
ஸ்ரீராமர் வனவாசம் முடிந்து சீதாதேவி மற்றும் சகோதரர் லட்சுமணனோடு அயோத்தி திரும்பினார். அப்போது அரண்மனையில் அன்னை கௌசல்யா காத்திருந்தார்.
தீபங்களும் பெண்களும் எப்போதும் இணைத்தே பேசப்படுபவர்கள். தீபத்தை மகாலட்சுமியின் அம்சமாக ‘தீபலட்சுமி’ என்று சொல்லி வழிபடுவது நம் மரபு. தெய்வங்கள் அனைத்தையும் விளக்கில் ஆவாஹனம் (இருக்கச்செய்தல்) செய்ய முடியும். அதில் சுடர்விடும் ஜோதியே அந்த தெய்வத்தின் திருமுகம். இன்று ஆலயம்தோறும் நடைபெறும் விளக்கு பூஜையின் தாத்பர்யம் இதுதான்.
‘விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும்’ என்று பொதுவாகச் சொல்வது வழக்கம். ‘ஏன் ஆண் விளக்கேற்றி னால் விளக்கு எரியாதா’ என்று கேட்பவர்கள் உண்டு. ஆனால், பெண் ஒரு குடும்பத்தில் விளக்கேற்றுவது என்பது அந்தக் குடும்பத்தின் நலனை அவள் பேணுகிறாள் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் மொழி.
கம்பர் சொல்லும் காரணம்!
சீதையின் அழகை வர்ணிக்க வரும் கம்பன் ‘பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு’ என்று பாடுகிறான். ‘பெண்களில் தீபம் போன்ற பேரெழிலை உடையவள்’ என்று இதற்குப் பொருள். விளக்கு, எண்ணெய், திரி இதெல்லாம் தீபத்துக்கு உடல் என்றால் அதில் ஒளிரும் சுடர்தான் அதன் உயிர். விளக்கு என்றாலே அழகுதான். ஆனால் அதில் சுடர் இல்லை என்றால் அந்த அழகுக்குப் பெருமை இல்லை. அப்படிச் சுடர்விடும் தீபமாக விளங்கி தனக்கும் ஒளி உண்டாக்கித் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் வெளிச்சமாக இருப்பது தீபம். அத்தகைய தீபம் போன்றவள் பெண் என்கிறார் கம்பர்.
ஸ்ரீராமர் வனவாசம் முடிந்து சீதாதேவி மற்றும் சகோதரர் லட்சுமணனோடு அயோத்தி திரும்பினார். அப்போது அரண்மனையில் அன்னை கௌசல்யா காத்திருந்தார். அவர் சீதையை நோக்கி, `சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்’’ என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாளாயிற்று என்கிறார்கள். புராணத்தின் படி நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த நாளே தீபாவளி. இப்படி தீபாவளிக்குப் பல கதைகள் உண்டு.

அட்சயத் திருதியை போன்ற `தந்தேராஸ்’!
கதைகளும் காரணமும் எதுவானாலும் தீபாவளிப் பண்டிகை நாளில் நம் உள்ளத்தையும் இல்லத்தையும் நிறைப்பவள் அன்னை மகாலட்சுமியே. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. ஐப்பசி மாதத் தேய்பிறை திரயோதசி தொடங்கி சதுர்த்தசி, அமாவாசை, வளர்பிறை பிரதமை, திவிதியை ஆகிய நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான திரியோதசி திதி அன்று `தந்தேராஸ்’ என்னும் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் அட்சயத் திரிதியை போன்ற அதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டுக்குத் தேவையான உலோகப் பொருள்கள் வாங்குகிறார்கள். குறிப்பாக இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. மறுநாள் சதுர்த்தசி தினத்தன்று மாலை வீட்டில் பூஜை செய்து அன்னை மகாலட்சுமியைத் தங்கள் இல்லத்துக்கு அழைக்கிறார்கள். மூன்றாவது நாள் தீபாவளி. இந்த நாளில், புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவார்கள். லட்சுமி குபேர பூஜை செய்து என்றும் செல்வம் தங்களோடு தங்க வேண்டிக்கொள்வர். நான்காவது நாள் ‘கோவர்தன் பூஜை’ நாளாகும். கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து நின்ற தீரத்தைக் கொண்டாடும் நாள். இந்த நாளில்தான் வணிக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடங்கும் வழக்கம் உண்டு.
புத்தொளி, புதுவாழ்வு!
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராஞ்சல் மாநிலங் களில் இந்த நாளில் ராமர் அம்புபோடும் திருவிழா நடைபெறும். ராவணனை சம்ஹாரம் செய்து ஸ்ரீராமர் பெற்ற போர் வெற்றியைக் கொண்டாடும் திருநாள் இது.
தீபாவளி வெறும் கொண்டாட்டத்தின் தினம் அல்ல. இந்த நாளில்தான் கேதார கௌரி விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத தேய்பிறை தசமி தொடங்கி, ஐப்பசி அமாவாசை நாளான தீபாவளி அன்று நிறைவு பெறும் இந்த விரதத்தைக் கடைப் பிடித்தே அன்னை பார்வதி, சிவனின் இட பாகத்தில் அமரும் பேறு பெற்றாள்.
இப்படி வழிபாடுகளால் நிறைந்து அருள் தரும் பண்டிகை தீபாவளி. தீபாவளி நன்னாளில் எண்ணெயில் மகாலட்சுமி தேவியின் சாந்நித்தியமும் சீயக்காயில் சரஸ்வதி தேவியின் சாந்நித்தியமும் நீரில் கங்கையின் சாந்நித்தியமும் நிறைந்திருக்கும். அந்த நாளில் நாம் உடுத்திக்கொள்ளும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவின் அருள் நிறையுமாம். பூஜைக்குப் பயன்படுத்தும் மலர் களில் தேவதைகள் நிறைந்திருப்பார்கள். இப்படி தீபாவளி நாளின் அதிகாலையில் நம் வீடே தெய்வங் களின் வாசஸ்தலமாகத் திகழும். இப்படிப்பட்ட அற்புத மான ஒரு நாளைக் கொண்டாட உற்சாகத்துடன் தயாரா வோம். தீபாவளி நாளில் தீபங்கள் ஏற்றி மகிழ்வோம். புத்தொளியும் புதுவாழ்வும் நம் அனைவருக்கும் பிறக்கட்டும்!
சகோதரிகளே... இது உங்களுக்கான பரிசு!
தீபாவளியை அடுத்த வளர்பிறை துவிதியை திதியை, ‘எம துவிதா’ என்று வட இந்தியா முழுக்க கொண்டாடு கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. இதை ‘பைய்யா தோஜ்’ என்றும் அழைப்பர். இந்த நாளில் பெண்கள் தம் சகோதரர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசி பெறுவர். சகோதரர்களும் தம் சகோதரிகளுக்குப் பரிசு மழை பொழிவார்கள். முன்னொரு காலத்தில் எமனுக்கு அவன் சகோதரி எமி, மாலை சூட்டி, ஆரத்தி எடுத்து இனிப்புகளை வழங்கி வரவேற்றாள். இதனால் மனம் மகிழ்ந்த எமன் அவளுக்குப் பல்வேறு பரிசில்களை வழங்கினான். பின்பு அந்த நாளில் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உலகில் அனை வருக்கும் ஏற்பட வேண்டும் என்று கருதி, இந்த நாளில் சகோதரனுக்கு மரியாதை செய்யும் சகோதரி களையும், சகோதரிகளுக்குப் பரிசில் வழங்கும் சகோ தரர்களையும் தான் தொல்லை செய்ய மாட்டேன் என்று வாக்குக் கொடுத்தானாம். அன்பையும், பரிசை யும் பரிமாறிக்கொள்ளுங்கள் பெண்களே... உங்கள் சகோதரர்களுடன்!