மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை-27- “ஊரு வந்தா இறங்க வேண்டியதுதான்.. எதையும் எடுத்துக்கிட்டுப் போகப் போறதில்லயே!”

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - டாக்டர் ஹெச்.வி.ஹண்டே

தமிழக சட்டமன்ற உறுப்பினராக, சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்... எழுத்தாளராக பல நூல்களை எழுதியவர்... 95 வயதைக் கடந்து இன்றும் மருத்துவராகச் செயலாற்றிக் கொண்டிருப்பவர்... நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணமாக விளங்கும் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே. அவரை ‘முதுமைக்கு மரியாதை’ தொடருக்காகச் சந்தித்தோம்.

சென்னை, அமைந்தகரை யில் தான் நிறுவியிருக்கும் ‘ஹண்டே மருத்துவமனை’க்கு நேரம் தவறாமல் பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் ஹண்டே. இந்த 95 வயதிலும் நேரத்தை கடைப் பிடிக்கும் ஹண்டே, அன்றைய தினமும் சரியான நேரத்தில் தனக்கான அறைக்குள் நுழைந் தார். தற்போதைய ஆற்றலுக் கான அஸ்திவாரத்தை இளமைக்கால நினைவு களுடன் அவர் பகிரப் பகிர... நமக்கும்கூட ஆற்றல் அதி கரிக்கவே செய்தது.

``சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, எளிமையான வாழ்க்கை முறை... இந்த மூணும்தான் நம்ம வாழ்க்கைத் தரத்தையும் ஆயுளையும் அதிகப்படுத்துது. இதுக்கு அஸ்திவாரம் போட்டது ஆந்திராவிலுள்ள பெனு கொண்டா கிராமம்.

 61-வது திருமணநாளில் மருத்துவமனையில்...
61-வது திருமணநாளில் மருத்துவமனையில்...

எங்கப்பா, மெட்ராஸ் பிரசிடென்சி கவர்ன்மென்ட் சர்வீஸில் அசிஸ்டென்ட் சர்ஜனா வேலை பார்த்தார். நெல்லூரில் அவருக்கு போஸ்டிங் போட்டிருந்தாங்க. பெனுகொண்டா கிராமத்துல ஆறு வருஷங்கள் வாழ்ந்தோம். அப்பல்லாம் பிரைவேட் ஸ்கூல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. பெனுகொண்டா போர்டு ஹைஸ்கூல்லதான் படிச்சேன். அங்கே என்னோட படிச்சவர் புட்டபர்த்தி சாய்பாபா. 1926-ம் வருஷம் நவம்பர் 23-ம் தேதி அவரோட பிறந்தநாள். நான், 1927-ம் வருஷம் நவம்பர் 11-ம் தேதி பிறந்தேன்.

டி.கேசவலுன்னு ஒரு வாத்தியார். காலையிலே 7.30 மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு வரச் சொல்லிடுவார். தெருவுல நடந்து போகிறபோது வழியில இருக்கும் வீட்டுல உள்ள பசங்களுக்கெல்லாம் குரல் கொடுத்துக்கிட்டே போவோம். 50 பேர் ஒண்ணா சேருவோம். ஸ்கூல் கிரவுண்டுல கொஞ்சம் நேரம் ஓடிட்டு பஸ்கி, தண்டால் எடுக்கச் சொல்வார். அன்னிக்கு அப்படி எடுத்த பயிற்சிகள்தான் இன்னிக்கும் என்னை யார் தயவும் இல்லாமல் நடக்க வைக்குது. அடுத்து ஆசனங்கள்... பலவித ஆசனப் பயிற்சிகள். சிரசாசனம் செய் யுறதுக்கு முதல்ல கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிட்டேன். அந்த சிரசாசனத் தாலதான் இன்னிக்கும் என் மூளை நல்லா வேலை செய்தேன்னு நினைக் கிறேன்” என்று பழைய நினைவுகளை அசை போட்டபடி தொடர்கிறார்...

``சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில படிச்சப்போ அரும்பாக்கத் துல குடியிருந்தோம். அங்கிருந்து நடந்தே காலேஜுக்கு வந்துடுவேன். அதுக்கப்புறம் டியூட்டரா இருந்தபோது சைக்கிள்ல வருவேன். சைக்கிள் ஓட்டுறதும் நல்ல உடற்பயிற்சிதான். 1958-ல மெடிக்கல் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன். குறிப் பிட்ட இடத்துக்கு சரியான நேரத்துக்குப் போகணுமேன்னு 1960-ல ஒரு கார் வாங்கினேன்.

 89-வது பிறந்தநாளில் மனைவியுடன்...
89-வது பிறந்தநாளில் மனைவியுடன்...

சட்டமன்ற உறுப்பினரானபோது சூழ்நிலைக்கேற்ப சில மாற்று ஏற்பாடு களைச் செய்துகிட்டு என் லைஃப் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்திக்கிட்டேன். ஆனா, காலையில உடற்பயிற்சி செய்யுறது, மாலையில் நடைப்பயிற்சி செல்வதை மட்டும் மாத்திக்கலை. மினிஸ்டரா இருந்தப்ப குறிப்பிட்ட நேரத்துல, குறிப்பிட்ட இடத்துலதான் நான் வாக்கிங் போவேன்னு தெரிஞ்சுகிட்டு நிறைய பேர் என்னோட நடந்துகிட்டே வந்து அவங் களோட தேவைகளைச் சொல்வாங்க. இப்பவும் சாயந்தரம் 20 நிமிஷம் நடக் கறேன். காலை நேரத்தில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யுறேன்.

முக்கியமா நிறைய படிப்பேன். அதுதான் இன்னிக்கும் மூளையை சுறுசுறுப்பா வெச்சிருக்குது. நாளொன்றுக்கு ஏழு தினசரிகளை படிக்கிறேன். தமிழைத் தேடி நாம எங்கேயும் போக வேண்டாம். தமிழில் ஏராளமான விஷயங்கள் இருக்கு. அதை வெளியே கொண்டு வர்றதுக்குதான் ஆள் இல்லை. அதற்கு என்னால் ஆன பணிகளைச் செய்யுறேன்... இதுதான் என் மூளைக்கான பயிற்சியா நினைக் கிறேன்’’ என்றவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்...

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே

“இளைஞர்களுக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்ல நினைக்கிறேன். நிறைய படிங்க... குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்காதீங்க. முக்கியமா யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீங்க. `நம்மாலே வளர்ந்த ஆளு... இன்னிக்கு நம்மளை திரும்பிக்கூட பார்க்கறதில்லை’ன்னு நான் என்னிக்குமே நினைச்சதில்லை. `அவனுடைய சாமர்த்தியம் சம் பாதிக்கிறான். வளர்ந்துட்டான்’னு தான் நினைப்பேன். அதேபோல எதுக்கும் கோபப்பட மாட்டேன். சட்டுன்னு வார்த்தைகளை விட்டுட மாட்டேன். வயசான காலத்தில இயலாமையால கோபம் வரத்தான் செய்யும். அதை அடக்கப் பழகிக் கோங்க’’ என்றவர் நிறைவாக...

``ஷேக்ஸ்பியர் சொன்னதுதான் என் நினைவுக்கு வருது. வாழ்க்கை என்பது நடமாடும் நிழல். உலகம் என்னும் நாடக மேடையில் பெரிய ஆள்... சின்ன ஆள் கிடையாது. ஒளிக்கு ஏற்ப உருவங்கள் சின்ன தாவும் பெரிசாவும் மாறும். இந்த உலகத்துல எவ்வளவு பெரிய ஆளையும் சுலபமா மறந்துடுவாங்க.

ரயில்ல பயணம் செய்யும்போது சீட் நல்லாயிருக்கா... தூங்கறதுக்கு வசதியா இருக்குமான்னுதான் நினைப்போம். ஊரு வந்தா இறங்க வேண்டியதுதான்... இப்படித்தான் வாழ்க்கையும்... எதையும் எடுத்துக் கிட்டு போகப் போறதில்ல... இதைப் புரிஞ்சுகிட்டு வாழப் பழகினா பிரச்னையே இல்லை’’ என்றார்.

- தோள் கொடுப்போம்...

டாக்டர் ஹெச்.வி.ஹண்டே
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே

****

அந்த நம்பிக்கை...

சென்னை அமைந்தகரையில் உள்ள ஹண்டே மருத்துவ மனையில் காலை 9 மணிக்கெல்லாம் ஆஜராகிவிடும் டாக்டர் ஹண்டே, ``எங்கிட்டதான் வைத்தியம் பார்க்கணும்னு இன்னும் சிலர் என்னைத் தேடி வர்றாங்க. அவங்களுக்குத் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் தர்றேன். நான் வைத்தியம் பார்த்தா உடம்பு குணமாயிடும்னு நினைக்கிறாங்க. அந்த நம்பிக்கையை இன்னும் காப்பாத்திக்கிட்டு வர்றேன்” என்று சிரிக்கிறார்.

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - 10 - பி.எஸ்.ராமமூர்த்தி

ஆங்கிலச் சொற்களின் அர்த்தம் ஓரளவு தெரிந்து எந்த இடத்தில், எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்னும் முயற்சியில் இருக்கும் பலர் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள சில ஆங்கிலப் பத்திரிகைகளைப் புரட்டு வார்கள். அப்படிப் புரட்டும்போது நாம் உச்சரிக்கும் வார்த்தையும் பத்திரிகையில் படிக்கும் வார்த்தையும் சரியானதுதானா என்கிற குழப்பம் வரும். அப்படிப்பட்ட நிலையில் உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் பொது வாகப் பேசப்படும் வார்த்தைகளை, சொல் - உச்சரிப்பு - பொருள் இம்மூன்றையும் அறிந்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு Queue என்ற சொல்லின் பொருள், வரிசை. அதை உச்சரிக்கும்போது `க்யூ' என்று உச்சரித்தால் போதும். `Q' என்ற எழுத்துக்கு அடுத்தாற்போல் இருக்கும் எழுத்துகளுக்கு உச்சரிப்பே கிடையாது.

அடுத்து Receipt - வரவு, பற்றுச்சீட்டு. இதை `ரிசீட்' என்று உச்சரிக்க வேண்டும். இதில் `P' சைலன்ட். `பி' யை உச்சரிக்கக் கூடாது. அதேபோல் Women - பெண்கள் / மகளிர் என்பதை `விமன்' என்று உச்சரிக்க வேண்டும். `உமன்' என்று உச்சரிக்கக் கூடாது.

பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

அதற்கடுத்து, Physics (இயற்பியல் / பௌதிகம்), Philosophy (தத்துவம்) போன்று `Ph' இல் தொடங்கும் வார்த்தைகள் பல உண்டு. இந்த வார்த்தைகள் `P' (பி) என்ற எழுத்தில் தொடங்கினா லும் `Fi' (ஃபி) என்கிற சவுண்டில் உச்சரிக்க வேண்டும். இதேபோல் Balm (க்ரீம் / ஆயின் மென்ட் / களிம்பு) இதை `பாம்' (Bam) என்று உச்சரித்தால் போதும். இதில் `L' (எல்) என்று எழுத்தைச் சேர்த்து உச்சரிக்கக் கூடாது.

Rapport என்கிற வார்த்தைக்கு நல்லுறவு / நட்புணர்வு / இனிமையாகப் பழகக்கூடிய தன்மை என்பது பொருள். இந்த வார்த்தையை `Rappo' (ராப்போ) என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி இரு எழுத்துகளான `rt'-யை உச்சரிக்கக் கூடாது.

இன்னும் பல சொற்கள் வித்தியாசமான எழுத்துகளையும், உச்சரிப்புகளையும் கொண் டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள் ளுங்கள். நீங்கள் பேசும்போது ஆங்கிலப் புத்தகங்களில் உள்ள கடினமான வார்த்தை பிரயோகங்களை, உங்கள் பேச்சு வழக்கில் கொண்டு வர முயற்சி செய்யாதீர்கள். பொது வான ஆங்கில உரையாடலில் கடினமான சொற்கள் இருப்பதில்லை. ஆகவே, இலகு மொழி நடையில் பேச ஆரம்பியுங்கள். ஆங்கில உச்சரிப்பு வசப்படும்.

- நிறைவடைந்தது