
டர்ட் ரேஸ் சாம்பியன் வால்டோ


பொதுவாக 7 வயதில் குழந்தைகள் சைக்கிள்தான் ஓட்டத் தொடங்குவார்கள். ஆனால், கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் வால்டோ, ரேஸிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறான். அதுவும் டர்ட் பைக் ரேஸில். 3–ம் வகுப்புப் படிக்கும் வால்டோ மண், மேடுகளில் சீறிப்பாயும் டர்ட் பைக் ரேஸிங்கின் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாநிலம் கடந்து தடம் பதித்துக் கொண்டிருக்கிறான்.
போத்தனூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ட்ரெய்னிங் ட்ராக்கில், தனது கவாஸாகி 65 சிசி கியர் பைக்கில் பறந்து கொண்டிருந்த வால்டோவிடம் பேசினேன்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு பைக் ரொம்பப் பிடிக்கும். குட்டிக் குட்டி பைக் ஓட்டிட்டு இருப்பேன். ரேஸிங் வீடியோ நிறைய பார்ப்பேன். 5 வயசுல இருந்து ட்ரெய்னிங் எடுத்துட்டு இருக்கேன். சின்னதா ஒரு நாள் கியர் பைக்லதான் ஆரம்பிச்சேன். இப்ப கவாஸாகி ஓட்டிட்டு இருக்கேன். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனந்த் அங்கிள் வேர்ல்ட் சாம்பியன். அவரைப் பார்த்து எனக்கும் சாம்பியன் ஆக ஆசை வந்துடுச்சு. அன்டர் 14 கேட்டகிரிலதான் ரேஸ்ல கலந்துக்கிட்டு இருக்கேன். முதல் ரேஸ்ல 5–வது இடம் பிடிச்சேன். அதுல 13 பேர் கலந்துக்கிட்டாங்க. நிறைய பேர் என்னையவிட பெரிய பைக் வெச்சுருந்தாங்க. இருந்தாலும் டீசன்டா பெஃர்பார்ம் பண்ணதா சியர் பண்ணாங்க! அண்டர் 14 கேட்டகிரில, என்னைய விட பெரிய பசங்கதான் அதிகம் கலந்துக்குவாங்க. அப்ப நான் 1–ம் வகுப்புதான் படிச்சுட்டு இருந்தேன். இருந்தாலும் நல்லா ட்ரெய்னிங் எடுத்தா அவங்களை பீட் பண்ணிடலாம். இதுவரை 15 ரேஸ்ல கலந்துருக்கேன். ரெண்டு ரேஸ்ல முதல் இடம் பிடிச்சு ஜெயிச்சுருக்கேன். நிறைய ரேஸ்ல 3–வது இடம் பிடிச்சுருக்கேன்.
அண்டர் 14–ல என் வயசுல 3 பேரு இருக்கோம். எங்களைத் தவிர எல்லாரும் பெரியவங்க. ரேஸிங் முடிஞ்சவுடன் அவங்களும் எங்களை சியர் பண்ணிப் பேசுவாங்க. வெள்ளி, சனி, ஞாயிறுனு வீக் எண்ட் முழுசும் ட்ரெய்னிங்தான். அடுத்து எம்.ஆர்.ஆஃப் ரேஸிங்காக இன்னும் கஷ்டமான ட்ரெய்னிங்ல எடுத்தேன். இப்ப நிறைய புது ட்ரிக்ஸ் கத்து வெச்சுருக்கேன். பைக்கோட பேஸிக் மெயின்டனன்ஸ் எல்லாம் நானே பண்ணிடுவேன். ரேஸிங்ல அப்பாதான் எனக்கு ரொம்ப சப்போர்ட். நான் ரேஸ் ஓட்டும்போது, அது முடியற வரை அம்மா ப்ரேயர் பண்ணிட்டே இருப்பாங்க. என்ன சந்தேகமா இருந்தாலும் ஆனந்த் அங்கிள்கிட்ட கேட்டுப்பேன். இது எல்லாமே எனக்கு நல்ல என்கரேஜா இருக்கு. வேர்ல்ட் சாம்பியன் ஆகணும்னு ஆசை. அதே மாதிரி ஐ.பி.எஸ் ஆகணும். ஐ.பி.எஸ் ஆனாலும் ரேஸிங்கை விடமாட்டேன்!” என்றார்.


வால்டோவின் பயிற்சியாளர் ஆனந்த் கூறுகையில், “வால்டோ அப்பாவும் நானும் நண்பர்கள். நான் ரேஸரா இருந்தப்ப அவர் என் பெரிய ரசிகர். நான் எங்க ரேஸிங் பண்ணாலும் அங்க வந்துடுவார். இவன் பொறந்தோனே விளையாட்டுக்கு, ‘ரேஸர் ஆக்கிடலாமா?’னு கேட்டேன். வளர வளர அவனுக்கும் அதுல ஆர்வம் இருந்துச்சு. ஒரு நாள் சின்ன கியர் பைக்கை எடுத்துட்டு வந்து ஒரு ட்ராக்ல அவன ஓட்ட வெச்சோம். ஸ்பீடு பத்தலனு சொன்னான். அப்பறம் அவனுக்குத் தகுந்த மாதிரி ஸ்பீடு ஆகிட்டோம். நான் நிறைய சாம்பியன்ஷிப் அடிச்சாலும், ஒரு கட்டத்துல ஏஜ் பார் ஆகி அடுத்த கட்டத்துக்குப் போக முடியல. இவனுக்கு வயசு நிறைய இருக்கு. பைக் மேல உயிரே வெச்சுருக்கான். அதனால என்ன சொன்னாலும் உடனே உள்வாங்கிக்குவான். ட்ரெய்னிங்ல பெரியவங்க, சின்னவங்கனு எல்லாம் வித்தியாசம் இல்ல. எல்லாருக்கும் ஒரே மாதிரியான ட்ரெய்னிங்தான். பொதுவா பெரியவங்களே ட்ரெய்னிங்ல 10 லெவலுக்கு அப்புறம் டயர்டாகிடுவாங்க. ஆனா, வால்டோ 2-3 மணி நேரமானாலும் ஓட்டிட்டேதான் இருப்பான். நம்ம எவ்ளோ எதிர்பார்ததாலும், அதைவிட ஒரு சதவிகிதம் அதிகமாதான் பண்றான். வயசை மீறின ஒரு பக்குவம் அவனுக்கு இருக்கு.
இவன் வயசுல இருக்கற மத்த பசங்க எல்லாம், ஆட்டோமேட்டிக் பைக்தான் ஓட்டிட்டு இருக்காங்க. இத்தனைக்கும் அவங்க அப்பா எல்லாம் ரேஸர். இவன் மட்டும்தான் கியர் பைக் ஓட்டறான். இந்த வயசுல கியர் கால்குலேசன் எல்லாம் ரொம்பக் கஷ்டம். அதை சரியா படிச்சு, ட்ராக்ல செயல்படுத்தறது பெரிய விஷயம். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகால எல்லாம் ரேஸ்ல கலந்து ஜெயிச்சுருக்கான். நாங்க 26 வயசுல பண்ணதை, இவன் இப்ப பண்ணிட்டு இருக்கான். எதிர்காலத்துல வால்டோ பெயரை நிறைய இடத்துல பார்க்கலாம்!” என்றார்.
வால்டோவின் அப்பா கேசவன்,”நான் சொந்தமா தொழில் பண்ணிட்டு இருக்கேன். சொல்லப்போனா எனக்குத்தான் சின்ன வயசுல இருந்து ரொம்ப ஆர்வம். அப்ப இருந்த சூழ்நிலையில் என்னால, இதுக்குள்ள வர முடியல. ஆனந்த்தான் எனக்குப் பிடிச்ச ரேஸர். அதனால அவரை மாதிரி நம்ம பையனையும் சாம்பியன் ஆக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குத் தகுந்த மாதிரி அவனும் பைக் லவ்வரா வந்துட்டான். மொபைல் எடுத்தாக் கூட பைக் பத்திதான் ஏதாவது பார்த்துட்டு இருப்பான். ஒரு தடவை என் பைக்ல உக்கார வெச்சு, கியர் டெக்னிக்ஸ் பத்திச் சொல்லிக் கொடுத்தேன். இவனுக்காக ஃபிரான்ஸ்ல இருந்து கவாஸகி 65 சிசி இம்போர்ட் பண்ணிருக்கோம். இவன் ஓட்ற இந்த பைக்கைத்தான் 12 வயசு பசங்களும் ஓட்டிட்டு இருக்காங்க. எம்.ஆர்.எஃப் ரேஸ்ல குறைந்தது 7 வயசுல இருந்துதான் கலந்துக்க முடியும். அதுல இப்போதைக்கு இவன் மட்டும்தான் கலந்துருக்கான். அந்த ரேஸை கம்ப்ளீட் பண்ணிருக்கான். இன்னிக்கு நிறைய குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்தும், சரியான கைடன்ஸ் இல்ல. இவனுக்கு கோச், கோ ரைடர்ஸ்னு நிறைய சப்போர்ட் இருக்கு. இப்பவே ஃபிட்னஸ், படிப்புனு எல்லாத்துலயும் சரியா இருக்கான். வாழ்க்கைல பணம் சம்பாதிக்கறதைவிட, பெருசா சாதிக்கணும்னு சொல்லித்தான் வால்டோவை வளர்க்கறோம். அவன் நிச்சயம் நிறைய சாதனை படைப்பான்!.” என்றார்.

கேசவனுடன் பேசி முடிக்கும்போது, அங்கு ட்ராக்கில் பைக் ஓட்டிக் கொண்டிருந்த வால்டோ கீழே விழுந்துவிட்டான். பிறகு எழுந்து வந்தவனிடம், “வலிக்கலையா?” என்று கேட்டோம். “முன்னாடி கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. ஆனா, நம்ம தப்புப் பண்ணதாலதான் விழுந்துருக்கோம். அதைச் சரி பண்ணிக்க ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு. அப்பறம், எப்படியும் வலி இருக்கத்தான் செய்யும். அதுக்காக உக்காந்துட்டா இன்னும் அதிகமா வலிக்கும். அதனால பைக் ஓட்ட ஆரம்பிச்சா, வலி தெரியாது!” என்று மீண்டும் பைக்கில் சீறிப் பாய்ந்தான் அந்தக் குட்டி ரேஸன்.