உலகப் பொது மறையான திருக்குறள் நூல் பப்புவா நியூ கினியா நாட்டின் அதிகாரபூர்வ மொழியில் மொழியாக்கம் செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூலம் வெளியிடப்பட்டது.
இது எப்படி சாத்தியமானது? யார் இதைச் செய்தார்கள்? திருக்குறள் மீது இவர்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது? அந்த நாடு எங்கே உள்ளது? அங்கு தமிழர்கள் இருக்கிறார்களா? - செய்தியையும் காட்சியையும் ஊடகங்களில் பார்த்த பின்னர் இப்படி பல கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அவற்றைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற G7 நாடுகளின் உச்சி மாநாட்டில் நம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதன் பின்னர், சுமார் ஏழரை மணி நேரம் பப்புவா நியூ கினியா என்ற நாடு நோக்கி விமானத்தில் பயணம் செய்தார். இந்த நாடு இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ளது. இது 1975-ம் ஆண்டுதான் ஆஸ்திரேலியா விடமிருந்து விடுதலை பெற்றுத் தனி சுதந்திர நாடானது.
பப்புவா நியூ கினியா 4,62,840 கிலோ மீட்டர் பரப்பளவுடன் தீவு நாடுகளில் மூன்றாவது பெரிய நாடு. உலகின் மிகப் பெரிய வாழை இந்த நாட்டின் மலைகளில்தான் உள்ளது. பாம்பு, தேள் மாதிரி விசத்தன்மையுள்ள பறவைகள் எனப் பல அதிசயங்களும் இந்த நாட்டில் உண்டு. பப்புவா நியூ கினியா 22 மாநிலங்களைக் கொண்டது. இந்த நாட்டின் தலைநகரம் ஃபோர்ட் மோரேஸ்பி (Port Moresby).
நம் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஃபோர்ட் மோரேஸ்பி சென்றடைந்தார். அங்கு இந்த நாட்டின் பிரதமர் ஜெய்ஸ் மராபே (James Marape) நம் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தார். 76 வருட சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்தியப் பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறை. இருதரப்பு நல்லுறவை மேம்படுத்த இவர் ஜெய்ஸ் மராபேவுடன் 14 பசிபிக் தீவு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

பாப்புவா நியூ கினியாவில் டொக் பிசின் (Tok Pisin), கிரி மற்றும் மோட்டு (Hiri & Motu) ஆகிய மூன்றும் அதிகாரபூர்வ மொழிகள். இருப்பினும் டொக் பிசின் மொழியைத்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.
நேற்று டொக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை நம் பிரதமரும் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜெய்ஸ் மராபேவும் (James Marape) இணைந்து வெளியிட்டனர். இந்தப் புத்தகத்துக்கு அந்த நாட்டுப் பிரதமர் ஜெய்ஸ் மராபே அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பம்சம்.
இந்தப் புத்தகத்தை டொக் பிசின் மொழியில் எழுதியது யார்? பப்புவா நியூ கினியா நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் அவரின் மனைவி சுபா அபர்ணா சசீந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்! ஆம்... இவர்கள் தமிழர்கள். இவர்கள் 1999-ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் இந்த நாட்டின் மேற்கு நியூ பிரிட்டன் என்ற மாநிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நாட்டு மக்களிடையே நன்கு பழகி டொக் பிசின் மொழியைத் திறம்படக் கற்றுக்கொண்டனர்.

2007-ம் ஆண்டு சசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ கினியாவின் குடிமகனாகினார். கூடவே அந்த மாநில மக்களுக்கு நிறைய சேவைகள் புரிந்தார். பின்னர், அந்த மாநிலத்தில் தேர்தலைச் சந்தித்து மூன்று முறை ஆளுநராக வெற்றி பெற்றார். இப்போதும் இவர்தான் மேற்கு நியூ பிரிட்டன் மாநிலத்தை ஆளுநராக ஆட்சி செய்து வருகிறார். இந்த நாட்டின் மாநில ஆளுநர் பதவி நம் முதலமைச்சர் பதவிக்கு இணையானது!
சசீந்திரன் முத்துவேல் சிவகாசியில் பிறந்தவர். இவரின் மனைவி அபர்ணா சசீந்திரன் திருநெல்வேலியில் பிறந்தவர். இந்தத் தம்பதி உலகப் பொதுமறையான திருக்குறளைத் திறம்பட டொக் பிசினில் மொழிபெயர்த்து புத்தகமாக உருவாக்கினர்.
இந்தப் புத்தகம் இந்தியக் கலாசாரம் மற்றும் நற்சிந்தனைகளை பப்புவா நியூ கினியா மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும், இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும். சமூகச் சேவையுடன் இணைந்த இந்தத் தம்பதியின் வாழ்வு இன்றைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.

சுமார் 518 வருடங்களுக்கு முன் முதன்முதலில் திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 297 வருடங்களுக்கு முன்னர் இது லத்தீனிலும், 256 வருடங்களுக்கு முன் ஃபிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அடுத்து 27 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திருக்குறள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவரை 43 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெருமையான செய்தி. ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் தம்பதி 44 -வது மொழியாக, டொக் பிசினில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர்.
(சசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ கினியா ஆளுநரானது எப்படி? தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்)