Published:Updated:

`திடீர் முடக்கம்; குற்றப்பின்னணி.. 54 நாள்கள் தனிமை!’- ஜெர்மானியரின் டெல்லி ஏர்போர்ட் ஸ்டோரி

டெல்லி விமான நிலையத்தில் ஜீபாட்
டெல்லி விமான நிலையத்தில் ஜீபாட்

ஜீபாட் மீது அவரது நாட்டில் குற்ற வழக்குகள் இருந்ததால் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன. ஜெர்மன் நாட்டு தூதரகமும் உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது.

டெல்லி விமான நிலையத்தில் கடந்த 54 நாள்களாக தங்கியிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த எட்கார்ட் ஜீபாட் (Edgard Ziebat) சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். எட்கார்ட் ஜீபாட் மீது பல கிரிமினல் வழக்குகள் இருந்ததால் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. ஜீபாட் வியட்நாமிலிருந்து டெல்லி வழியாக இஸ்தான்புல் பயணமாகிக்கொண்டிருந்தபோது விமான சேவை முடக்கப்பட்டது. இதன்காரணாமாக ஜீபாட் டெல்லி விமான நிலையத்தில் சிக்கினார்.

விமானம்
விமானம்

ஜீபாட் மார்ச் 18-ம் தேதி டெல்லி விமானநிலையம் வந்தடைந்தார். கொரோனா அச்சம் காரணமாக இந்திய அரசானது துருக்கி நாட்டுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இதுதான் அவரது பயணத்தடைக்கு காரணமாக அமைந்தது. நான்கு நாள்கள் கழித்து இந்தியா வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையை ரத்து செய்தது. கார்கோ விமானங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக ஜீபாட்டால் டெல்லி விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியவில்லை.

ஜீபாட் போன்று நிறைய பயணிகளும் அந்த நேரத்தில் விமான நிலையத்தில் சிக்கியிருந்தனர். விமான நிலையத்தின் போக்குவரத்து பகுதியிலே ஜீபாட் தங்கத் தொடங்கினார். பல்வேறு நாள்களில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த 4 பயணிகளும் தங்கியிருந்தனர். இருவர் இலங்கையைச் சேர்ந்தவர், மாலத்தீவு மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தலா ஒருவர் தங்கியிருந்தனர். இதையடுத்து, விமானநிலைய அதிகாரிகள் அந்தந்த நாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு பயணிகளின் நிலையைத் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு தூதரகங்கள் அவர்களை அழைத்து தனிமைப்படுத்தியது. ஜீபாட் மீது அவரது நாட்டில் குற்ற வழக்குகள் இருந்ததால் பல்வேறு சிக்கல்கள் நீடித்தன. ஜெர்மன் நாட்டு தூதரகமும் உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது. அவர் அந்நிய நாட்டில் இருப்பதால் காவலில் எடுக்க ஜெர்மன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

விமானநிலையம்
விமானநிலையம்

``பொதுவாக ஒருநாடு விட்டு வேறோரு நாட்டுக்குச் செல்லும் பயணிகள் இந்த டிரான்சிஸ்ட் பகுதியில் ஒருநாள் தங்கலாம். அவர்கள் விமானநிலையத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் இந்திய விசா தேவைப்படும். ஜீபாட் இந்திய விசாவுக்கு முறையாக விண்ணப்பிக்கவில்லை. டெல்லி விமானநிலையத்தில் தங்கியிருந்த 54 நாள்களும் நாளிதழ்களை வாசிப்பது புத்தகம் படிப்பது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் போனில் பேசுவது என நேரத்தை கழித்து வந்தார். விமானநிலையத்தில் கார்கோ விமானங்கள் மட்டுமே பறக்க அனுமதி உள்ளது. இதனால் சில ஃபாஸ்ட் புட் கடைகள் திறந்திருந்தன. விமான நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்தார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மற்றும் துப்புரவுப் பணியாளர்களிடம் ஜீபாட் உரையாற்றுவார்” என டெல்லி விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தனக்கு இங்கு ஏற்படும் செலவுகளை தன்னால் சமாளித்துக்கொள்ள முடியும் என அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். தனக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு படுத்து உறங்கியுள்ளார். பயணிகள் விமானம் இயங்காததால் அந்தப்பகுதி பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது அங்கு தனிமையில் தனது நாள்களை கழித்துவந்துள்ளார். விமானநிலைய அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை கொண்டு அவரது நடவடிக்கையைக் கண்காணித்து வந்துள்ளனர். அவரது செயல்கள் சந்தேகிக்கும் படியாக இல்லை என்பதால் தொடர்ந்து அங்கு இருக்க அனுமதித்துள்ளனர். அவரது உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து அறிந்துகொள்ள அதிகாரிகள் அவரிடம் பேசி வந்துள்ளனர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளித்துள்ளார் .

எட்கார்ட் ஜீபாட்
எட்கார்ட் ஜீபாட்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி தனது நாட்டினரை அழைத்துச் செல்ல சிறப்பு விமானத்தை அனுப்பியது. அப்போது ஜீபாட்டை அனுப்புவதற்கு டெல்லி விமான நிலைய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்தச் சிறப்பு விமானமானது எங்கள் நாட்டு குடிமக்கள் அல்லது துருக்கியில் நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே எனக்கூறி ஜீபாட்டை ஏற்க மறுத்துவிட்டனர். அவரிடம் பல நாடுகளுக்குச் செல்வதற்கான விசாக்கள் இருந்துள்ளன. சர்வதேச விமான சேவையை தொடங்கிய பின்னர்தான் உங்களை அனுப்பி வைக்க முடியும் என ஜீபாட்டிடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வரும்நிலையில் தானாகவே புக் செய்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்குப் புறப்பட்டுவிட்டார். இன்று காலை டெல்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதித்துள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாததால் அவர் பறந்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு