Published:Updated:

யூரோ டூர் - 2 | ஐரோப்பாவை முடக்கிய லிட்டில் ஐஸ் ஏஜ் காலம்… பஞ்சத்தில் வீழ்ந்தவர்கள் மீண்டது எப்படி?!

ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி
News
ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி

அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது.

Published:Updated:

யூரோ டூர் - 2 | ஐரோப்பாவை முடக்கிய லிட்டில் ஐஸ் ஏஜ் காலம்… பஞ்சத்தில் வீழ்ந்தவர்கள் மீண்டது எப்படி?!

அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது.

ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி
News
ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி
நாம் இன்று பார்த்து பிரமிக்கும் ஐரோப்பா ஆதி காலம் தொட்டே இந்த வளர்ச்சியையும் மலர்ச்சியையும் கொண்டிருந்ததா என்ற கேள்விக்கு விடை காண வரலாற்றை துளைத்துக் கொண்டு சென்றால் அது ஒரு முடிவற்ற பயணமாக நீளும் என்பதால் நவீன ஐரோப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஜஸ்ட் ஒரு மூன்று நூற்றாண்டுகள் மட்டும் பின்னோக்கிச் செல்லலாம்.

தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா

நம் சினிமாக்களில் கதாநாயகன் ஒரே பாட்டில் முன்னேறி பணக்காரனாகி விடுவது போல ஐரோப்பிய மக்கள் ஒரே இரவில் பணக்காரர்களாகிவிடவில்லை. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உலகின் பெரும்பகுதி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தையே கொண்டிருந்தது. ஐரோப்பாவும் அப்படியே... அதன் பின் வெடித்த தொழில்துறைப் புரட்சி சில நாடுகளை உயர் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் செல்ல விட்டு, ஏனையவற்றை மோசமான வறுமையில் தள்ளியது.

தொழில்துறை புரட்சிக்கு முந்தைய ஐரோப்பா சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் காணப்பட்டது. என்னதான் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஒரு காலத்தில் கோலச்சினாலும் ஐரோப்பாவும் ஏனைய நாடுகளைப் போல பல சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி
ஐரோப்பா தொழில்துறைப் புரட்சி

தொழில்துறை புரட்சிக்கு முன்னர், ஐரோப்பாவில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாக அல்லது கைவினைப் பொருள் தயாரிப்பாளர்களாகத்தான் இருந்தார்கள். தொழில்துறை புரட்சி ஏற்படுவதற்கு முன்பான காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை இன்று இருப்பதைப் போல அவ்வளவு வசதியாக இருக்கவில்லை. உற்பத்திகள் பெரும்பாலும் வீடுகளில், கை அல்லது சிறு கருவிகள் அல்லது அடிப்படை இயந்திரங்களை பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டது. ஆடைகள் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டன. விலங்குகளின் தோல்கள் மற்றும் ரோமங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அரிதாகவே அவர்கள் வாழ்ந்த கிராமங்களுக்கு அப்பால் பயணம் செய்தனர். அதனால் மக்கள் தம் தேவையை நிவர்த்தி செய்ய தத்தமது சமூகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

கிராமப்புற மக்கள் வாழ்வாதார விவசாயிகளாகவே இருந்தனர். அதாவது அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க மட்டுமே பயிர்களை பயிரிட்டும், விலங்குகளை வளர்த்தும் வந்தனர். மாறாக அவர்கள் வர்த்தகம் செய்யவோ விற்கவோ எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை.

பொதுவாக ஒரு நாளுக்கு 16 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனாலும் தங்கள் உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியமே பெற்றனர். பெண்களும் சிறுவர்களும் கூட பல கடினமான வேளைகளில் ஈடுபட்டனர். கல்வி என்பது பணக்காரர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே என்று ஒதுக்கப்பட்டு இருந்தது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் சாதாரண குடிமகன் உள்ளே கூட நுழைய முடியாத இடமாக இருந்தன.

Little Ice-Age

அன்றைய ஐரோப்பிய மக்களின் உலகம் மிகக் குறுகியதாக இருந்தது. அவர்களின் தேவைகள் பூரணமாக தீர்க்கப்படாமல் இருந்தன. குளிர் காலங்களில் மிகவும் சிரமங்களுக்கு ஆளானார்கள். குறிப்பாக 1303 முதல் 1860 வரையிலான காலப்பகுதியில் புவியில் உருவான Little Ice Age என்று அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் ஐரோப்பாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Little Ice Age
Little Ice Age

Little Ice-Age என அழைக்கப்பட்ட சிறிய பனி யுகம் என்பது 14 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை கடுமையாக பாதித்த ஒரு குளிர்காலம். 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஐரோப்பிய ஆல்ப்ஸ், அலாஸ்கா மற்றும் தெற்கு ஆண்டிஸ் உட்பட உலகின் பல இடங்களில் இது விரிவடைந்தபோது, வடக்கு அரைக்கோளத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலை 0.6°C க்கும் கீழ் குறைந்தது. Little Ice Age-இல் தேம்ஸ் நதி உட்பட பல ஐரோப்பிய ஆறுகள் பனிக்கட்டியாக மாறியது. வயல் நிலங்கள் உறைந்து போயின. இதனால் தலைவிரித்தாடிய பஞ்சம் விவசாயிகளை ஆயிரக்கணக்கில் கொன்றது. சிறிய பனி யுகத்தின் காலநிலை பேரழிவுகளை, பிரபலமான தொல்பொருள் ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியருமான பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிரிடஸ் பிரையன் ஃபேகன் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த சிறிய பனி யுகம் ஐரோப்பியர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாய உற்பத்தியை குறைத்து, உணவுப் பற்றாக்குறை, உடல்நலக் கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு வித்திட்டு இறுதியில் ஐரோப்பிய நெருக்கடிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய நெருக்கடி - வேளாண்மைப் புரட்சி!

ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத் தேவையான உணவுக்கே சிக்கல் ஏற்படும் போது தான் அவன் அதற்கான மாற்றுத் தீர்வுகளை சிந்திக்கத் தொடங்குகிறான். பொதுவாக பிரச்னைகளும் சவால்களும் நெருக்கும்போது ஒரு சராசரி மனிதன் நிலை குலைந்து போவான். ஆனால் The European crisis என அழைக்கப்பட்ட ஐரோப்பிய நெருக்கடி ஐரோப்பியர்களை தெளிவாகச் சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியதன் விளைவுதான் The Agricultural Revolution என அழைக்கப்பட்ட வேளாண்மைப் புரட்சி.

முதல் வேளாண்மைப் புரட்சியாக கி.மு 10,000-ல் மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடும் நிலையில் இருந்து மாறி தனக்கான உணவை தானே பயிர்செய்து தொடங்கியதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையான விவசாயப் புரட்சி என்பது 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய விவசாயம் பழைய நுட்பங்களில் இருந்து புதிய செயல்முறைகளுக்கு மாறியதையே குறிக்கின்றது. விவசாயப் புரட்சியின் முக்கிய குறிக்கோள் பஞ்சத்தைத் தடுக்க போதுமான உணவை உற்பத்தி செய்வதாக மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது.

வேளாண்மைப் புரட்சி
வேளாண்மைப் புரட்சி

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேளாண்மைத் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் அதிக அறுவடைக்கும், சிறந்த உணவு தரத்திற்கும் வழிவகுத்தது. இக்காலத்தில் விவசாயம் சார்ந்து வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக விவசாய நிலங்களை விரிவாக்குதல், பயிர் சுழற்சி முறை அறிமுகத்தினால் புதிய பயிர்களை விதையிடல் போன்ற பல புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதனால் வேளாண்மைப் புரட்சி உணவு விநியோகத்தை அதிகரித்து உழைப்பின் அளவைக் குறைத்தது.

விவசாயப் புரட்சியின் மற்றொரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு நார்ஃபோக் நான்கு-படி சுழற்சி முறை (Norfolk four-course system). இது மண் வளத்தை மேம்படுத்தி தரிசு நிலையை குறைப்பதன் மூலம் பயிர் மற்றும் கால்நடைகளின் கருக்கட்டலை பெரிதும் அதிகரித்தது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரண்டு பிரிட்டிஷ் விவசாயிகளான ராபர்ட் பேக்வெல் மற்றும் தாமஸ் கோக் (Robert Bakewell and Thomas Coke), மரபணு வேறுபாட்டைக் குறைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க முறையை ஒரு அறிவியல் நடைமுறையாக அறிமுகப்படுத்தினர்.

பிரிட்டனில் விவசாயப் புரட்சி ஐரோப்பிய மக்கள் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிரூபிக்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித் திறனும் கணிசமாக வளர்ந்தது. 1700 மற்றும் 1870-க்கு இடையில் மொத்த விவசாய உற்பத்தி 2.7 மடங்கு அதிகரித்தது. 1900-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் விளைச்சளுடன் டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளால் மட்டுமே போட்டியிட முடிந்தது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே தனித்தனி விவசாயப் புரட்சிகள் வெடித்ததால் தானிய விளைச்சல் சராசரியாக 60% உயர்ந்து ஐரோப்பா கண்டத்தின் உணவு வழங்கலை அதிகரித்தது.

இக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மக்கள் தொகை விரைவாக வளர்ந்தது. 1700-ல் 5.5 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 1801-க்குள் 9 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. அதிகரித்த மக்கள் தொகை தேவைகளையும் சேர்த்து அதிகரித்தது. தேவைகள் இவர்களை தர்க்க ரீதியாக சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவு ஐரோப்பிய மறுமலர்ச்சியாக மலர்ந்தது.

ஐரோப்பிய அரசியல் அடையாளங்கள்!
ஐரோப்பிய அரசியல் அடையாளங்கள்!

18-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய அரசியல், தத்துவம், அறிவியல் மற்றும் தகவல் தொடர்புகள் தீவிரமாக மறுசீரமைக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் அதுவரை இருந்து வந்த பாரம்பரிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தினர். பகுத்தறிவு மாற்றத்தின் மூலம் மனித குலத்தை மேம்படுத்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டனர். பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சட்டங்கள், கோட்பாடுகள் உருவாகின. அது ஐரோப்பாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த தொழிற்துறைப் புரட்சிக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய மறுமலர்ச்சி

இத்தாலியில் 14-ம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சி (Renaissance) காலத்தில் போடப்பட்ட விதையில் இருந்து உருவான விருட்சமாக, 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் The Enlightenment Age என குறிப்பிடப்படும் ஐரோப்பிய அறிவொளிக் காலம் மலர்ந்தது. பல தத்துவவாதிகள், அரசியல் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள், கணித மேதைகள், இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கிய ஐரோப்பாவின் பொற்காலமானது. நவீன ஐரோப்பிய சமுதாயத்தை சீர்படுத்திய உறுதியான அறிவியல், அரசியல், கலை, இலக்கிய மற்றும் தத்துவ சிந்தனைகளின் பிறப்புக் காலமாக இது வரலாற்றில் பதிவானது. ஐரோப்பாவின் அறிவொளி யுகம் எனக் குறிப்பிடப்பட்ட இந்த 18-ம் நூற்றாண்டில்தான் அங்கு அறிவியல் அடித்து ஆட ஆரம்பித்தது.

இக்காலகட்டத்தில் கணிதம், அறிவியல், புவியியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், இலக்கியம், சமயம், போன்ற எல்லாவற்றிலும் எழுச்சி உண்டானது. பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக அதுவரை இருந்து வந்த நிலமானிய முறை ஒழிந்து புதிய தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித ஒழுக்கமும் சமூக பண்பும் தழைத்தோங்கின.

அதுவரை பின்னிப் பிணைந்திருந்த மதமும், மருத்துவமும் இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் பிரிந்து தெளிவு பெற்றது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே முன்னேற ஆரம்பித்தது. இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமான முன்னோடிகளான ஆங்கிலேயர்கள் பிரான்சிஸ் பேகன் மற்றும் தாமஸ் ஹாப்ஸ் (Francis Bacon and Thomas Hobbes), பிரெஞ்சுக்காரர் ரெனே டெஸ்கார்ட்ஸ் (René Descartes) மற்றும் அறிவியல் புரட்சியின் முக்கிய இயற்கை தத்துவவாதிகளான கலிலியோ கலிலி (Galileo Galilei), ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Kepler) மற்றும் கோட்ஃபிரைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz) போன்றோர் ஐரோப்பிய மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றனர். ஐசக் நியூட்டனின் ‘Principia Mathematica’ (1686) மற்றும் ஜான் லோக்கின் ‘Essay Concerning Human Understanding’ (மனித புரிதல் பற்றிய கட்டுரை - 1689) ஆகிய இரண்டும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கான அறிவியல், கணித மற்றும் தத்துவக் கோட்பாடுகளை வழங்கிய இரண்டு முக்கிய படைப்புகளானது.

இந்த Age of Enlightenment காலப்பகுதியை தொடர்ந்து ஐரோப்பாவில் புரட்சி வெடித்தது. மன்னராட்சிக்கு எதிராக வெடித்த பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த தொழிற்புரட்சியும் பனி போர்த்திய இருண்ட இரவுகளில் சுருண்டிருந்த ஐரோப்பாவில் படர்ந்த முதல் ஒளிக்கீற்றுகள்.

அதிரடியாக ஆட்டத்தில் இறங்கிய ஐரோப்பிய புரட்சிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ஐரோப்பிய சமூகத்தை அப்படியே மாற்றிப்போட்டது. ஏழு கண்டங்களில் ஏதோ ஒரு கண்டமாக அதுவரை இருந்த ஐரோப்பாவை, நவீன உலகின் அதி முன்னேற்றமடைந்த ஒரு பலமான வல்லரசாக மாற்றிய அந்த மேஜிக் பவர் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்!

யூரோ டூர் போவோம்!