தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 25,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இதில் 2,500 முதியவர்கள் உள்ளனர். வயது மூப்பு காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் அவதிப்படும் அவர்களின் மருத்துவம், ரேஷன் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலவச ஆட்டோ பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டடத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதியவர்களுக்கு பயனாளிகளுக்கு அடையாள அட்டையுடன் கூடிய கையேடு வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர மருத்துவ சிகிச்சை, ரேஷன் கடை மற்றும் அவசர மருத்துவத் தேவைக்காக எந்த நேரமும் ஆட்டோவில் இலவசமாகச் சென்று வரலாம்.

இச்சேவையைப் பெற அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலரின் போன் நம்பருக்குத் தொடர்புகொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பு கொண்டால் பயனாளிகளின் இல்லத்திற்கு ஆட்டோ வரும். முதியவரின் இல்லத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிக்கு இலவசமாகவே அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல் அவர்களின் வேலை முடியும் வரை காத்திருந்து மீண்டும் பயனாளிகளின் இல்லத்திற்குக் கொண்டு வந்து விடுவது வரை ஆட்டோ ஓட்டுநரின் பொறுப்பாகும்.
இத்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்ரவர்த்தி, "அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியல்ல, தனி மனிதனின் அவசரத் தேவையைப் பூர்த்திசெய்வதுமே உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய பணி. அந்த நோக்கத்தில் உதயமானதுதான் மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச ஆட்டோ பயணத் திட்டம். அறுபது வயது தாண்டிய முதியவர்கள் வறுமை, குடும்பச் சூழல், துணையை இழந்தவர்கள், ஆதரவற்றோர் என பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள முதியவர்களைக் கணக்கெடுத்து உதவியுள்ளோம். இதை ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியப்படுத்தியுள்ளோம். இதற்காக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனிசெட்டிபட்டியில் உள்ள நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் கௌமாரியம்மன் ஆட்டோ சங்கங்களில் இயங்கும் 65 ஆட்டோக்கள் இலவச சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீசல் கட்டணத்திற்கான நிதியுதவி வழங்க சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன" என்றார்.
இத்திட்டத்துக்கான தொடக்கவிழா பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. தேனிப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாராம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அமாவாசை, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளியான முதியவர் சின்னச்சாமி, பயணம் குறித்த விவரங்களைப் பதிவு செய்ய, கையேடு வழங்கப்பட்டது. "முதியவர்கள் பலரும் நடக்கக்கூட முடியாமல் பெரும் சிரமப்பட்டே பேருந்து நிலையம் செல்லும் நிலை இருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தினால் இருக்கும் இடத்திற்கே ஆட்டோ வந்து இலவசமாக அழைத்துச் செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.