காதல் பிரமிக்க வைப்பதில்லை. தங்களுக்குப் பிடித்தவர்களுக்காகக் காதலர்கள் செய்யும் மெனக்கெடல்களே பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அப்படியான ஒரு காதல் கதைதான் இது…
டெல்லியில் உள்ள ஓவியக் கல்லூரியில், பிரத்யும்னா குமார் மஹாநந்தியா என்றவர் படித்து வந்துள்ளார். இவரின் ஓவியத் திறன் ஸ்வீடன் வரை பரவிய நிலையில், 19 வயது மாணவியான சார்லோட் வான் ஷெட்வின், இவரின் கலைத்திறன் குறித்துக் கேள்விப்பட்டு, தன்னுடைய உருவப்படத்தை அவர் வரைய வேண்டும் என ஸ்வீடனிலிருந்து இந்தியாவிற்கு, கடந்த 1975-ம் ஆண்டில் 22 நாள்கள் வேனில் பயணித்து, அவரை சென்று சந்தித்துள்ளார்.

அப்பெண்ணின் ஓவியத்தை மஹாநந்தியா வரையும்போதே அவரின் அழகால் ஈர்க்கப்பட்டு, இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
விரைவிலேயே இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சார்லோட், ஸ்வீடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், கல்வியை முடிக்க வேண்டிய நிலையில் மஹாநந்தியா இருந்ததால், அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இருந்தபோதும் இருவரும் கடிதத்தின் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
ஒரு வருடம் கழித்து தன்னுடைய மனைவியைக் காணத் திட்டமிட்டபோது, விமானத்தில் செல்ல தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்.
தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்றுவிட்டு ஒரு சைக்கிள் வாங்கிய அவர், அதில் பயணத்தைத் தொடங்கினார். நான்கு மாதங்கள் சைக்கிளில் பயணித்து பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளைக் கடந்தார்.
பல நேரங்களில் இவரின் சைக்கிள் உடைந்துள்ளது. சில நேரங்களில் உணவின்றி இடைவெளி ஏதுமில்லாமல் தொடர்ந்து பயணித்து இருக்கிறார். ஒருநாளில் 70 கி.மீ (44 மைல்) சைக்கிளில் பயணித்து இருக்கிறார்.

1977 ஜனவரி 22-ம் தேதி தன்னுடைய பயணத்தை இந்தியாவில் இருந்து ஆரம்பித்தவர், மே 28-ல் ஐரோப்பாவை அடைந்தார். அதன்பின் ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் நகருக்கு ரயில் மூலம் சென்றிருக்கிறார். அங்கு அதிகாரபூர்வமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் ஸ்வீடனிலேயே தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களின் காதல் கதை குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதள பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது… இந்தக் காதல் ஜோடிகளுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன!