என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா : அரசக் குடும்பத்தில் வாக்கப்பட்டாலும்..!

மேகன் மார்கள், டயானா, ரோசா
பிரீமியம் ஸ்டோரி
News
மேகன் மார்கள், டயானா, ரோசா

சஹானா

நுங்கம்பாக்கம் காபி ஷாப்பில் வினு, விமல், வித்யா மூவரும் காபியை பருகியபடி அரட்டையை ஆரம்பித்தார்கள்.

“எலெக்‌ஷன் வொர்க் எல்லாம் எப்படிப் போகுதுன்னு பார்த்தீங்களா வித்யாக்கா?”

“இந்தத் தமிழ்நாட்டுல இன்னும் எத்தனை கட்சிகள் உதயமாகப் போகுதோன்னு கவலையா இருக்கு. என் கணவரை முதல்வராக்கணும்னு சொன்ன ராதிகா, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வெச்சிருக்காங்க. ஒருவேளை ஜெயிச்சா, சரத்குமாரை முதல்வராக்கிடுவாரா கமல்?” என்றார் வித்யா.

“ஹாஹா... நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க போல வித்யாக்கா! நான் நீன்னு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி விட்டுட்டு இருக் காங்க. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாம ரெண்டு கட்சிகளும் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!” என்றாள் வினு.

“மேற்கு வங்காளத்திலும் இந்த மாசம் எலெக்‌ஷன் நடக்குது. அசைக்க முடியாத சக்தியா இருந்த இடதுசாரிகளை அசாத்திய மான முறையில வென்று சாதனை படைச்ச வங்க மம்தா. ஆனா, பத்து வருஷமா முதல்வரா இருக்கிற மம்தா தீதிக்கு இந்த எலெக்‌ஷன் அவ்வளவு ஈஸியா இருக்காதுபோல. இடது சாரி கட்சிகளும் விட்டதைப் பிடிக்கும் ஆவேசத்தோடு இருக்காங்க. தேர்தலுக்கு முன்னாடியே மம்தா கட்சியை பலவீனப் படுத்தற வேலைகள்ல பிஜேபி இறங்கிருச்சு. மம்தா இந்த முறை கடினமா போராட வேண்டியிருக்கும்னு கொல்கத்தால இருக்கிற என் ஃபிரெண்ட் ரோஷிணி தாஸ் குப்தா சொன்னாங்க” என்றாள் விமல்.

மேகன் மார்கள், டயானா, ரோசா
மேகன் மார்கள், டயானா, ரோசா

“ஆமா, விமல். இடதுசாரிகள் ப்ளஸ் காங்கிரஸ் கூட்டணி சார்புல நடத்தின பிரமாண்ட கூட்டத்தைப் பார்த்தீங்களா... அந்தக் கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன பிஜேபி ஆதரவு குரூப், ‘இது பிஜேபி நடத்தின கூட்டம்’னு சமூக ஊடகங்கள்ல போட்டோக் களைப் பரப்புச்சு. அப்புறம் அது பொய்யின்னு எதிர்த்தரப்பு போட்டுத்தாக்கினதும் அந்தப் படங்களை நீக்கிட்டாங்க” என்றாள் வினு.

“சரி, மகளிர் தினம் எப்படிப் போச்சு உங்களுக்கு?” என்று கேட்டார் வித்யா.

“பண்டிகை மாதிரி பார்க்கறவங்க எல்லாம் விஷ் பண்ணினாங்க. உழைக்கும் மகளிரை பெருமைப்படுத்தறதுக்காக வெளிநாடுகள்ல உருவாக்கப்பட்ட நாள்தான் இது. இப்ப உலக அளவுல ஒட்டுமொத்த மகளிரையும் கொண்டாடற நாளா மாத்திட்டாங்க. ஒரு வகையில இதுவும் நியாயம்தான். ஏன்னா உழைக்காத மகளிரை விரல் விட்டு எண்ணுற நிலைமைதானே இப்போதைக்கு இருக்கு” என்றாள் விமல்

“இதுவும் சரியான பார்வைதான். சபாஷ்!” - பாராட்டினார் வித்யா.

“இந்தியாவுல 15-18 வயசுல இருக்கிற இளம்பெண்கள்ல 40 சதவிகிதம் பேர் ஸ்கூலுக்குப் போறதில்லைங்கிறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு வித்யாக்கா...” வருத்தமாகச் சொன்னாள் வினு.

“மறுபடியும் பின்னோக்கிப்போற மாதிரி இருக்கு. இந்தியாவுல 85 சதவிகிதகப் பெண்கள் பாலினப் பாகுபாடுனால பதவி உயர்வு, ஊதிய உயர்வு எல்லாத்தையும் இழக்கறாங்க. ஆணும் பெண்ணும் ஒரே வேலையைச் செஞ்சாலும் ஊதியம் ஒண்ணா இல்லைங்கிறது அடுத்த அதிர்ச்சி. ஒரு மணி நேரத்துக்கு ஆணுக்குக் கொடுக்கிற சம்பளத்தில் 65 சதவிகிதம்தான் பெண்ணுக்குக் கிடைக்குதுன்னு ஆக்ஸ்ஃபாம் அறிக்கை சொல்லுது வித்யாக்கா. இதில மகிழ்ச்சியா மகளிர் தினம் கொண்டாட என்ன இருக்குன்னு சொல்லுங்க?” என்று உணர்ச்சி வசப்பட்டாள் விமல்.

“விமலை கூல் பண்ணுவோமா வித்யாக்கா? டைம் இதழ் அட்டையில டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களைப் போட்டு, அவங்களை அங்கீகரிச்சதோட, உல கத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்திருக்கு!”

“நானும் பார்த்தேன் வினு. ஒரு பெண் கைக்குழந்தை, மாமியார், பாட்டின்னு குடும்பத் தோட அதுல நிக்கிறாங்க!” என்றார் வித்யா.

“சரி, விமல் இந்தப் புகழ்பெற்ற கருத்தைச் சொன்னவர் யார்னு கண்டுபிடிச்சா இன்னொரு காபி வாங்கித் தரேன்... அசையாத வரை பிணைத்திருக்கும் சங்கிலியை உணர முடியாது.”

“ரோசா லக்சம்பர்க். ஜெர்மனி கம்யூ னிஸ்ட். க்ளாரா ஜெட்கினுடன் சேர்ந்து பெண் ணுரிமைகளுக்காகப் போராடியிருக்காங்க. இப்ப எதுக்குக் கேட்டே?” என்றாள் விமல்.

“ரோசாவோட 150-வது பிறந்த நாள். அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி பண்ணி யிருக்காங்க. அரசியல் புத்தகங்களை எழுதி யிருக்காங்க. சித்தாந்தவாதியா மதிக்கப்படுற பெண்கள்ல இவங்க முக்கியமானவங்க. 48 வயசுல படுகொலை செய்யப்பட்டாங்க. இறந்த துக்குப் பின்னால இவங்க புகழ் உலகமெல்லாம் பரவுச்சு” என்றாள் வினு.

“நானும் இவங்களைப் பத்திக் கொஞ்சம் படிச்சிருக்கேன் வினு. அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு பெரிய ஆளுமையா உயர்ந்திருக்காங்க ரோசா. அதே மாதிரிதான் நாசாவில் வேலை செய்யும் டயானா ட்ருஜில்லோவும் ரொம்ப சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. சமீபத்துல மார்ஸ்ல சக்ஸஸ்ஃபுல்லா லேண்ட் ஆன பெர்சிவீரன்ஸ் ரோவர் திட்டத்தோட ஃப்ளைட் டைரக்டர் இந்த டயானா. ஏரோஸ்பேஸ் இன் ஜினீயராவும் இருக்காங்க” என்றார் வித்யா.

“ஓ... இவங்க பின்னணி என்னன்னு சொல்லுங்க வித்யாக்கா...” - கேட்டாள் விமல்.

“கொலம்பியால பிறந்தவங்க. இவங்களுக்கு 17 வயசானபோது பேரன்ட்ஸ் பிரிஞ்சிட்டாங்க. வெறும் 300 டாலர்களை எடுத்துக்கிட்டு அம்மாவோட அமெரிக்கா போயிட் டாங்க. கையில் பணமோ, தங்க இடமோ இல்ல. பகல்ல வீட்டு வேலை களையும் ராத்திரி பாத்ரூம் கழுவுற வேலையும் செஞ்சிருக்காங்க. ஒரு முட்டையை வேகவெச்சு, அம்மாவும் மகளும் ஆளுக்குப் பாதியா சாப்பிட்டிருக்காங்க. கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டுக்கு குடி போனாங்க. அப்புறம் படிச்சாங்க. 2007-ம் வருஷம் நாசாவுல சேர்ந்து இன்னிக்கு இவ்வளவு பெரிய பொறுப்புல இருக்காங்க. ‘ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்திக்கிட்டேன். நான் செய்யற ஒவ்வொரு செயல்லயும் என் நாட்டை யும் என் நாட்டு மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்துறேன். நான் ஆரம்பத்துல செஞ்ச வேலைகளைப் பத்தி ஹேப்பியா ஷேர் பண்றேன். என்னைப் பார்த்து நாலு பேர் தன்னம்பிக்கையோட முன்னேறினா போதும்கிறாங்க டயானா” - விவரித்தார் வித்யா.

“கிரேட்! இங்கிலாந்து டயானாவின் ரெண்டாவது மகன் ஹாரியும் அவர் மனைவி மேகனும் ஓபரா வின்ஃப்ரே ஷோல பேசியிருக்குற பேச்சுகளைப் பார்த்து, அரசக் குடும்பம் ஆடிப் போயிருக்கு. மேகன் கர்ப்பமா இருந்தப்ப, குழந்தை கறுப்பா பிறந்துடுமோனு அரண்மனையில பேச்சு நடந்திருக்கு. பிறந்த பின்னால அரசக் குடும்பத்தோட பெயரைக் குழந்தைக்குச் சூட்டல. இதனால குழந்தையோட பாது காப்புக்கு அச்சுறுத்தல் வரும்னு மேகன் நினைச்சிருக்காங்க. பல விஷயங்கள்ல அதிருப்தியடைஞ்ச மேகன், தற்கொலை எண்ணத்துக்கும் போனதா சொல்லிருக்காங்க” என்றாள் வினு.

“அடக் கொடுமையே... இளவர சரையே கல்யாணம் பண்ணினாலும் பிரச்னை தானா...” ஆச்சர்யப்பட்டார் வித்யா.

“அரசக் குடும்பத்தில் அரசி மட்டுமே முடிவு எதையும் எடுக்க முடியாது. அவங்க குடும்பத்துக்குனு தனியா சட்டத்திட்டங்கள், அதை வகுக்கிற ஆட்கள் இருக்காங்க வித்யாக்கா. பேட்டியைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சதாவும் இந்த விஷயங்கள்ல அதிக அக்கறை கொள்வதாகவும் சொல்லிருக்காங்க ராணி. அரசக் குடும்பத்தோட அன்பான உறுப்பினர்களா ஹாரியும் மேகனும் அவங்க குழந்தை ஆர்ச்சியும் எப்பவும் இருப்பாங்கன்னும் சொல்லி யிருக்காங்க” என்றாள் வினு.

“ஓ... அரசக் குடும்பத்தில் வாக்கப் பட்டாலும் கஷ்டப்படணும் போல. சரி, நம்ம தடகள வீராங்கனை ஹிமா தாஸுக்கு வாழ்த்து சொல்லிட லாம். அஸாம் மாநில டிஎஸ்பியா ஆயிருக்காங்க. தன் மிகப் பெரிய கனவு நனவாயிருச்சுன்னு சொல்லிருக்காங்க ஹிமா!” என்றாள் விமல்.

“21 வயசுலேயே லட்சியத்தை அடைஞ்சிட்டாங்க. ஒருபக்கம் பெண்கள் இப்படி உயரத்துக்குப் போனாலும் இன்னொரு பக்கம் பெண்களின் நிலை மோசமா போயிட் டிருக்கு. எல்லாப் பெண்களுக்கும் எல்லாமும் கிடைக்கிற வரை மகளிர் தினத்தின் தேவை இருந்துட்டேதான் இருக்கும். அதுக்காகத் தொடர்ந்து போராடிட்டுதான் இருக்கணும். சரி, கிளம்பலாமா...” என்று எழுந்தார் வித்யா.

வினுவும் விமலும் வித்யா பின்னால் சென்றார்கள்.

அரட்டை அடிப்போம்...