Published:Updated:

14 வருடங்கள் வித்தியாசம், காதலை எதிர்க்கும் குடும்பம்; வாழ்க்கையில் இணைய வயது தடையா?! #PennDiary60

Penn Diary
News
Penn Diary

'இப்படித்தான் வாழணும்னு இந்த சமூகம் சொல்லிவெச்சிருக்குற மாதிரியே வாழணுமா என்ன? ஒருவேளை நான் உங்களைவிட ரெண்டு, நாலு வயசு மூத்தவளா இருந்து, அப்போ உங்களை எனக்குப் பிடிச்சிருந்தாலும் நான் உங்ககிட்ட தயங்காம 'ஐ லவ் யூ' சொல்லியிருப்பேன். ஏன்னா, வாழ்றதுக்கு மனசுப் பொருத்தம்தான் வேணும்.'

Published:Updated:

14 வருடங்கள் வித்தியாசம், காதலை எதிர்க்கும் குடும்பம்; வாழ்க்கையில் இணைய வயது தடையா?! #PennDiary60

'இப்படித்தான் வாழணும்னு இந்த சமூகம் சொல்லிவெச்சிருக்குற மாதிரியே வாழணுமா என்ன? ஒருவேளை நான் உங்களைவிட ரெண்டு, நாலு வயசு மூத்தவளா இருந்து, அப்போ உங்களை எனக்குப் பிடிச்சிருந்தாலும் நான் உங்ககிட்ட தயங்காம 'ஐ லவ் யூ' சொல்லியிருப்பேன். ஏன்னா, வாழ்றதுக்கு மனசுப் பொருத்தம்தான் வேணும்.'

Penn Diary
News
Penn Diary

நான் பொறியியல் முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு வயது 27. எங்கள் நிறுவனத்தின் க்ளையன்ட் ஒருவருடன் அலுவல் ரீதியாகப் பேசத் தொடங்கி, பின் நாங்கள் நண்பர்கள் ஆனோம். இப்போது காதலிக்கிறோம். அவருக்கு வயது 41. அவர் வீட்டில் அக்கா, தங்கைகளின் திருமணம் என வரிசையாக பொறுப்பு இருந்ததால், அவர் திருமணம் தள்ளிப்போயிருக்கிறது.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

ஆரம்பத்தில் நாங்கள் நண்பர்களாகப் பழக ஆரம்பித்து, பின்னர் இருவருமே காதலை உணர்ந்தபோதிலும், எங்கள் வயது இடைவெளி காரணமாக அதை அவர் வெளிப்படுத்த நினைக்கவே இல்லை. எனக்கும் ஆரம்பத்தில் வயது இடைவெளி குறித்த குழப்பம் இருந்ததுதான். ஆனால், சரியான(!) வயது இடைவெளியில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்வதாலேயே நான் சந்தோஷமாக இருந்துவிடுவேன் என்று என்னால் நினைக்க முடியவில்லை. மேலும், அப்படி நான் திருமணம் செய்துகொள்ளும் நபர், இவர் அளவுக்கு என்னைப் புரிந்துகொள்வார், என் மீது அன்புகொள்வார், என்னை மரியாதையாக நடத்துவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. எனவே, வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல், நான்தான் அவரிடம் என் காதலை வெளிப்படுத்தினேன்.

'உன் வயசு என்ன, என் வயசு என்ன... இதெல்லாம் சரிப்படாது...' என்று முதலில் என் காதலை மறுத்தார் அவர். 'இப்படித்தான் வாழணும்னு இந்த சமூகம் சொல்லிவெச்சிருக்குற மாதிரியே வாழணுமா என்ன? ஒருவேளை நான் உங்களைவிட ரெண்டு, நாலு வயசு மூத்தவளா இருந்து, அப்போ உங்களை எனக்குப் பிடிச்சிருந்தாலும் நான் உங்ககிட்ட தயங்காம 'ஐ லவ் யூ' சொல்லியிருப்பேன். ஏன்னா, வாழ்றதுக்கு மனசுப் பொருத்தம்தான் வேணும்' என்றெல்லாம் அவரிடம் பல கட்டங்களாகப் பேசி, ஒரு வழியாக என் மீதான அவரது காதலையும் வெளிப்படுத்த வைத்தேன். இப்போது எங்கள் இருவருக்கும், எங்களது வயது வித்தியாசம் குறித்த எந்தக் குழப்பமும், தயக்கமும் இல்லை.

Love
Love

அடுத்ததாக, எங்கள் இருவரது குடும்பங்களையும் திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு. அவர் வீட்டில், அவர் சகோதரிகள் ஒவ்வொருவராக என்னிடம் தனித்தனியாகப் பேசினார்கள். 'எங்க அண்ணன் குடும்பத்துக்காக ரொம்ப உழைச்சிடுச்சு. அதுக்கு ஒரு நல்ல, நிம்மதியான வாழ்க்கை அமையணும். காதல் வேகத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி எங்க அண்ணனை ஹர்ட் பண்ணிடக் கூடாது. அதனால, ஒண்ணுக்கு பத்து முறை நல்லா யோசிச்சிட்டு சொல்லுங்க' என்றார்கள் அனைவரும். எங்கள் காதலுக்கு வயது நான்கு என்பதால் அதற்குரிய பக்குவம் அதற்கு உள்ளது என்பதையும், நான் என் முடிவில் மிகவும் தெளிவாகவும், தீர்மானமாகவும் இருப்பதையும் சொல்லிவிட்டேன் அவர்களிடம்.

எங்கள் வீட்டில் நான் ஒரே பெண். என் அப்பா, அம்மாவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 'நீ லவ் மேரேஜ் பண்ணிக்கோ. வேண்டாம்னு சொல்லல. ஆனா இது சரிப்பட்டு வராது. அந்தக் காலத்துல கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்கும் உங்க அப்பாவுக்குமே அஞ்சு வருஷம்தான் வித்தியாசம். 14 வருஷம் வித்தியாசம் எல்லாம் தாத்தா, பாட்டி காலத்துல இருந்தது. எங்க மகளுக்கு அப்படி ஒரு வாழ்க்கையை எங்களால நினைச்சுக் கூடப் பார்க்க முடியல' என்று நான் சொல்ல வருவது எதையுமே புரிந்துகொள்ளாமல், ஒரே பிடிவாதமாக திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.

Love (Representational Image)
Love (Representational Image)

மேலும், என் பெற்றோரின் அதிர்ச்சி என் காதலர் மீதான கோபமாகவும் திரும்புகிறது. 'சின்னப் பொண்ணு மனசை எப்படி பாழாக்கி வெச்சிருக்கார் அவர்...' என்று கோபப்படுபவர்களிடம், காதலை நான்தான் முதலில் சொன்னேன் என்பதை சொன்னால், 'நீதான் சின்னப் பொண்ணு, அவராச்சும் உனக்கு புத்தி சொல்லியிருக்க வேண்டாமா? சுயநலக்காரர்...' என்கிறார்கள்.

வாழ்க்கையில் இணைய வயது தடை இல்லை என்பதை எப்படி புரியவைப்பேன் என் பெற்றோருக்கு?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.