Published:Updated:

நிதி மேலாண்மையின் இந்த 3 முக்கியமான விஷயங்கள்ல நீங்க சரியா இருக்கீங்களா தோழிகளே? #HerMoney

#HerMoney
News
#HerMoney

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மாத்திரமல்ல, குடும்பத்தின் நிதி மேலாண்மையிலும் திட்டமிடலிலும் ஒதுங்குவதைத் தவிர்த்து அதிலும் பெண்கள் முனைப்புடன் பங்கெடுக்க வேண்டியது அவசியம் தோழிகளே!

Published:Updated:

நிதி மேலாண்மையின் இந்த 3 முக்கியமான விஷயங்கள்ல நீங்க சரியா இருக்கீங்களா தோழிகளே? #HerMoney

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மாத்திரமல்ல, குடும்பத்தின் நிதி மேலாண்மையிலும் திட்டமிடலிலும் ஒதுங்குவதைத் தவிர்த்து அதிலும் பெண்கள் முனைப்புடன் பங்கெடுக்க வேண்டியது அவசியம் தோழிகளே!

#HerMoney
News
#HerMoney

`விக்ரம் வேதா' திரைப்படத்தின் பிரபல வசனம்:

`ஒரு கதை சொல்லட்டுமா சார்?'

அதையே கொஞ்சம் மாற்றி, 3 குட்டி கதைகள் சொல்லட்டுமா தோழிகளே?

30 வயதுகளில் இருக்கும் பெண், மெலனி. பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவன உயரதிகாரி. தனக்குக் கீழ் இருக்கும் 5 மேனேஜர்கள், 10 டீம் லீடர்கள், 50-க்கும் மேற்பட்ட பிற பணியாளர்கள் என அனைவரையும் தட்டிக் கொடுத்து திறம்பட வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர். அலுவலகத்தில் இருக்கும் எந்த பிரச்னையானாலும் மெலனி இருக்க பயமேன் என உயர் அதிகாரிகள் சொல்லுமளவுக்கு தொழிலில் தேர்ந்தவர். 6 இலக்க சம்பளம், ஏகப்பட்ட ஷேர்கள் என்று இருக்கும் மெலனிக்குப் பிடிக்காத பல வார்த்தைகளில் ஒன்று... ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட்/பொருளாதார மேலாண்மை. தன்னுடைய பர்சனல் கணக்கு முதல் தன் பெயரில் இருக்கும் ஷேர்கள் வரையிலும் எதையுமே கையாளத் தெரியாததுடன், அதில் அவர் ஆர்வமும் காட்டியதில்லை.

#HerMoney
#HerMoney

அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், `இதெல்லாம் வேண்டாத தலைவலி. அதுதான் என் கணவர் இருக்கிறாரே எல்லாத்தையும் பார்த்துக்க?’ அலுவலகத்தின் எல்லா சிக்கல்களையும் அதன் ஆணிவேர் வரையிலும் சென்று அலசி ஆராய்ந்து தீர்வு சொல்பவருக்கு, தன்னுடைய சுய பொருளாதார திட்டமிடல் பற்றிய அக்கறை இல்லாதது ஒரு பொறுப்புத் துறப்பு மனநிலை எனலாம்.

ஜானகி... 50 வயதைக் கடந்தவர். சிறுவயதிலேயே அவர் தன் பெற்றோரை இழந்தபோது, தன்னைவிட 13 வயது இளைய தம்பி அவருடைய பொறுப்பாக இருந்தார். பேங்க் வேலைக்கு பரீட்சை எழுதி வேலையில் அமர்ந்து கடின உழைப்பினால் படிப்படியாக உயர்ந்த பெண். தான் வாழ்வதே தன் தம்பிக்காக என்று வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர். சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை அவர் செலவழித்தது தம்பியின் படிப்புக்கும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கும்தான். உறவினர்கள் எத்தனையோ வற்புறுத்தியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

தம்பிக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் நிலை வந்தபோது, தான் சொந்தமாக வாங்கிய ஒரு சிறு அப்பார்ட்மென்ட்டுக்குத் தனியாகக் குடிபெயர்ந்தார். உறவுகளும் நட்புகளும் தம்பியும் அவரின் மனைவியும் எத்தனையோ வற்புறுத்தியும்கூட தன் முடிவில் மாறாமல், தனித்தனியாக இருப்பதுதான் நமக்கு நல்லது என்ற தீர்க்கமான முடிவுடன் தன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறப்போகும் ஜானகி, தன் வாழ்க்கையை அத்துணை அழகாக வடிவமைத்துக் கொண்டவர். இன்று வரையிலும் தன் சம்பாத்தியத்தின் ஒரு பங்கை தன் தம்பியின் பெயரில் டெபாசிட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மற்றவை அவரது சுய தேவைகளுக்கும் எதிர்கால சேமிப்புக்கும்.

#HerMoney
#HerMoney

பட்ஜெட் பவித்ரா - ஒரு காலத்தில் பொறுப்புத் துறப்பு மனநிலையில் இருந்தவர்தான். தனியார் நிறுவனம் ஒன்றில் டீசன்டான சம்பளத்துக்கு வேலை பார்க்கும் பவித்ரா, திருமணமான முதல் எட்டு வருடங்கள் தன் சம்பாத்தியத்தை அப்படியே தன் கணவரின் கைகளில் ஒப்படைத்த டிபிக்கல் குடும்பப் பெண்ணாகவே இருந்தார். ஆனால், 2 குழந்தைகள் என்று ஆன பின்பும் கணவரின் மோசமான பொருளாதார மேலாண்மை குடும்பத்துக்குள் பிரச்னைகளை உண்டு பண்ணுவதைக் கவனித்த பவித்ரா, பட்ஜெட் பவித்ராவாக மாறி சண்டையிட்டு குடும்பத்தின் நிதி நிர்வாகத்தைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தார். `இத்தனை வருடங்களாக அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டே... இப்போ திடீரென ஏன் சண்டை போடுகிறாய்?’ எனக் கேட்டதற்கு பவித்ரா சொன்ன பதில்... ``கல்யாணமாகி வந்தபோது எனக்கு 24 வயசு. அப்போ என்னால ரிஸ்க் எடுக்க முடியும். இப்போ, அப்படி இல்ல. 32 ஆகிடுச்சு. குழந்தைகளின் எதிர்காலத்தையும் எனது எதிர்காலத்தையும் எங்களது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் உழைக்க வேண்டியிருக்கிறது.''

அடுத்த 5-வது வருடம் எதிர்பாராதவிதமாக திடீரென பவித்ராவின் கணவர் விபத்தில் மரணிக்க, கணவரின் இழப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கண்டு திகைத்து நிற்காமல், அடுத்து என்ன என்று யோசித்தார் பவித்ரா. அவரது பெயரில் எடுத்திருந்த ஆயுள் காப்பீட்டுப் பணம் ஆபத்துக்காலத்தில் துணையாக வந்தது. `சண்டைக்காரி ஆகிட்டா’ என்று அவளைப் பழித்த அதே உறவுகளும் சுற்றமும் `அவ சரியான விஷயத்தைத்தான் செய்திருக்கிறாள். அவ அன்னிக்கு பிடிச்ச பிடிதான் இன்னிக்கு அந்தக் குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கு’ என்று மெச்சுகிறார்கள்.

மெலனியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடாத விஷயம் பொறுப்புத் துறப்பு என்றால், பவித்ராவிடமும் ஜானகியிடமுமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல. அதில் முக்கியமான மூன்றை பார்க்கலாம் .

1. அவசரகால நிதி.

2. எதிர்காலத்திற்கான சேமிப்பு.

3. மருத்துவ காப்பீடு & ஆயுள் காப்பீடு.

#HerMoney
#HerMoney

1. அவசரகால நிதி

நமது வருமானத்தில் 30% - 35% சேமிப்புக்கு என்று ஒதுக்க வேண்டும் எனச் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள், அதிலும் 10% - 15%ஐ அவசரகால நிதியாக ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். அவசரகால நிதி என்பது மருத்துவச் செலவு மாத்திரமல்ல, எதிர்பாராத சூழலால் பிரதான வருமானம் ஈட்டும் நபரின் வருவாய் பாதிக்கப்பட்டால், குடும்பத்தை நிர்வகிக்க திகைத்து நிற்காமல் இருப்பது அவசியம். எதிர்காலம் குறித்த திட்டமிடலின்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை பல இருந்தாலும், முக்கியமான ஒன்று, நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு எஞ்சியிருக்கும் நாள்கள் குறைவு என்பதை நாம் உணர வேண்டும். `ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று 20 வயதுகளில் சொல்வதைப்போல, 40 வயதை எட்டிய பின் சொல்ல முடியாது. அதனாலேயே எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைத் தவிர்த்து, அதை ஓரளவுக்குத் தெளிவான திட்டமிடலுடன் எதிர்கொள்ள வேண்டும்.

2. எதிர்காலத்துக்கான சேமிப்பு

எதில் எல்லாம் சேமிக்கலாம்? பெஸ்ட் சேவிங்ஸ் பிளான் சொல்லுங்க? - இப்படிப் பலரும் பலரைக் கேட்டிருப்போம். நிஜத்தை சொன்னால் எல்லோருக்கும் பொதுவான பெஸ்ட் சேவிங்ஸ் பிளான் என ஒன்று இருக்க முடியாது. ஏனெனில், தனிநபரின் வருமானம் & செலவுகள், அவர்களுக்கு இருக்கும் பிற பொறுப்புகள், கடன்கள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள், குழந்தைகளின் படிப்பு போன்ற பல விஷயங்கள்தான் நமக்கான சேமிப்புத் திட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. நாம் பார்த்த உதாரணத்தில் இருக்கும் ஜானகியின் சேமிப்பும் முதலீடுகளும், பவித்ராவின் சேமிப்பும் முதலீடுகளும் ஒரே மாதிரியானவையல்ல.

#HerMoney
#HerMoney

தனிமரமாக நிற்கும் ஜானகிக்கு இருக்கும் பொறுப்புகளையும், பொருளாதார கமிட்மென்ட்களையும் தேவைகளையும்விட, பவித்ராவுக்கான தேவைகளும் பொறுப்புகளும் அதிகம். எதிர் வீட்டுக்காரர் 10,000 சேமிப்பது போல நானும் சேமிக்கிறேன் என்று சொல்ல எல்லாராலும் முடியாது. அதனால் நம் தேவைக்கு ஏற்றாற்போல் நம் எதிர்கால இலக்குக்கு, குடும்பச் சூழலுக்கு ஏற்றாற்போல நமது முதலீடுகள், சேமிப்புகளைத் திட்டமிடுவது மிகவும் முக்கியம். தனி ஒருவருக்கு ஆகும் செலவினங்களைவிட ஒரு குடும்பத்தை நிர்வகிக்க தேவைப்படும் பணத்தின் அளவு அதிகம். இவை எல்லாம் `டெய்லர் மேட்' என்று சொன்னாலும் பொதுவான சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி... பிள்ளைகளின் படிப்பு, வீடு வாங்குவது, நமது ஓய்வு காலத்துக்கான சேமிப்பு போன்றவற்றை மனதில் கொண்டு அதை நோக்கி நமது சேமிப்பைத் திட்டமிடல் வேண்டும்.

3. மருத்துவக்காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு

வருமுன் காப்பதே சிறந்தது என நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் அதே நேரத்தில், எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகள் நம் நிதி நிலையை புரட்டிப் போடாமல் இருக்க நம்மிடம் எப்போதுமே மருத்துவக் காப்பீட்டு பாலிசி இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் மருத்துவக் காப்பீடு மட்டும்தான் நமது சேமிப்பை பதம் பார்க்காமல் நம் எதிர்பாராத மருத்துவமனைச் செலவுகள், சிகிச்சை செலவுகளுக்குப் பொறுப்பேற்கிறது. இதைப் பற்றி விரிவாக #HerMoney தொடரின் இந்தக் கட்டுரையிலும் பார்த்திருக்கிறோம்:

#HerMoney
#HerMoney

அதேபோல குடும்பத்தின் வருவாயை ஈட்டும் நபர் எதிர்பாராவிதமாக இறக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் குடும்பத்துக்கு ஏற்படும் நிதிச் சுமைகள் மற்றும் சவால்களை சமாளிக்கச் செய்யும் மாற்று ஏற்பாடாக இருக்கும் ஆயுள் காப்பீடு ஒன்றை எடுப்பதும் அவசியம். அதுதான் பவித்ராவின் கணவர் இறந்ததும் அவரின் குடும்பத்தை தாங்கிப்பிடித்தது. ஆயுள் காப்பீடு பற்றியும் விரிவாக நாம் இந்தத் தொடரில் பேசியிருக்கிறோம்:

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மாத்திரமல்ல, குடும்பத்தின் நிதி மேலாண்மையிலும் திட்டமிடலிலும் ஒதுங்குவதைத் தவிர்த்து அதிலும் பெண்கள் முனைப்புடன் பங்கெடுக்க வேண்டியது அவசியம் தோழிகளே!