ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டினுள் ஊடுருவும்போது தூசி வர வாய்ப்புள்ளதால், சூரிய வெளிச்சம் வராதபடி ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

வெளியூரில், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் மாதக்கணக்கில் சென்று தங்கி வருவது பெரியவர்களுக்கு அலாதியான ஆனந்தத்தைக் கொடுக்கும். சிலரோ தங்களின் கனவுப் பயணமாக ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று வருவார்கள். வேலை, கல்லூரிப் படிப்பு காரணமாக வேறு ஊரில் வசிக்கும் பிள்ளைகளுடன் சென்று தங்கிவிட்டு வீடு திரும்பும் பெற்றோர்கள் பலர். இதுபோன்ற பயணங்களுக்குத் திட்டமிடுவதும், திட்டமிட்டபடியே பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்புவதும் சிலருக்குச் சவாலான ஏற்பாடு என்பதால், அந்தப் பயணம் நல்லபடியாக நடந்து முடிவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

சரி... வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ நாம் வெளியூர் செல்லும்போது வீட்டுப் பராமரிப்பில் எத்தனை பேர் கவனம் கொடுக்கிறோம்? நிதர்சனம் என்னவென்றால், வெளியூர் போகும்போது பரபர வேலைகளில் வீட்டில் போட்டது போட்டபடி விட்டுச் சென்று, மீண்டும் வசிப்பிடம் திரும்பிய பிறகுதான் பலரும் வீட்டை ஒழுங்குபடுத்துவார்கள். இதனால், வீட்டில் குப்பைகள் மற்றும் தூசி குவியலாம். பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததுமே அலர்ஜியால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். இதைக்கூட சரிசெய்து விடலாம் என்றாலும், மின் விபத்து போன்ற அசம்பாவிதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை செய்தி.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
DEVASHISH_RAWAT

‘வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தம்பதி, பயன்படுத்தாமல் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறலால் மருத்துவ மனையில் அனுமதி’, ‘நீண்டகாலமாகப் பூட்டிக்கிடந்த வீட்டில் குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து’, ‘பராமரிக்கப்படாத வீட்டில் மின்கசிவு; பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’ - இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்திருப்போம். பராமரிப்பில்லாத வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் மற்றும் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு அம்சம் தேவைப்படும் பொருள்களின் பயன்பாட்டில் நாம் முறையாகக் கவனம் கொடுக்காமலும், எச்சரிக்கையுடன் இல்லாமலும் இருப்பதால் நேரிடும் அசம்பாவிதங்களுக்கு உதாரணங்கள் இவை. அன்றாட செய்திகளில் இதுபோன்ற எச்சரிக்கை செய்திகளைக் கேள்விப்பட்டாலும், வெளியூர் பயணங்களில் வீட்டுப் பராமரிப்புக்கு நாம் போதிய கவனம் கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

மாதக்கணக்கில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூரோ, வெளிநாடோ செல்பவர்கள், பயணத்துக்கு முன்பும், பயணம் முடிந்து வீடு திரும்பியதும் பழுதடைந்த பொருள்கள், மின்சாதனப் பொருள்கள் மற்றும் முக்கியமான பொருள்களை யெல்லாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும், வீட்டுப் பராமரிப்பில் முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டிய விஷயங்கள், அவசியமான ஆலோசனைகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் இந்த இணைப்பிதழில் வழிகாட்டுகிறார்கள்.

ராஜலட்சுமி
ராஜலட்சுமி

பூஜை அறை பராமரிப்பு... செக் லிஸ்ட்!

“பூஜை அறை என்றாலே பலரும் சென்டிமென்ட் பார்ப்பார்கள். ஒருசில தினங்கள் மட்டும் வெளியூர் செல்வதாக இருந்தால், நம் வழக்கமான பூஜை விஷயங்களை எப்போதும்போல செய்துவிட்டுச் செல்லலாம். பூஜை அறையில் எவ்வித மாற்றமும் செய்யத் தேவையில்லை. இதுவே, நாம் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பப் பல மாதங்கள் ஆகும் எனில், பூஜை அறையை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டுச் செல்லலாம். மீண்டும் வீடு திரும்பியதும், வீடு மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்வதுடன், பூஜை அறையில் மஞ்சள் நீர் தெளித்துவிட்டு மீண்டும் பூஜை நடைமுறையைத் தொடரலாம்” என்று ஆலோசனை கூறும் சென்னையிலுள்ள ‘விளக்குக்கடை’ நிறுவனத்தின் உரிமையாளரான ராஜலட்சுமி, பூஜை அறை பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

சாமி சிலைகள் மற்றும் விளக்குகள்... இப்படிச் செய்யலாம்!

“கடவுள் படங்களைத் துடைத்து அப்படியே வைத்துவிட்டுச் செல்லலாம். குறிப்பிட்ட சில சாமி சிலைகள் மற்றும் விளக்குகளை அப்படியே விட்டுச் செல்லக் கூடாது. சிகைக்காயுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, கையால் அல்லது புதிய டூத் பிரஷ் கொண்டு பஞ்சலோக சிலைகள், உலோக சிலைகள், வெள்ளி சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள், உலோக விளக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, தூய்மையான காட்டன் துணியில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, சுத்தம் செய்த விளக்கு மற்றும் உலோகச் சிலைகளைத் துடைக்க வேண்டும். இதனால், சிலைகளும் விளக்குகளும் நிறம் மங்காமல் பளிச்சென இருக்கும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

விலையுயர்ந்த சிலைகள் அல்லது விளக்குகளாக இருந்தால் அவற்றைச் சுத்தம் செய்த பின்னர், காகிதப் பெட்டியில் அல்லது துணியால் சுற்றிப் பத்திரப்படுத்தி வைக்கலாம். பல மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதும், சிகைக்காயுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, உலோக சிலைகள் மற்றும் விளக்கு களை மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு பூஜை நடைமுறைகளைத் தொடர லாம். சாதாரண உலோக விளக்குப் பயன்படுத்தினால், அதைச் சுத்தம் செய்து, அதன் மீது குங்குமம் மற்றும் மஞ்சள் கொண்டு பொட்டு வைத்து மங்களகரமாக விட்டுச் செல்லலாம். இதை ‘நிறை விளக்கு’ என்பார்கள். மண்விளக்குப் பயன் படுத்தினால், அதை நீரில் சுத்தம் செய்து அப்படியே வைத்து விட்டுச் சென்றாலே போதுமானது.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

மலர்கள் வேண்டாம்... இந்த மாலைகள் ஓகே!

மாதக்கணக்கில் வெளியூர் செல்வதாக இருந்தால், சாமி சிலைகள் மற்றும் படங்களுக்குச் சூடிய மலர்கள் அழுகிப்போகவோ, அதில் பூச்சிகள் வரவோ வாய்ப்புள்ளது. எனவே, நீண்டகால பயணமாக வெளியூர் செல்வதாக இருந்தால் கடவுளுக்குச் சூடிய மலர் எதுவாக இருந்தாலும் அதை அப்புறப்படுத்திவிட வேண்டும். கடவுளுக்கு ஏதாவதொரு மாலையைச் சூடிவிட்டுச் செல்ல விருப்பப் படுபவர்கள், கிராம்பு மாலை அல்லது ஏலக்காய் மாலையைப் பயன்படுத்தலாம். ஏலக்காய் மாலை சில மாதங்களில் நிறம் மாறினாலும், வேறு எந்த பாதிப்பும் இருக்காது. துளசி மற்றும் வில்வம், நாள்பட்டாலும் காய்ந்ததுபோல மாறுமே தவிர, அதன் மகத்துவம் எத்தனை காலமானாலும் மாறாது என்பார்கள். அதனால், நீர் அதிகம் தெளிக்காத துளசி அல்லது வில்வ மாலையைக் கடவுளுக்குச் சூடிவிட்டுச் செல்லலாம்.

கெட்டுப்போகாத பிரசாதம்!

கடவுளுக்குப் படைத்த இனிப்புகளை அப்படியே விட்டுச்சென்றால், எறும்புகள், பூச்சிகள், பூஞ்சைத்தொற்று உருவாகலாம். எனவே, பிரசாதம் எதுவாக இருந்தாலும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டுச் செல்வது நல்லது. சென்டிமென்ட்டாக பிரசாதம் அல்லது உணவுப் பொருள் ஏதாவது கடவுளுக்குப் படைத்துவிட்டு விட்டுச் செல்வதென்றால், விரைவில் கெட்டுப்போகாத உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றைக் காற்றுப் புகாத வகையில் படைக்கலாம். அரிசி, பருப்பு படைக்கும் பழக்கம் இருந்தால், பிரசாதம் வைக்கும் கிண்ணத்தில் அவற்றைப் படைத்துவிட்டுச் செல்லலாம்” என்கிறார் ராஜலட்சுமி

பிரசாந்த் குமார்
பிரசாந்த் குமார்

வரவேற்பறை மற்றும் படுக்கையறை... தூசும் தூய்மையும்!

அன்றாடம் வீட்டில் நாம் அதிகம் நேரம் செலவிடுவது வரவேற்பறை மற்றும் படுக்கையறையில்தான். இவற்றின் தூய்மைதான் பலருக்கும் பாசிட்டிவ் உணர்வைக் கொடுக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் தங்களின் நேரத்தை அதிகம் செலவிடும் இடங்கள் இவை என்பதால், இவற்றுக்கான பராமரிப்பில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். வரவேற்பறை மற்றும் படுக்கையறை பராமரிப்பு குறித்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னை, ‘வி.வி.ஹோம் க்ளீனிங் சர்வீஸ்’ உரிமையாளரான பிரசாந்த் குமார்.

வரவேற்பறை... சோஃபா முதல் மின் விளக்குகள் வரை!

“நீண்டகாலமாக வீட்டில் யாரும் இல்லை என்றால், பயன்படுத்தப்படாமலேயே இருந்தால், வீட்டில் சிலந்தி வலை கட்டுவது, பூச்சிகள் வருவது அதிகமாகும். வெளியூர் போகும் முன்பு வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்து ஒட்டடை இல்லாததை உறுதிசெய்துவிட்டுச் செல்லலாம். அதேபோல வெளியூர் சென்றுவந்த பிறகும், முதல் வேலையாக வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்துவிடுவது நல்லது. தூசி அதிகம் இருந்தால், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஜலதோஷம் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வீடு சுத்தமாக இருப்பதை முன்னுரிமை கொடுத்து உறுதிசெய்ய வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
mtreasure

எலி, அணில், கரப்பான்பூச்சி..!

கிச்சன், பாத்ரூம் போன்ற அறைகளில்தான் கரப்பான்பூச்சிகள் அதிகம் இருக்கும். அந்த அறைகள் திறந்திருந்தால், கரப்பான்பூச்சிகள் வரவேற்பறை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, வெளியூர் செல்லும்போது வீட்டின் எல்லா அறைகளையும் மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.

வீட்டில் எலி அல்லது அணில் தொந்தரவு இருந்தால், மின்சாதன வயர்களை அவை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இது தெரியாமல் வீடு திரும்பியதும் மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது மின்கசிவு அல்லது மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீண்டகாலத்துக்கு வெளியூர் செல்பவர்கள், வீட்டில் மெயின் மின்சார இணைப்பை ஆஃப் செய்துவிட்டுச் செல்லலாம். வீடு திரும்பியதும், வயர்கள் மற்றும் மின் இணைப்பு அனைத்தும் பாது காப்பாக இருப்பதை உறுதிசெய்துவிட்ட பின்னரே வீட்டின் மெயின் மின்சார இணைப்பை ஆன் செய்ய வேண்டும்.

மின்விளக்கு எதுவுமே வேண்டாம்!

சிலர், வெளியூர் செல்லும்போது பூஜை அறை அல்லது வரவேற்பறையில் ஜீரோ வாட்ஸ் மின்விளக்கை சென்டிமென்ட்டாக எரியச் செய்துவிட்டுச் செல்வார்கள். மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தாலே பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. ஒருசில தினங்களில் வீடு திரும்பும்பட்சத்தில் ஜீரோ வாட்ஸ் மின்விளக்கை எரிய விடலாம். ஆனால், மாதக்கணக்கில் வீட்டில் நாம் இல்லாதபட்சத்தில் ஜீரோ வாட்ஸ் மின்விளக்கு உட்பட எல்லா மின் சாதனங்களையும் அணைத்துவிட்டுச் செல்வதுதான் நல்லது.

ஜன்னல் வழியே காற்று நுழைய வாய்ப்பிருந்தால் தூசி அல்லது பூச்சிகள் வீட்டுக்குள் நுழைந்து வீடு அசுத்தமாக வாய்ப்புள்ளது. எனவே, காற்று நுழையாத வகையில் ஜன்னல் மற்றும் கதவுகள் அனைத்தையும் பாதுகாப் பாக மூடி வைக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டினுள் ஊடுருவும்போது தூசி வர வாய்ப்புள்ளதால், சூரிய வெளிச்சம் வராதபடி ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
WDnet

சோஃபாவை மூடி வைக்கவும்!

வெளியூர் செல்லும் முன்பு சோஃபாவைத் துடைத்துவிட்டுச் செல்லலாம். தேவைப்பட்டால் அதன்மீது பெரிய பாலித்தீன் கவர் அல்லது துணி கொண்டு மூடி வைக்கலாம். பழைய சோஃபாவாக இருந்தால், மாதக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது அதில் மூட்டைப்பூச்சிகள் தொந்தரவு வர வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பியதும், சோஃபாவை முழுமையாகச் சரிபார்த்து, அதில் மூட்டைப்பூச்சி தென்பட்டால் வெயிலில் சில மணி நேரம் சோஃபாவை வைத்திருந்து சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் கார்பென்டரை அழைத்து சர்வீஸ் செய்யலாம். மிகவும் பழைய சோஃபாவை பயன்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது. சோஃபாவில் அதிக அளவில் மூட்டைப் பூச்சி தொந்தரவு இருந்தால் அதை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அலமாரிகள்... வார்னிஷ்!

அலமாரியில்தான் எலி மற்றும் மூட்டைப்பூச்சித் தொந்தரவுகள் அதிக அளவில் இருக்கும். எனவே, புத்தகம், அலங்காரப் பொருள்கள் உட்பட அலமாரியில் எந்தப் பொருளை வைத்திருந்தாலும், அவற்றில் அவசியம் தேவையானது மற்றும் தேவையற்றது எனப் பிரித்து, தேவையற்றதை அப்புறப்படுத்திவிட வேண்டும். தேவையான புத்தகங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களை, பாலித்தீன் கவரில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டுச் செல்லலாம். தேவைப்பட்டால், அலமாரியைச் சுத்தம் செய்து வார்னிஷ் அடித்து நன்கு காய்ந்ததும், பத்திரப்படுத்திய பொருள்களை அதில் வைத்துவிட்டுச் செல்லலாம்.

படுக்கையறை பராமரிப்பு... டிசைனர் கட்டிலா..?!

மெத்தை மற்றும் தலையணையை வாரக்கணக்கில் பயன்படுத்தாமல் இருந்தாலும், முறையாகப் பராமரிக்காமல் அவற்றை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தினாலும், தூசி மற்றும் கண்ணுக்குத் தெரியாத தொற்றுகள் பரவி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் முன்பு படுக்கையறை துணி விரிப்பு, தலையணை உறை, பெட்ஷீட் ஆகியவற்றைத் துவைத்துச் சுத்தமாக வைத்துச் செல்ல வேண்டும். இதனால், அவற்றில் உடனடியாக தூசி சேராது. மெத்தை கனமாக இருந்தால் அதை அப்படியே பெட்டில் விட்டுச் செல்லலாம். கனம் குறைவாக இருந்தால் மெத்தையைத் தரையில் நிற்க வைத்துச் செல்லலாம்.

வீடு திரும்பியதும் படுக்கையறை துணி வகைகள் அனைத்தையும் மற்றொரு முறை துவைத்துப் பயன்படுத்த வேண்டும். தலையணைகளை வெயிலில் சில மணி நேரம் வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். மாஸ்டர் பெட் போன்ற டிசைனர் கட்டிலின் கீழ்ப்புறத்தில் இருக்கும் ரேக்குகளில் தேவையற்ற பொருள்களை வைக்காமல் சுத்தமாக வைத்துவிட்டுச் செல்வது நல்லது.

வார்ட்ரோப்/பீரோ... இவற்றை விட்டுச் செல்ல வேண்டாம்!

ஆடைகளை வைக்கும் இடம் என்பதால், தூசி மற்றும் பூச்சிகள் உள்ளே நுழையாத வகையில் வார்ட்ரோப்/பீரோவை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் முன்பு வார்ட்ரோப்/பீரோவைச் சுத்தம் செய்து ஆடைகளை முறையாக அடுக்கி வைத்துவிட்டுச் செல்லலாம். வெளியூரிலிருந்து வீடு திரும்பியதும் மீண்டும் ஒருமுறை வார்ட்ரோப்/பீரோவைச் சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்துவது நல்லது. அப்போது, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைவருக்குமான டவல் மற்றும் தினசரி பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தையும் துவைத்த பின்னர் பயன்படுத்துவது நலம்.

வார்ட்ரோப் அல்லது பீரோவில் நகைகள் மற்றும் பணத்தை வைத்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பரணும் பாலித்தீன் கவரும்..!

அடிக்கடி பயன்படுத்தாத பொருள்கள், பாத்திரங்கள் போன்றவற்றைப் படுக்கையறை பரணில்தான் பலரும் வைப்பார்கள். வெளியூர் செல்லும் முன்பு, பரணை நன்கு சுத்தம் செய்து, அதில் வைத்திருக்கும் பொருள்களையும் துடைத்து, தூசு படியாத வகையில் பாலித்தீன் கவர் அல்லது துணியைக் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். அதேபோல வீடு திரும்பியதும் பரண் மற்றும் அதில் வைத்திருக்கும் பொருள்களைச் சுத்தம் செய்துவிடுவது நல்லது.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
indigosmx

பாத்ரூம்... இவற்றை உறுதி செய்யவும்!

வெளியூர் செல்லும் முன்பு, படுக்கையறை பாத்ரூம் மூடியிருப்பதை உறுதிசெய்வதுடன், பாத்ரூமில் நீர்க்கசிவு ஏதுவும் இல்லாததையும், காற்று வெளியேறும் துளையின் (Exhaust Way) வழியே பூச்சிகள் மற்றும் தூசி ஊடுருவுவது தவிர்க்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று விரிவாக விளக்கமளித்தார் பிரசாந்த் குமார்.

 சி.வெங்கடேஸ்வரன்
சி.வெங்கடேஸ்வரன்

வாஷிங் மெஷினுக்கு ஸ்டீல் நெட்!

நீண்ட நாள்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழலில், வாஷிங் மெஷினை பொறுத்தவரை செல்வதற்கு முன்பும், திரும்ப வந்த பிறகும் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் `20-20 டெக் சொல்யூஷன்' சர்வீஸ் இன்ஜினீயர் சி.வெங்கடேஸ்வரன்.

``ஸ்விட்ச் போர்டிலிருந்து வாஷிங் மெஷினின் பிளக்கை அகற்றவும். தற்போது வரும் வாஷிங் மெஷின்களில், பைப்புகளில் இருந்து தானாக தண்ணீர் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. வெளியூர் செல்லும்போது, இந்த பைப்புகளை மூடிவிட வேண்டும். மேலும் அந்த பைப்பில் இணைத்திருக்கும் ஹோசை (Hose) கழற்றிவிட வேண்டும்.

கழிவுநீர் வெளியே செல்லும் ஹோசையும் கழற்றிவிட வேண்டும். தவிர அந்த ஓட்டையை அடைத்து விடவேண்டும். சில வாஷிங் மெஷின் மாடல்களில், அந்த ஓட்டையை அடைக்கும் `லாக்' தரப்பட்டிருக்கும்.

எலி, பூச்சி போன்ற தொல்லைகள் இருந்தால் நிச்சயம் வாஷிங் மெஷினின் அடிப்பகுதியில் `ஸ்டீல் நெட்' (Steel net) பொருத்த வேண்டும். வாஷிங் மெஷினுக்குள் பூனை, எலி போன்றவை நுழைந்துவிடாமல் தடுக்க, அதன் டோர்/மூடியை மூடிய பின் சற்று கனமான பொருளை அதன் மீது வைத்துவிட வேண்டும்.

வீடு திரும்பிய பின் டெக்னீஷியனை அழைத்து சர்வீஸ் பார்த்துக்கொள்ளலாம். வாஷிங் மெஷினில் துணிகளை அலசுவதற்கு முன்னர், வெறும் தண்ணீர் நிரப்பி ஒருமுறை ஓடவிட வேண்டும்” என்கிறார் சி.வெங்கடேஸ்வரன்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
Ljupco

ஏ.சி, தண்ணீர் மோட்டார்... என்ன செய்ய வேண்டும்?!

ஆறு மாத காலம் வரை வெளியூர் செல்பவர்கள், ஏ.சி, தண்ணீர் மோட்டாரில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார், `ஏரோ இன்ஜினீயர்ஸ்' நிர்வாக இயக்குநர் ஜவஹர்.

``பொதுவாக ஏ.சியை பொறுத்தவரை, காற்றை மறுசுழற்சி செய்து கூலிங் தரும் ’ஏர் பில்டரி’ல் தூசி படிந்துவிடாமல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதை கழற்றி தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் மீண்டும் ஏ.சியில் பொருத்த வேண்டும். வசிப்பிடத்தில் சீரற்ற மின்சார பகிர்வு (Electrical Fluctuation) உள்ளவர்கள், நிச்சயம் ஸ்டபிளைஸர் பயன்படுத்த வேண்டும். ஏ.சியை ஆஃப் செய்யும்போது ஸ்டபிளைஸரையும் ஆஃப் செய்ய வேண்டும். வெளியூர் செல்லும்போது, ஸ்விட்ச் போர்டிலிருந்து ஏ.சி மற்றும் ஸ்டபிளைஸர் பிளக்கை கண்டிப்பாக அகற்றிவிட வேண்டும். ஒருமுறை ஏ.சி சர்வீஸ் செய்துவைத்துவிட்டுச் செல்வது நல்லது.

 ஜவஹர்
ஜவஹர்

தண்ணீர் மோட்டாரை தொடர்ந்து சில மாதங்களாக இயக்காமல் இருப்பது நல்லதல்ல. என்றாலும், தவிர்க்க முடியாமல் வெளியூர்/வெளிநாடு செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்ப்போம். தண்ணீர் மோட்டார் மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீட்டை வாடகைக்கு விட்டிருப் பவர்கள், ஆட்டோமேட்டிக் லெவல் மேனேஜர் ’Automatic Level Manager’ என்ற கருவியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவி தொட்டியில் தண்ணீர் குறைய குறைய நிரப்பிக் கொள்ளும். எந்தளவு தண்ணீர் குறைந்த பிறகு நிரப்பவேண்டும் என்பதை செட் செய்துவிடலாம். இதனால் மனித இயக்கம் தேவைப்பாடது என்பதோடு, மின்சாரம் மற்றும் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.

வீடு திரும்பிய பின்னர், மோட்டாரில் உள்ள ஃபேன் பிளேடை நன்றாகச் சுற்றிவிட்டு இயக்க வேண்டும். தெரியாதபட்சத்தில், டெக்னீஷியன் உதவியை நாடலாம்’’ என்று அறிவுறுத்தினார் ஜவஹர்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
Chirag Kanubhai Panchal

வீட்டுத்தோட்டம் வாடாமல் இருக்க...

இன்று பலரும் மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் என்று ஆர்வம்காட்டி வரு கிறார்கள். பல மாத காலம் வெளியூர்/வெளிநாடு செல்ல நேர்பவர்கள், அந்தச் செடிகளை எப்படி பராமரிக்கலாம் என்பது பற்றி கூறுகிறார்கள் ஆர்கானிக் விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆலோ சகர் அனுப்குமார் மற்றும் `இந்திரா கார்டன்' மாடித் தோட்ட நிபுணர் மைத்ரேயன்.

 மைத்ரேயன்,  அனுப்குமார்
மைத்ரேயன், அனுப்குமார்
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

’’ஆறுமாத காலம் நாம் வீட்டில் இல்லை என்றால், வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க நிச்சயம் ஆட்களை நியமித் திருக்க வேண்டும். ஒரு வார காலம் முதல் ஒரு மாத காலம் வரை வீட்டில் இருக்க முடியாத சூழல் என்றால், ஆட்டோமேட்டிக் வாட்டரிங் சிஸ்டம் (Automatic Watering System) அமைக்கலாம். என்றாலும், இதன் மூலம் செடிகளுக்குத் தண்ணீர் மட்டுமே செல்லும். பூச்சிகள் வருவதை தடுக்க முடியாது. வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றிக்கொண்டிருந்தால், செடி வளருமே தவிர எந்த சத்தும் இருக்காது மற்றும் காய்க்காது. இவ்வளவு வசதிகள் இருந்தாலும்கூட, வீட்டுத் தோட்டத்தை யாராவது ஒருவர் நேரடியாகப் பராமரிப்பது மிக மிக அவசியம். இல்லையென்றால், ஆறு மாதம் கழித்து வீட்டுத்தோட்டத்தை சென்று பார்த்தால், தோட்டம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடலாம். ஆறு மாதம் என்பது ஒரு பட்டத்திற்கு சமம். காய்கறித் தோட்டத்தில் பூச்சிகள் தாக்குதல் நடக்கக்கூடும். எனவே, வீட்டில் நாம் இல்லை என்றாலும், மாற்று ஏற்பாடாக கட்டாயம் வேறு யாரையாவது நியமித்து தோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்’' என்று ஆலோசனை கூறினார்கள் அனுப்குமாரும் மைத்ரேயனும்.

 சிவகுமார்
சிவகுமார்

கழிவறை... ஹீட்டர் மற்றும் பைப்புகள்!

கழிவறையில் இருக்கும் பைப்புகள் மற்றும் ஹீட்டர் பராமரிப்பு பற்றி `வொயிட் பிரிக் இன்ஜினீயர்' கட்டுமான நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் சிவகுமார்...

``ஒரு மாதத்துக்கு மேல், நீண்ட நாள்களுக்கு வெளியூரோ, வெளிநாடோ செல்லும்போது, தண்ணீர் தொட்டியில் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, அனைத்து தண்ணீர் வால்வுகளையும் அடைத்துவிட்டுச் செல்வது மிக மிக அவசியம்.

சோலார் அல்லது எலெக்ட்ரிக் ஹீட்டர் எதுவாக இருந்தாலும், அதிலிருக்கும் ஹாட் வாட்டர் பேனலை வெளியே செல்லும்போது காலி செய்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தண்ணீரில் இருக்கும் உப்பு மற்றும் தாதுக்கள் ஹீட்டரை பாதிக்காமல் தவிர்க்கலாம்.

வீடு திரும்பிய பின்னர், மீண்டும் தண்ணீர் தொட்டியை சுத்தமாகக் கழுவி, பின்னர்தான் பயன்படுத்த வேண்டும்’’ என்று விளக்கினார் சிவகுமார்

 சாமிநாதன்
சாமிநாதன்

கறையான்... கெட் அவுட்!

நீண்ட நாள்களுக்கு வீட்டை பூட்டிவிட்டுச் செல்லும்போது, கறையான் பிரச்னைக்கு அதிகமாகவே வாய்ப்பு உண்டாகும். அதற்கான தீர்வை விளக்கு கிறார் `சன்பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் (பி) லிமிடெட்' - பெஸ்ட் கன்ட்ரோல் நிபுணர் சாமிநாதன்.

``வீட்டில் நீண்ட நாள்களுக்கு ஆட்கள் இல்லையென்றால், கறையான், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் அதிகரித்துவிடும். இதற்கு `ஆன்டி டெர்மைட் ட்ரீட்மென்ட்' (Anti-termite treatment) நல்ல தீர்வு ஆகும். இதை ஒருமுறை செய்தால் நான்கு முதல் பத்து வருடங்கள் வரை வாரன்ட்டி தரமுடியும். இதன் மூலம் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கியப் பொருள்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த ட்ரீட்மென்டை வீடு கட்டும்போதே மூன்று கட்டங்களாகச் செய்யலாம். இதற்கு, வீடு கட்டும் மொத்த செலவில் 0.5% மட்டுமே செலவு ஆகும்’’ என்று விளக்கினார் சாமிநாதன்

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

பைக், கார்.. டேங்க், பேட்டரி!

நீண்ட நாள்களுக்கு இயக்காமல் பைக், காரை நிறுத்திவைக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் விளக்குகிறார்கள் மெக்கானிக் ராஜ் மற்றும் `மாருதி சுசூகி கார்ப்பரேட்' மேனேஜர் விமல்நாத்.

``ஆறுமாத காலத்துக்கு வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கும் சூழலில், பைக் பெட்ரோல் டேங்க்கில் கொஞ்சம் கூட பெட்ரோல் இருக்கக் கூடாது. மேலும், பைக் பேட்டரி ரீசார்ஜ் ஆகாமல் டிரை ஆகிவிடும் என்பதால் அதை டிஸ்கனெக்ட் செய்துவிட வேண்டும். பைக் நிறுத்துமிடத்தில் எலி தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். எலிகள் பைக் வயரை கடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

ஊரிலிருந்து திரும்பியதும், முதலில் பைக்கில் ஏர் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். டிஸ்கனெக்ட் செய்த பேட்டரி வயரை மாட்டிவிட வேண்டும். பெட்ரோல் நிரப்பிக்கொள்ள வேண்டும்.

 ராஜ்,  விமல்நாத்
ராஜ், விமல்நாத்

வெளியூர் செல்லும்போது காரை திறந்தவெளியில் நிறுத்தாமல் க்ளோஸ்டு பார்க்கிங்கில் (closed parking) விட்டுச்செல்வது நல்லது. வெயில் மற்றும் மழையால் ரப்பரால் ஆன டயரில் விரிசல் உண்டாவதை தடுக்க, வெயில், மழை தீண்டாத இடத்தில் நிறுத்த வேண்டும். பாடி ஸ்கிராட்ச் தவிர்க்க ஒரிஜினல் பாடி கவர் கொண்டு மூடிச் செல்லவேண்டும். காரில் உள்ள அனைத்து ஸ்விட்ச்களும் அணைக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

கார் பேட்டரி டெர்மினலை கழற்றிவிடுவது மிக மிக முக்கியம். நீங்களே இதை செய்கிறீர்கள் என்றால், முதலில் நெகட்டிவ் டெர்மினலையும், பிறகு பாசிட்டிவ் டெர்மினலையும் கழற்ற வேண்டும். தெரியாதவர்கள் மெக்கானிக் உதவியை நாட வேண்டும்.

வீடு திரும்பிய பிறகு, பேட்டரியில் உள்ள தண்ணீரை சரிபார்த்துவிட்டு, 28 அல்லது 48 மணி நேரம் சார்ஜ் செய்துவிட்டு பேட்டரியை பயன்படுத்துவது நல்லது.

எலி, அணில் போன்றவை காரை சேதமாக்க வாய்ப்புகள் உண்டு. எலி இரண்டு வயர்களை மட்டும் கடித்தால்கூட ஆயிரக்கணக்கில் செலவாகக் கூடும். இதைத் தவிர்க்க, புகையிலையைச் சுருட்டி போனட் உள்ளே வயர் போகும் இடங்களில் கட்டிவைத்தால் எலிகள் உள்ளே நுழையாது.

காரில் வயர் ஏதாவது அறுந்து தொங்குகிறதா, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வயர் கீழே கிடக்கிறதா என்று செக் செய்துகொள்ளவும்’’ என்று விளக்கினார்கள் மெக்கானிக் ராஜ் மற்றும் விமல்நாத்

 சி.ஜானகிராமன்
சி.ஜானகிராமன்

சிசிடிவி கேமரா இருந்தால்..!

மின்விளக்குகள், மின்விசிறிகள், கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம்ஸ் மற்றும் சிசிடிவி (CCTV) பராமரிப்பு பற்றி கூறுகிறார் `மேனகா எலெக்ட்ரிக்கல்' நிறுவனத்தின் டெக்னிக்கல் பிரிவு இயக்குநர் சி.ஜானகிராமன்.

``வெளியூருக்கு செல்லும் முன், அனைத்து ஸ்விட்ச் போர்ட்களில் இருந்தும் எல்லா மின்சார சாதனங்களின் பிளக்கையும் (plug) அகற்றிவிடுவது மிக மிக அவசியம்.

கிளம்பும் முன்னர், வீட்டில் உள்ள அனைத்து ஸ்விட்ச்களும் `ஆஃப்’ செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

சிசிடிவி கேமரா இருப்பின், அதற்குத் தேவையான இணைய (Wi-Fi) வசதி செய்து வைக்க வேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக டிஸ்ட்ரிபியூஷன் போர்டின்(Distribution board) அனைத்து பேஸ்களிலும் 30mA ELCB இருந்தால் நல்லது.

வீடு திரும்பிய பிறகு, டெக்னீஷியன் சர்வீஸ் முக்கியம்.

மின்சாரக்கசிவு இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார் சி.ஜானகிராமன்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

கணினி... நோட் பண்ணிக்கோங்க!

நீண்ட மாதங்கள் பயன்படுத்தாத சூழலில் லேப்டாப், கம்ப்யூட்டரை என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுகிறார், `GBS சிஸ்டம்ஸ் அண்டு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்'டின் நிர்வாக இயக்குநர் நாகேந்திரன்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

லேப்டாப்புகளில்...

``பேட்டரி மற்றும் சார்ஜரை அகற்றிவிட வேண்டும்.

லேப்டாப்பை அதற்குரிய பையில் வைத்து, தண்ணீர் பட வாய்ப்பில்லாத இடத்தில் பத்திரமாக வைக்க வேண்டும்.

லேப்டாப் பேக்கில் சாக்லேட், பிஸ்கட் என உணவுப் பொருள் எதுவும் இருக்கக் கூடாது.

லேப்டாப்பை மீண்டும் பயன்படுத்த எடுக்கும்போது படிந்திருக்கும் தூசியைத் துடைக்க காட்டன் பட்ஸ் (Cotton buds) பயன்படுத்த வேண்டும்.

லேப்டாப்பில் உள்ள எந்தவொரு ஓப்பன்களிலும், சுத்தப்படுத்தும் திரவ ஸ்பிரே பயன்படுத்தக்கூடாது.

 நாகேந்திரன்
நாகேந்திரன்

கம்ப்யூட்டர்களில்...

வைரஸ், அவுட்டேட்டடு சாஃப்ட்வேர் (Outdated software), மின்சார இணைப்பு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் உட்பட எந்த ஒரு திரவப் பொருளையும் கம்ப்யூட்டர் அருகில் வைக்கக் கூடாது.

USB உள்ளிட்ட கேபிள்களை கம்ப்யூட்டரிலிருந்து அகற்றிவிட வேண்டும்.

நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்த கம்ப்யூட்டரில் உள்ள தூசியை சுத்தம் செய்ய கம்ப்ரெஸ்டு ஏர் மெஷின் (Compressed air machine) பயன்படுத்த வேண்டும்’’ என்கிறார் நாகேந்திரன்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

``நான் அமெரிக்கா போயிட்டு திரும்பி வந்தப்போ என் வீடு..!’’

வெளியூர்/வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பு வீட்டைப் பராமரிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி, தன் அனுபவங்களையே டிப்ஸாக பகிர்ந்துகொள்கிறார், சமையற்கலை நிபுணர் ‘மெனு ராணி’ செல்லம்.

 ‘மெனு ராணி’ செல்லம்
‘மெனு ராணி’ செல்லம்

“நான் கோவிட் டைம்ல அமெரிக்கா போயிருந்தேன். ஆறு மாசத்துல திரும்பிடலாம்னுதான் திட்டம். ஆனா, சில தவிர்க்க முடியாத சூழலால கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் அங்கேயே இருக்கற மாதிரி ஆகிடுச்சு. இந்தியா திரும்பினப்போ எங்க வீட்டைப் பார்த்து ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டேன். வீடு முழுசும் பழுதாகி, பூஞ்சை பிடித்து, டாய்லெட் அடைச்சு, மரமெல்லாம் சாய்ஞ்சு, கறையான் அரிச்சு, பீரோ, பீரோவிலிருந்த துணிமணிகள், பட்டுப்புடவைகள்னு ரொம்ப மோசமாயிடுச்சு. வீட்லயே இருக்க முடியல. ஒரு வாரம் வெளிய ஹோட்டல்ல தங்கி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறை, கப்போர்டுன்னு வீட்டைச் சரி செய்து, பழைய நிலைக்குக் கொண்டு வர ரெண்டு மாசம் ஆயிடுச்சு.

செலவு, அலைச்சல், பண விரயத்தோடு, ஆசை ஆசையாய் வைத்திருந்த பொருள்கள் வீணாயிடுச்சேன்னு மன உளைச்சல். அது ஒரு பாடம். இனிமேல் வெளியூருக்குப் போகும் போது என்னவெல்லாம் பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு கத்துக்கிட்டேன். அதை உங்களுக்கும் சொல்றேன்...

வெளியூருக்குச் செல்லும்போது எல்லா கதவு, ஜன்னல்களையும் காற்று, வெளிச்சம் புகாதபடி இறுகச் சாத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

கதவு, ஜன்னல்களின் ஓரங்கள், தாழ்ப்பாள் மற்றும் இடுக்குகளில் தேங்காய் எண்ணெயை விட்டுச் சென்றால், துருப்பிடிக்காமலும் திறப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

வீட்டுக்குக் கதவு, ஜன்னல்களை மரத்தில் செய்யும்போது கவனம் தேவை. ஏனெனில் இப்போதிருக்கும் மரங்கள் அனைத்தும் எளிதில் கறையான் பற்றி நாசமாகிவிடுகின்றன. எனவே தரமான மரச்சாமான்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

மர பீரோக்களில் எளிதில் பூஞ்சை பிடிக்கும். இதனால் பீரோ மட்டுமன்றி அதிலுள்ள துணிகளும் வீணாகிவிடும். எனவே தரமான இரும்பு அல்லது தரமான மர பீரோக்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

பீரோவை நன்கு சுத்தம் செய்து, கரப்பான் பூச்சி ஸ்பிரே அடித்து, உலர்ந்ததும் துணிகளை அடுக்கி, எளிதில் ஈரப்பதமாகாமல், பூஞ்சை பிடிக்காமல் இருக்க, பீரோவினுள் நாப்தலின் உருண்டைகள், சிறிது வேப்பிலைக் கொத்து போட்டுவிட்டுச் சென்றால், பூச்சி, கறையான் வராது.

வேப்பிலை இயற்கையான, நல்ல பூச்சி விரட்டி. அதை நன்கு உலர்த்திய பின்பு தான் பீரோவினுள் போட வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள ஈரப்பதம் துணிகளுக்குக் கடத்தப்படும்.

மழைக்காலம் என்றால், வெள்ளம் வர வாய்ப்புள்ள வீடுகளில் முக்கியமான ஆவணங்களை, பிளாஸ்டிக் கவரில் போட்டு உயரமான இடங்களில் வைத்துச் செல்லலாம்.

வயலின், தம்புரா போன்ற இசைக்கருவிகள் ஏதேனும் இருந்தால், துணி போட்டு மூடி, கட்டில் அல்லது பீரோ மீது வைத்துச் செல்லலாம்.

சுவரில் போட்டோ ஃப்ரேம்கள், ஓவியங்கள் ஏதேனும் மாட்டி வைத்திருந்தால் கழற்றி, பேப்பர் அல்லது துணியில் சுற்றி வைத்துவிட்டுப் போனால், பூஞ்சை பிடிக்காமல் இருக்கும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

ஃபிரிட்ஜை முழுவதுமாகக் காலி செய்து, ஆஃப் செய்துவிடலாம். ஆன் செய்து வைத்தாலும், உள்ளே எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஃபிரிட்ஜை நன்கு சுத்தம் செய்து, ஈரமின்றி துடைத்து, பேப்பர் விரித்து, சிறிது டால்கம் பவுடரை தூவிவிட்டுச் சென்றால், கறுப்பாக பூஞ்சை பிடிப்பதை தவிர்க்கலாம்.

ஊருக்குச் செல்வதற்கு ஒரு வாரம் முன்பே, அதற்கேற்றதுபோல் சமையல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். நிறைய வகைகள், மசாலாக்கள் என்றில்லாமல் எளிய உணவாகச் சாப்பிட வேண்டும். எஞ்சியிருக்கும் புளிக்காய்ச்சல், இஞ்சி - பூண்டு பேஸ்ட்களை எல்லாம் காலி செய்துவிட வேண்டும்.

மாவு வகைகள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சாம்பார், ரசப் பொடி என மளிகைப் பொருள்களை மேலதிகம் வாங்குவதை தவிர்த்து, இருப்பவற்றை எல்லாம் காலி செய்து அந்த டப்பாக்களை கழுவி, காய வைத்து விட்டுச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வண்டு வர வாய்ப்புள்ளது.

வீட்டிலிருக்கும் சோஃபா, குஷன் சேர்களில் துணி போட்டு இறுக மூடி வைத்துவிட்டுச் சென்றால், தூசி, துருப்பிடிக்காமல் இருக்கும். பூஞ்சையும் படராமல் தடுக்கலாம்.

மெயின் பவர் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள், தெரிந்தவர்கள் இருந்தால் அவ்வப்போது மெயின் ஸ்விட்சை ஆன் செய்து, 10 நிமிடங்கள் மோட்டார் போட்டு ஆஃப் செய்துவைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

இதுபோன்ற நடவடிக்கைகளை கவனமா சிரத்தையெடுத்துச் செய்தால் வீட்டைப் பாதுகாக்கலாம். நான் வீடு திரும்பினப்போ, அது இருந்த நிலையைப் பார்த்து ரொம்ப கஷ்டமா போச்சு. மனசுக்குப் பிடிச்ச, சிலர் நினைவா வச்சுருந்த துணிகள், ஆசையா வளர்த்த மாமரம், ஏ.சி, வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர், பீரோக்கள்னு நிறைய வீணாயிடுச்சு. மீண்டும் வீட்டைச் சீரமைக்குறதுக்குள்ள நிறைய பொருட்செலவு. பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்ப்பென்ட்டர், வீடு கிளீனிங்னு தனித்தனியா ஆட்கள வரவழைச்சு ஒவ்வொரு நாளும் வேல செஞ்சேன். தினமும் 4, 5 பட்டுப் புடவைகளா எடுத்து வெயிலில் உலர்த்தி, டிரை வாஷ் பண்ண வேண்டிய திருந்தது. கிச்சன், ஸ்டோர் ரூம் எல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா ஒதுங்க வைச்சுட்டுப் போனதால அங்க பெருசா வேலயில்ல. அதனால மக்களே... வெளியூர், வெளிநாடு போறவங்க இந்த இணைப்பிதழ்ல்ல சொல்லியிருக்குற ஆலோசனைகளை எல்லாம் செயல்படுத்திட்டுப் போங்க. வீடு பத்திரமா இருக்கும்’’ என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்தார் ‘மெனு ராணி’ செல்லம்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

காரில் எரிபொருள்... கவனம்!

காரின் எரிபொருளை அரை அல்லது ஒரு பாயின்ட் அளவுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். நீண்ட நாள்களுக்கு எரிபொருளை பயன்படுத்தாதபோது, தண்ணீர் போன்று அதிலும் பாசி வளரத் தொடங்கிவிடும். குறைந்த அளவு எரிபொருளை மட்டும் விட்டுச் செல்லும்போது, திரும்பிய பின்னர் எரிபொருள் நிரப்பும்போது குறைந்த அளவு பாசி பெருமளவு எரிபொருளோடு கலக்கும்போது பிரச்னையை உண்டாக்காது.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

இணைய வசதி!

ஆட்டோமேட்டிக் வாட்டரிங் சிஸ்டத்தில் (Automatic Watering System) இணைய வசதி மூலம் இயங்கும் கருவி, டைமர் (timer) மூலம் இயங்கும் கருவி என இரண்டு வகை உண்டு. இணைய வசதி மூலம் இயங்கும் கருவியில், தண்ணீர் செல்லும் பாதையில் கசிவு உள்ளதா என்பதைக்கூட கண்டறிய முடியும். மேலும் இதில் உள்ள கன்ட்ரோலர் மூலமாக உரம் இட முடியும், பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

ஏ.சி... வோல்ட்டேஜ்!

இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேலான காலத்துக்குப் பின்னர் வீடு திரும்பும் சூழலில், கண்டிப்பாக ஏ.சியை சர்வீஸ் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். ஏ.சியை ஆன் செய்வதற்கு முன்பு, வோல்ட்டேஜை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள்களுக்கு ஏ.சியை ஆஃப் செய்து வைப்பது பரிந்துரைத்தக்கது இல்லை என்பதால், குளிர்காலத்தில் ஏ.சி பயன்படுத்தாத நாள்களில், வாரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் அதை ஆன் செய்து ஆஃப் செய்வது நல்லது.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!
alptraum

டிவியும் எலி, பூனையும்!

வெளியூர் செல்லும் முன்பு டிவி கேபிள்களைக் கழற்றிவிட வேண்டும். டிவியைத் துடைத்து, அதன்மீது தூசு படியாமல் இருக்க, பாதுகாப்புக்கான உறையை மாற்றிவிடலாம். எலி, பூனை தொந்தரவு போன்ற எந்த பாதிப்பாலும் டிவி கீழே விழாமல் இருப்பதை உறுதிசெய்வது நல்லது அல்லது டிவியைப் பத்திரமாக வேறு இடத்தில் வைத்துவிட்டுச் செல்லலாம். வீடு திரும்பியதும் டிவியைத் துடைத்து தூசு இல்லாததை உறுதிசெய்த பின்னர் பயன்படுத்த வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர்/வெளிநாடு செல்லும்போது... கிச்சன் முதல் பெட்ரூம் வரை பராமரிப்பு கைடு!

தீபம் வேண்டாம்!

‘ஆளில்லாத வீட்டில் விளக்கு எரியக் கூடாது’ என்பார்கள். நீண்டகாலப் பயணமாக வெளியூர் செல்வதாக இருந்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக, எண்ணெய் விளக்கை எரிய விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.