நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை, நாட்டுப்புறப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் சூழலில் பாடும் பாடல்கள். இவை வாய்மொழியாகக் கடத்தப்படுபவை. சொற்களைக் கோத்து வரிகளாக்கி, இசையுடன் கலந்து, பாடல்களை உருவாக்கிப் பாடியதில் பெண்களின் பங்கு அதிகம். தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தோன்றிய பல்வேறு கலைவடிவங்களுக்கும் கலாசாரத்திற்கும் ஆணிவேராக நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சா.கந்தசுப்ரமணியத்திடம், பொங்கல் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் குறித்துக் கேட்டோம். ஆய்வு மாணவர்களுடன் சேர்ந்து களஆய்வு செய்து தொகுத்த பாடல்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்தார்...

கொண்டாட்டப் பாடல் (பொங்கல் கும்மிப் பாட்டு )
விழாச் சூழலில் பாடப்படும் பாடல் கொண்டாட்டப் பாடல். கும்மி என்பது பலர் ஒன்று கூடி ஆடும் நடனம். இப்பாடல் பொங்கல் திருநாளன்று பாடப்படும் கும்மிப்பாடல்...
சாடியோட தேசத்துல ஏலேலக்கும்மி ஏலேலோ
சாஞ்சிருக்கும் சம்பா நெல்லு ஏலேலக்கும்மி ஏலேலோ
வௌஞ்சிருக்கும் சம்பாநெல்லு ஏலேலக்கும்மி ஏலேலோ
அரியறுத்து திரிதிரித்து ஏலேலக்கும்மி ஏலேலோ
அன்னம் போலக் கட்டுக்கட்டி ஏலேலக்கும்மி ஏலேலோ
காதம் காதம் போறொமின்னா ஏலேலக்கும்மி ஏலேலோ
கணத்தக்கட்டு வாங்கமையா ஏலேலக்கும்மி ஏலேலோ
நீ என்னாத் தர ஏதுத்தர ஏலேலக்கும்மி ஏலேலோ
நட்டங்க நல்ல மொரமெடுத்து ஏலேலக்கும்மி ஏலேலோ
நாதகுத்தப் பிடி நெல்லுத் தரேன் ஏலேலக்கும்மி ஏலேலோ
கையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலோ
பச்சோ வளையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலோ
பள்ளருக்க போவன்னே ஏலேலோ கும்மி ஏலேலோ
பயிறருக்க தோனலையோ
அந்த பயிறருக்க தோனலையோ
வளையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலே
நெல்லறுக்க தோனலையோ ஏலேலே கும்மி ஏலேலோ
நெல்லறுக்க தோனலையோ ஏலேலே கும்மி ஏலேலோ
தன்னானன்னானே தானே தன்னானன்னானே
தன்னானன்னானே தானே தன்னானன்னானே
நடவுப் பாடல்
வயல்வெளிகளில் நாற்று நடும்போது அலுப்புத் தெரியாமல் இருக்கப் பாடும் பாடல்...
பத்தி பத்தியாக நாத்தைப் போட்டு
பந்தயம் போட்டு நடவுங்கடி
அடிக்கொடு நாத்தை நடவுங்கடி
அடி ஆணவங்கெட்ட பெண்களா
பிடிக்கொரு படிகாண வேணும்
பச்சட் போட்டு நடவுங்கடி
பன்னிக்கரியாக்கி பச்ச நெல்லஞ் சோறாக்கிப்
பன்னிகரி பத்துவ படபோறா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சிட்டாட தலைநெறைஞ்ச முக்காடு ஓலை...
கோழிக்கறியாக்கி கும்பநெல்லஞ் சோறாக்கி
கோழிக்கறி பத்திலினு குடியோறா ஓலைக்கா
குத்தடி தோழிகளே கூலிக்கு நடுங்கோடி-இந்தக்
கூலிக்கு நடுங்கோடி குச்சிலி சம்பா நாத்தெடுத்து
குனிந்து நடுங்கோடி-நீங்க குனிந்து நடுங்கோடி.

அறுவடைப் பாடல்
பயிர்களை அறுவடை செய்யும் போது பணிக் களைப்பு தெரியாமல் இருக்கப் பாடும் பாடல்...
காலையிலே பூத்த பூவு ஏலேலம்பா ஏலம்
கனகாம்பரம் நானிருக்க ஏலேலம்பா ஏலம்
காஞ்சிப் போன பூவுக்காக ஏலேலம்பா ஏலம்
கடைத் தெருவ சுத்துறானே ஏலேலம்பா ஏலம்
மாலையிலே பூத்த பூவு ஏலேலம்பா ஏலம்
மல்லிகைப் பூ நானிருக்க ஏலேலம்பா ஏலம்
மாஞ்சிப் போன பூவுக்காக ஏலேலம்பா ஏலம்
மாரு கெட்டைச் சுத்துறானே ஏலேலம்பா ஏலம்
சாமத்திலே பூத்த பூவு ஏலேலம்பா ஏலம்
சாமத்தி பூ நானிருக்க ஏலேலம்பா ஏலம்
சமஞ்சிப்போன பூவுக்காக ஏலேலம்பா ஏலம்
சந்து சந்தா சுத்துறாண்டி ஏலேலம்பா ஏலம்
வெள்ளிப்புடி அருவா
வெடலப்புள்ளி கையருவா
சொல்லியடிச்ச அருவா
சுடிட்டுதம்மா நெல்கதிர்
அறுப்பறுத்து திரிதிரித்து
சுன்னம் போல கட்டுக்கட்டி
தூக்கிவிடு சின்ன மச்சான்
தூரத்துல போறகட்டு
ஏலேலோ குயிலேலோ அன்னமே.
விளையாட்டுப் பாடல்
இப்பாடல் பிசின் பறத்தல் என்ற விளையாட்டு விளையாடும் போது பாடப்படுவது. பிசின் பறத்தல் என்பது இருவர் கைகோத்துக் கொண்டு சுற்றி விளையாடும் விளையாட்டு...
தீப்பெட்டியம்மா தீப்பெட்டி
மீனாட்சியம்மா கோவில்ல
மின்னல் பொங்கல் வெச்சாங்க
காமாட்சியம்மன் கோவில்ல
கம்மல் பொங்க வெச்சாங்க
பட்டுச்சீல பளபளங்குது
மாமன் பொண்டாட்டி
கொட்டுங்கோ முழங்குங்கோ
கொடியும் தாழம் போடுங்கோ
பிசினாலோ பிசின்

கும்மிப் பாடல்
கும்மி என்பது பலர் ஒன்று கூடி ஆடும் நடனம். பலர் கூடி மகிழ்ந்து கும்மி அடித்துப் பாடும் பாடல்...
இந்த நிலாவு நிலாவுமல்லோ
நித்திரைக் கேத்தி உறையு மல்லோ
இந்த நிலவுக்கு சந்தனப் பொட்டுக்கு
சந்த கும்மி கொண்டாருங்கம்மா”
தன்னே என்னே னன்னே னானே
னன்னே னானே னன்னா னானே
முந்தி முந்தி நாயகரே-நல்ல
முருக நல்ல சரஸ்வதியே
கந்தனுக்கு முன் பிறந்த
கணபதியே காப்பாமே
வேலவர்க்கு முன் பிறந்த
விநாயகரே முன் பிறந்தாய்
புள்ளையாரே புள்ளையாரே
பெருமை வாய்ந்த புள்ளையாரே
ஏர்ப் பாடல்
உழைப்பின் மகத்துவத்தை உரைக்கும் பாடல் ஏர்ப் பாடல்..
தெற்கே தெற்கே தென்னமரம்
தெரு வெல்லாம் வன்னி மரம்
வன்னிமரச் சோலையிலே
வந்திறங்கும் பிள்ளையாரே
எள்ளும் கொள்ளும் விதைக்க
ஏறுமுகப் போறோம்டா
ஏய்க்காம நடந்து வாடா
எங்க பிள்ளையாரே
கலப்பையைச் சுமந்தான் ஆம்பள-கஞ்சிக்
கலயத்தைச் சுமந்தாள் பொம்பள
வரப்புக்கு உள்ளே அவர்களின் உழைப்பை வார்த்தையில சொல்ல முடியில
ஆனியில் சமைப்பான் வயல்களை
ஆடியில் விதைப்பான் விதைகளை
ஆவணித் திங்கள் அறுவடை கண்டே
அள்ளி மகிழ்வான் புதையலை.

நெல்வகைப் பாடல்
நெல் வகையை விவரிக்கும் பாடல்...
குத்து முத்து சம்பா
குட மல்லி சம்பா
மல்லிகைச் சம்பா
மணமுள்ள சம்பா
சிறு நெல்லு சம்பா
சீரகச் சம்பா
குதிரை வாலு சம்பா
கோணகச் சம்பா
அத்தனையும் பிரிச்சு
அழகுடனே விதைச்சேன்.
நாழி அரிசிக்கு நானூறு கப்பல்
நாடோறும் தப்பாமல் கப்பல் வந்து சேறும்
சின்ன மணவாள சீரகச் சம்பா
பெரிய மணவாளி பேர்போடுவெள்ள
சதுரகிரி வெள்ள சமுக்காரக்குட்டி
நாழி அரிசிக்கு நானூறு கப்பல்
நாடோறும் தப்பாமல் கப்பல்வந்து சேரும்
சீரகச்சம்பா சிங்கப்பூர் சம்பா