கட்டுரைகள்
Published:Updated:

உழைப்பை உறிஞ்சும் பிள்ளைகள், முதுமையில் வாழ்வதே சாபமா?!

 பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம் | படங்கள்: மதன்சுந்தர்

என் கணவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் முடித்து, பேரன், பேத்திகள் உள்ளனர். வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர். பூர்வீக கிராமத்தில் நானும் கணவரும் வசித்தோம். என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ‘இனிமே நீ எதுக்குத் தனியா இங்க இருக்கே, எங்ககூட வந்துடு’ என்று மகனும் மகளும் அழைத்தார்கள். நானும் பிள்ளைகள் அக்கறையுடன் கூப்பிடுகிறார்களே என்று சென்றேன். ஆனால் அவர்கள், அம்மா என்ற அக்கறையைவிட, தங்கள் வீட்டுக்குப் பொறுப்பான ஒரு வேலையாளாகவே என்னை நடத்தும் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 பெண் டைரி
பெண் டைரி

ஆரம்பத்தில் நான் என் மகன் வீட்டில் தங்கினேன். மகன், மருமகள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், அவர்களின் இரண்டு குழந்தைகளையும், வீட்டையும் நான் பார்த்துக்கொண்டேன். இப்படி, இயலும்வரை பிள்ளைகளுக்கு உபயோகமாக இருப்போம் என்று எண்ணும் எத்தனையோ அம்மாக்களைபோலதான் நான் நினைத்தேன். அவர்களோ, அம்மா நமக்காக இவ்வளவு செய்கிறார் என்ற அன்போ, அங்கீகாரமோ, நன்றியோ இன்றி, ஏதோ இதையெல்லாம் நான் அவர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டிருப்பதைப்போல நடந்துகொள்கிறார்கள். என்னிடம் அன்பான, பரிவான பேச்சு இல்லை. குடும்பத்தில் எந்த முடிவு என்றாலும் என்னிடம் தெரிவிப்பதில்லை. அவர்களின் குழந்தைகளுக்கான தேவைகள், வீட்டு வேலைகள் முடிகிறதா, நான் அவற்றை சரியாக முடித்துவிடுகிறேனா என்பது மட்டுமே அவர்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

அந்தத் தெருவில் உள்ள முதியவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் ஆன்மிகச் சுற்றுலா சென்றபோது, என்னையும் அழைத்தார்கள். எனக்கும் ஆசையாக இருந்தது. என் மகனிடம் கேட்டபோது, ‘வயசான காலத்துல அதெல்லாம் பாதுகாப்பில்ல’ என்று மறுத்துவிட்டான். அவன் வீட்டில் நான் அவ்வளவு வேலைகள் பார்க்கும்போதெல்லாம் என் வயது அவனுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுற்றுலா என்றில்லை... பக்கத்துக் கோயிலிலிருந்து உறவினர் வீட்டு விசேஷங்கள்வரை எதற்கும் என்னால் செல்ல முடியவில்லை. சனி, ஞாயிறு என் மகன் குடும்பம் வெளியே கேளிக்கைகளுக்குச் செல்லும்போதுகூட, ‘நீங்களும் வர்றீங்களா?’ என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்பதில்லை. அவர்கள் உணவகத்துக்குச் சென்றால், எனக்கு வரும்போது உணவு வாங்கி வருவதைத்தான் அவர்கள் எனக்கான அன்பு என்று வரையறை செய்துள்ளார்கள்.

 பெண் டைரி
பெண் டைரி

இந்நிலையில், ஒரு வருடத்துக்கு முன் என் மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால், அவள் என்னை தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தாள். நானும் சென்றேன். ஆனால், மகள் குடும்பமும் மகன் குடும்பம் போலவேதான் என்னை வேலைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. நான் ஆரோக்கியமாக இருப்பதால், என் வயதுக்கு மீறிய வேலைகளை என் மகள் வீட்டில் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், என்றேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு ஏதேனும் உடம்பு சரியில்லாமல் போனால், என்னை மருத்துவமனைக்கு அழைத்துப்போகக் கூட மகளுக்கோ, மருமகனுக்கோ நேரமில்லை, மனமில்லை. அந்த அசதியிலும், நோய்மையிலும் நானேதான் தனியாகச் சென்றுவர வேண்டியிருக்கிறது.

இதையெல்லாம் உணர்ந்தபோது, ‘நான் கிராமத்தில், நம் வீட்டிலேயே இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன். ஆனால், ‘அம்மா... அங்க நீ தனியா இருந்து என்ன பண்ணப்போற? இங்க இருந்தா எங்களுக்கு உதவியா இருக்கும், என் பிள்ளைங்ககூட இருக்கலாம்ல...’ என்றெல்லாம் சொல்லி, என்னை அனுப்பவும் மறுக்கிறார்கள். நான் என் பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த அளவுக்கு ஒத்தாசையாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால், அதற்கான பதில் அன்போ, அங்கீகாரமோ இன்றி அவர்கள் என் உழைப்பை உறிஞ்ச நினைப்பதுதான் வேதனை. இதனால் இந்த முதுமையே சாபமாகிவருகிறது எனக்கு. தீர்வு என்ன?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)