பிடித்த வேலையைச் செய்ய, சிலர் படித்த வேலையை விடுவது குறித்து கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், தன்னுடைய கனவு வேலையான டீக்கடையை ஆரம்பிக்க, பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் செய்து வந்த வேலையை விட்ட ஷர்மிஸ்தா கோஷ் என்ற பெண்ணின் கதை, லிங்க்டுஇன்னில் வெளிவந்து, தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரிகேடியர் சஞ்சய் கண்ணா என்பவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ``சில நாள்களுக்கு முன்பு டெல்லி கான்ட் கோபிநாத் பஜாருக்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில் டீ குடிக்க வேண்டும் எனத் தோன்றியது.
அங்கே தள்ளுவண்டியில் சிறிய டீக்கடையை நடத்தும் ஆங்கிலம் பேசும் பெண்ணைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். ஷர்மிஸ்தா கோஷ் என்ற அந்தப் பெண் முதுகலை ஆங்கிலம் படித்துவிட்டு, பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது அந்தப் பணியைத் துறந்துவிட்டு, டீ விற்கத் தொடங்கியுள்ளார்.
அந்தப் பெண்ணோடு பாவனா ராவ் என்ற பெண்ணும் டீக்கடையை நடத்த உதவி செய்கிறார். இவர்கள் இருவரும் டீக்கடையை நடத்துவதில் பார்ட்னர்களாகச் செயல்படுகின்றனர். அதோடு டீக்கடையில் உதவி புரிய மற்றொரு பெண்ணையும் பணிக்கு நியமித்திருக்கிறார். இவர்கள் சாயங்கால வேளையில் ஒன்றாக வந்து டீக்கடையை நடத்திவிட்டுச் செல்கின்றனர்.

நீண்ட ஓட்டத்தில் சாதிப்பதற்கு உயர் தகுதிகள் மற்றும் தகுதியான வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், சிறிய வழிகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்று சமூக வலைதளத்தில் டிரெண்டானது.
`வேலையில் சிறியது பெரியது இல்லை' எனப் பலரும் இவரது பதிவுக்கு ஆதரவு தெரிவித்து கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் `கனவு இருக்கும்போது அதை நோக்கி தன்னுடைய படிப்பையும் உழைப்பையும் முதலில் இருந்தே செலுத்தி இருக்கலாமே' எனத் தங்களது முரண்பட்ட கருத்துகளையும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
உயர் பதவிகளில் இருப்பவர்கள், அந்த வேலையை விட்டுவிட்டு தங்களது கனவு வேலையை நோக்கி நகர்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?