
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

பணிப்பெண்ணின் அட்வைஸ்!
எங்கள் வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக வீட்டு வேலை பார்க்கும் பெண் அன்று சற்று பதற்றத்துடன் வந்து, நான் பாத்ரூமில் மறந்துவைத்துவிட்டு வந்திருந்த என் செயினைக் கொடுத்தார். ‘`இப்படியெல்லாம் மறதியா இருக்காதீங்கம்மா’' என்று பதற்றம் விலகாமல் பேசியவரிடம், ‘`வீடுதானே... எங்க போயிடப் போகுது’' என்றேன். இடைமறித்து, ``அப்படிச் சொல்லாதீங்க. விலையுயர்ந்த பொருளைக் காணலைன்னா வீட்டுல வேலைபார்க்கிறவங்க மேலதான் முதல்ல சந்தேகம் வரும். இன்னிக்கு வீட்டுக்கு எலெக்ட்ரீஷியனும் வந்து போயிருக்கார். ஒருவேளை அப்படி யாராச்சும் வெளியாட்கள் எடுத்துட்டுப் போயிருந்தாலும், எங்க மேலதான் பழி வரும். பலரோட ஞாபக மறதிக்கும் பலியான வேலைக்காரங்க எத்தனையோ பேர்'’ என்றார். அதில் உள்ள நியாயம் உணர்ந்து, இப்போது நான் எதையும் எங்கேயும் மறந்து வைப்பதில்லை. - ரஞ்சிதமணி ஜெயசிங், கோவை-36

விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்பும்போது, இதைச் செய்யுங்கள்!
என் தோழி, தன் மகளுக்கு வாங்கியிருந்த புத்தம்புது உள்ளாடைகளில் கையால் ஏதோ தைத்துக்கொண்டிருந்தார். ``புதுத்துணியில என்ன தைக்கிறாய்?’' என்றேன். “பொண்ணு வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறா. அங்கே மத்த பொண்ணுங்களும் இவ பயன் படுத்துற அதே பிராண்டு, டிசைன், சைஸ் ஆடை, உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம். துணிகள் மாறிப்போகலாம். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்க உள்ளாடை, ஆடைகள்ல உள்பக்கமா அடையாளத்துக்காக தையல் போடுறேன்’' என்றார். விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் பின்பற்றலாமே! - இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி
மாமியாரானால் சாமியாராகிவிட வேண்டுமா?!
என் தோழி தன் மகனுக்குப் பெண் பார்த்து முடித்திருந்தார். அப்போது அவர் வீட்டுக்கு வந்திருந்த சில பெண்கள், அவர் நச்சென்று நேர்த்தியாக உடை அணிந்திருந்ததைப் பார்த்து விட்டு, ``இந்தா... உனக்கு மருமகள் வந்தாச்சு. இனி நீ வயசுப் பெண் போல எல்லாம் உடுத்தக் கூடாது, அலங்கரிச்சுக்கக் கூடாது. ஜடையை கொண்டையா போட்டுக்கோ. வொர்க் பண்ணின பிளவுஸை எல்லாம் விட்டுடு. கழுத்தை க்ளோஸா தைச்சுக்கோ. பெரிய பொட்டா வை'’ என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போக, ‘`மாமி யாரானால் சாமியாராகிடணுமா? எனக்குப் பிடிச்சிருக்கு, இப்படித்தான் இருப்பேன்’' என்று தோழி சிரித்துக்கொண்டே நறுக்கென்று சொல்லிவிட்டார். அனைவரும் முணுமுணுத்தபடி சென்றுவிட்டார்கள். மகள்களை திருமணம் செய்துகொடுக்கும் அம்மாக்களையும் இப்படித் தான், `மருமகன் வந்தாச்சு, இனி ஜிமிக்கி போடக் கூடாது, கொலுசு போடக் கூடாது’ என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் சிலர். அவரவர்க்கு பிடித்தபடி இருக்கட்டும்... அதைப் பற்றி நாம் பேசாதிருப்பதுதான் நாகரிகம். - இந்திராணி தங்கவேல், சென்னை-126

இதைப் பேசும் பெற்றோரை எப்படி திருத்துவது?
என் தோழியின் இரண்டாவது மகள் அன்று அழுதபடி இருந்தாள். தோழியிடம் கேட்டபோது, ``வீட்டுக்கு வந்திருந்த வங்ககிட்ட, `ரெண்டாவது குழந்தை வேணாம்னு அபார்ஷன் செய்ய நினைச்சோம். ஆனாலும் இவ பிறந்துட்டா’னு நான் பேசிட்டு இருந்ததை அவ கேட்டுட்டா. ‘என்னைக் கொல்லப் பார்த்தீங்களா? அப்போ நான் உங்களுக்குப் பிடிக்காம வந்து பிறந்துட்டேனா?’னு ஒரே அழுகை’’ என்றார். குழந்தைகள் முன் இதுபோன்ற விஷயங்களைப் பேசினால் அது அவர்கள் பிஞ்சு மனதில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணராத பெற்றோர்களை எப்படி திருத்துவது? -- அமுதா, அரவக்குறிச்சிப்பட்டி

சாப்பிடும்போது... ரிமோட்டை என்ன செய்ய வேண்டும்?!
என் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, நாங்கள் எல்லோருமாக சாப்பிட உட்கார்ந்ததும் டிவியை ஆஃப் செய்துவிட்டார். காரணம் கேட்டபோது, ‘`டாய்லெட் விளம்பரம் வர்றது, சீரியல்ல பெண்கள் பழிவாங்கும் டயலாக் பேசுறதுனு... சாப்பிடுற நேரத்துல இதையெல்லாம் பார்க்க வேண்டாம்னு டிவியை ஆஃப் பண்ணி ரிமோட்டை தூரத்துல வெச்சிடுறது வழக்கம்'’ என்றார். சரி என்றே தோன்றியது எனக்கு. - ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி
உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com