லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

துணையாக நின்றார்... வென்றார்! - தீபா

 தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா

நம்பிக்கை

ஊரடங்கிலும் ஓய்வில்லாமல் சுழன்றுகொண்டிருக் கிறார்கள் செய்தியாளர்கள்.

இடையூறுகளுக்கு நடுவிலும் மக்களுக்குச் செய்திகளை கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன ஊடகங்கள். ஆனால், இந்தக் காலகட்டத்திலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை அசைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்.

கோவையில் அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட்டதாக ‘சிம்ப்ளிசிட்டி’ இணையதள நிறுவனர் ஆண்ட்ரூ சாம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இவரின் விடுதலைக்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டவர், அந்த இணையதளத்தின் நிர்வாக இயக்குநரும் ஆண்ட்ரூ சாமின் மனைவியுமான தீபா. அவரை நேரில் சந்தித்தோம்.

துணையாக நின்றார்... வென்றார்! -  தீபா

``நான் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது அப்பாவுக்குத் தொழிலில் நஷ்டமாகி, கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாத நிலை. கம்ப்யூட்டர் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தேன். அங்குதான் ஆண்ட்ரூவைச் சந்தித்தேன். அவரும் என்னைப் போலவேதான். கம்ப்யூட்டர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டே படித்துக் கொண்டிருந்தார். கடினமான அந்தச் சூழ்நிலையிலும் எதைப் பற்றியும் குறை சொல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை நோக்கிப் போய்கொண்டிருந்தார் ஆண்ட்ரூ.

இப்போது வரை அந்த குணம் மாறவேயில்லை. அதுதான் அவர்மீது எனக்குக் காதலையும் வரவைத்தது. இருவரும் ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிறகு பி.பி.ஓ தொடங்கினோம். குழந்தைகள் பிறந்தவுடன் சாம் தொழிலை கவனித்துக்கொண்டார்.

சிறுவயதிலிருந்தே எனக்கு நாளிதழ் படிக்கும் பழக்கம் இருக்கிறது. நான் உள்ளூர் செய்திகள் படிப்பேன். சாம் உலகச் செய்திகளைப் படிப்பார். அப்படிப் படிக்கும்போது, நல்ல விஷயங்களை மக்களுக்குக் கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தில்தான் ‘சிம்ப்ளிசிட்டி’யைத் தொடங்கினோம்.

ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரருடன் இணைய இதழை லாஞ்ச் செய்தோம். கோவையின் அனைத்து முகங்களையும் பதிவு செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் அணி விரிவடைந்தது.

 கணவர் ஆண்ட்ரூ சாமுடன்...
கணவர் ஆண்ட்ரூ சாமுடன்...

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, ரயில்வே என்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகச் செய்தியாளர்களை நியமித்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்திகள் மூலமாக, லட்சக்கணக்கான கோவை மக்களைச் சென்றடைந்தோம்.

எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் எங்கள் போட்டோகிராபர் பாலாஜியை போலீஸ் விசாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்ததும் பல செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அதில் எங்கள் செய்தியாளர் ஜெரால்டை மட்டும் காரணம் சொல்லாமலே ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சாமையும் வரச்சொன்னார்கள். ‘உரிய காரணத்தைச் சொல்லுங்கள் வருகிறோம்’ என்று சாம் கூறினார். காவல்துறையினரோ ‘நீங்கள் வராவிட்டால் செய்தியாளர்களைக் கைது செய்துவிடுவோம்’ என்றனர். உடனடியாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்த சாம், என்னிடமும் குழந்தைகளிடமும், ‘நான் திரும்பி வர தாமதமாகலாம். கைது செய்தாலும் செய்துவிடுவார்கள். எதுவாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்வோம்’ என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி சென்றார். சொன்னது போலவே சாமை கைது செய்தனர்.

துணையாக நின்றார்... வென்றார்! -  தீபா

பிறகுதான் காரணம் தெரிய வந்தது. பயிற்சி மருத்துவர்களுக்கான உணவுப் பிரச்னை மற்றும் ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு ஆகிய இரண்டு செய்திகளும் அரசுக்கு எதிராக இருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு செய்திகளையும் அனைத்து ஊடகங்களுமே வெளியிட்டுள்ளன. அப்போதுதான் இது திட்டமிட்ட கைது என்பதை உணர்ந்தேன். காவல்துறை விசாரணை நடத்திய விதம், வழக்கு பதிவு செய்த பிரிவுகள் ஆகியவற்றைக் கவனித்தாலே சாமானியனுக்கும் இதில் அரசியல் இருப்பது தெரியும்” என்கிறவர் அதன்பின் நடந்தவை பற்றிப் பேசுகிறார்.

“சாம் கைதானவுடன் பலரும், ‘தனி ஒரு பெண்ணாக நீ என்ன செய்ய முடியும்... அவர்களுடன் சமரசம் பேசுங்கள்' என்றனர். ஆனால், நாங்கள் சமரசம் என்பதே இல்லை. சட்டப்படியே எதிர்கொள்வோம் என்று முடிவு செய்தோம். மாநிலம் தழுவிய அளவில் பத்திரிகையாளர்கள் எங்களுக்குத் துணை நின்றனர்.

2020 ஏப்ரல் 27... என் வாழ்வில் மறக்க முடியாத நாள்... அன்று எங்களின் 15-வது ஆண்டு திருமண நாள். எங்கள் மகன் சூர்யாவுக்கும் அன்றுதான் பிறந்தநாள்.

இந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக சாம் இல்லாத திருமண நாள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றாலும், தொடர் முயற்சியின் பலனாக சாமுக்கு ஜாமீன் கிடைத்தது. அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்வில் பல பிரச்னைகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறோம். இருந்தபோதும் எங்களது வலிமையைத் தெரிந்துகொள்வதற்கு இந்தப் பிரச்னை பெரும் உதவியாக இருந்தது. `சிம்ப்ளிசிட்டி' எப்போதும் தவறான செய்திகளை வெளியிட்டது கிடையாது. இனியும் அப்படி நடக்காது. எங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு என் நன்றிகள்” என்கிறார் தீபா.