
பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் முடித்துவிட்டோம். என் கணவர் சமீபத்தில்தான் மறைந்தார். என் இளைய மகளின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அவளுக்குத் துணையாக நான் அவள் வீட்டில் தங்கியிருந்தேன். அவளுக்குத் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன, ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
என் மருமகன் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பும் பணத்தை, லோக்கலில் வட்டிக்கு விட்டுக்கொண்டிருந்தாள் மகள். மேலும், சீட்டுப் பிடித்துக்கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன், அவளைத் தேடி ஒரு கடன்காரர் வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்க பொண்ணுக்கு ரெண்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்திருக்கேன், மூணு மாசமா வட்டி கொடுக்கலை’ என்றார். அப்போது என் மகள் வீட்டில் இல்லை. என்னால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. காரணம், மருமகன் வெளிநாட்டில் சம்பாதிக்கிறார், என் மகள்தான் பிறருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் ஒருவரிடம் கடன் வாங்க எந்தத் தேவையும், எதிர்பாராத அவசரச் செலவுகளும் வரவில்லை. எனவே, கடன் கேட்டு வந்தவரிடம், மகளிடம் விசாரிப்பதாகக் கூறி அனுப்பினேன்.

என் மகளிடம் விசாரித்தேன். ‘அவர்கிட்ட மூணு வட்டிக்கு ரெண்டு லட்சம் வாங்கி, வெளியில அஞ்சு வட்டிக்குக் கொடுத்து வெச்சிருக்கேன்’ என்றாள். ‘நீ ஏன் இப்படி பிரச்னைகளை இழுத்துக்கிற? மருமகன் அனுப்புற பணத்தைப் பாதுகாப்பா சேமிச்சு வெச்சா போதாதா?’ என்று கேட்ட போது, ‘பணத்தை அப்படியே வெச்சிருக்கக்கூடாது, பணத்தை வெச்சே பணத்தைப் பெருக்கணும்’ என்றெல்லாம் வகுப்பெடுத்தாள். ‘சரி, அப்படிப் பார்த்தாலும் அந்தக் கடன்காரர் மூணு மாசமா வட்டி கொடுக்கலைன்னு சொல்றாரே’ என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ பேசாம இரு’ என்று கோபப்பட்டாள். ‘எதுன்னாலும் உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டுப் பண்ணு’ என்ற என் அறிவுரையையும் அவள் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், வட்டியும் பணமும் கேட்டு இன்னும் இரண்டு மூன்று பேர் வந்துவிட, அவர்களுக்கு ஏதேதோ சொல்லிச் சமாளித்து அனுப்பினாள் என் மகள். எனக்கு அச்சமாக இருந்ததால், என் மற்ற இரு பிள்ளைகளையும் வரச்சொல்லி அவளிடம் விசாரிக்கச் சொன்னேன். ‘கடன் வாங்கி ஒரு இடத்தை வாங்கிப் போட்டேன். அதுல லாக் ஆகிட்டேன்’ என்றாள். ‘சரி அந்த இடத்தை வித்தாவது கடனை எல்லாம் அடைச்சிடலாமே?’ என்று கேட்க, ‘அந்தப் பத்திரத்துல கொஞ்சம் பிரச்னை இருக்கு’ என்றாள். ‘வா, வழக்கறிஞர் மூலமா சரி பண்ணலாம்’ என்று அவர்கள் சொன்னபோது, ‘என் பிரச்னையை நானே பார்த்துக்குறேன்’ என்று முகத்தில் அடித்ததுபோலப் பேசி அனுப்பிவிட்டாள்.
இவள் இப்படிப் பண விஷயத்தில் எங்கோ சிக்கியிருப்பதை, அவள் கணவருக்கு போன் போட்டுச் சொன்னோம். அவர் இவளிடம் விசாரிக்க, ‘நீங்க எவ்ளோ நாள்தான் வெளிநாட்டுல கிடந்து சம்பாதிப்பீங்க? அதனாலதான் பணத்தைப் பெருக்கிட நான் இங்க வட்டிக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். என்கிட்ட வட்டிக்குப் பணம் வாங்கின ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்டார். அதுலதான் நெருக்கடி ஆயிடுச்சு’ என்று அவரிடம் வேறொரு காரணத்தைச் சொன்னாள். லாயரை அவர் பார்க்கச் சொன்னதையும் மறுத்துவிட்டாள்.

நிலைமை கைமீறியது. என் மகள் தரவேண்டிய கடனாக, ஆறு பேர், மொத்தம் 12 லட்சம் தொகையைக் கேட்டு வீட்டுக்கு வந்து பிரச்னை பண்ண ஆரம்பித்தார்கள். என்னை என் மகன் வீட்டுக்கு அனுப்பியவள், தன் குழந்தையோடு வெளியூருக்குச் சென்றுவிட்டாள். ஆறு மாதங்களாக ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். குழந்தையை அருகில் ஒரு பள்ளியில் சேர்த்திருக்கிறாள். எங்கள் அனைவரிடமும் போனில் பேசியபடி இருக்கிறாள். ஆனால், உண்மையான பிரச்னை என்ன, ஏன் காவல்துறை சட்ட நடவடிக்கைக்கு மறுக்கிறாள் என்பது புரியாமல் நாங்கள் குழப்பத்தில் உள்ளோம். மருமகன் நாடு திரும்ப ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார். இந்தச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது?
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)