேறு யாருடனும் நேரடித் தொடர்பில் வராமல் சொந்தக் குடும்பத்தினரையேகூட தவிர்க்கும் பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பலரும் தங்கள் பள்ளி, கல்லூரிக்குக்கூடச் செல்லாததும், இளைஞர்கள் திடீரென வேலையை ராஜினாமா செய்வதும் எனப் பல சம்பவங்களும் நடந்தன.

அதன் ஒரு பகுதியாகத்தான், இப்போது மக்கள் சிரிக்கவும் மறந்துவிட்டதாகவும், எப்போதுமே மாஸ்க் அணிந்து, இப்போது மாஸ்க் இல்லாத போது தயக்கமாகவும் பதற்றமாகவும் உணர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வேலையிடங்களிலும், புதிய நண்பர்களை உருவாக்கவும் ஓர் அழகான புன்னகை மிகவும் உதவியாக இருக்கும். ஏற்கெனவே கொரோனாவால் தனிமையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய இளைஞர்கள் சிரிக்க மறந்துவிட்டால், அவர்களுக்கென நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்கின்றனர் ஜப்பானிய மனநல நிபுணர்கள்.