
பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
என் கணவர் வட்டிக்கடை வைத்திருக்கிறார். நான் தையல்கடை வைத்திருக்கிறேன். பள்ளி செல்லும் பதின் வயது மகன்கள் இருவர் உள்ளனர். வட்டிக்கடையுடன் சேர்த்து, என் கணவர் சில அடாவடி வேலைகளையும் பார்த்துவருவார். உதாரணமாக, பிரச்னைக்குரிய சொத்தில் ஒரு தரப்பினருக்காக மற்றொரு தரப்பினரை மிரட்டுவது, ரௌடிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்கள் கேஸில் மாட்டினால் வழக்கறிஞரை ஏற்பாடு செய்வது, பேங்க்கில் போலி நகையை வைத்து ஏமாற்றும் கும்பலுக்கு நகை மதிப்பீடு செய்யும் நபரை ஏற்பாடு செய்து தருவது என கமிஷனுக்காகப் பல கள்ளவேலைகள் செய்வார்.

ஆறு மாதங்களாக அவர் மனப்பதற்றத்தில் இருக்கிறார். நானும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் மட்டும் வீட்டில் இருக்க வேண்டி வந்தால், நாங்கள் வெளியே செல்வதைth தடுத்தார். ஒரு கட்டத்தில், ‘என்னை விட்டுட்டுப் போயிடாத, பயமா இருக்கு’ என்று வாய்விட்டே கூறினார். தூக்கமின்மைப் பிரச்னைக்கு ஆளானார். இரவு முழுக்க விழித்தபடியே இருந்து, அந்தச் சோர்வில் பகலில் தூங்கினார்... பிறகுதான் புரிந்தது, இருட்டுக்கும் அவர் அஞ்சுகிறார் என்று.
‘இந்த ஃபேன் அறுந்து விழுந்து நான் செத்துப்போயிட்டா என்ன பண்ணுறது?’ என ஃபேனுக்கு அடியில் படுப்பதையே தவிர்த்தார். பாத்ரூம் சென்றால் தாழிடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தார். ‘உள்ள நான் வழுக்கி விழுந்து தலையில அடுபட்டுக் கிடந்தேன்னா என்ன பண்ணுறது, கதவைப் பூட்ட வேண்டாம்’ என்றார். பைக், கார் என வாகனங்களை ஓட்ட பயப்பட்டார். ‘யாரோ என்னை ஆக்சிடென்ட் பண்ண ஃபாலோ பண்ணுற மாதிரியே இருக்கு’ என்றார். சரி, செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ, டாக்ஸி என்று கிளம்பினால், ‘இந்த ஆட்டோ டிரைவர்/டாக்ஸி டிரைவர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு’ என்று பதற்றப்பட்டார்.
இப்படித் தொட்டதுக்கெல்லாம் பயப்பட ஆரம்பிக்க, மனதில் ஏதோ ஓர் அச்சம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது புரிந்தது. ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்ததை எல்லாம் நான் நினைத்துப் பார்த்தபோது, விளிம்புநிலைக் குடும்பங்கள் வசித்த பெரிய நிலம் ஒன்றை ஒரு ரியல் எஸ்டேட்காரர் அபகரித்துக்கொண்ட வழக்கில் அவருக்கு உதவி செய்து இவர் கமிஷன் பெற்றது, வட்டி கொடுக்காத ஒரு குடும்பத்தை ரௌடிகளுடன் சென்று தகாத வார்த்தைகளால் மிரட்டிவிட்டு வந்தது, ஏதோ ஒரு வழக்கு விசாரணையில் போலீஸ் இவரைத் தேடி வந்தது எனச் சில சம்பவங்கள் நினைவுக்கு வர, அதனால் அநியாயமாக யாரேனும் பாதிக்கப்பட்டு, அந்தக் குற்றவுணர்வால் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என்று தோன்றியது. அவரிடமே கேட்டபோது, ‘அதெல்லாம் இல்லை’ என்று கூறிவிட்டார்.

ஒரு மனநல மருத்துவரிடம் சென்றோம். கவுன்சலிங் கொடுத்து, மருந்து, மாத்திரைகள் கொடுத்த அவராலும் என் கணவரின் பயத்துக்குக் காரணம் என்ன என்று கண்டறிய முடியவில்லை. சரி சாமி, ஜாதகத்தின் பெயரில் ‘எல்லாம் சரியாகிடுச்சு’ என்று அவரை மனதளவில் நம்பவைக்கலாம் என்று நினைத்தேன். கோயில்களில் தர்மகாரியங்கள் செய்வது; ‘உங்க ஜாதகம் ரொம்ப நல்லா இருக்கு, சாமி துணை இருக்கு, எந்தப் பிரச்னையும் இல்ல’ என்று ஜோசியரைச் சொல்லவைப்பது என் முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டேன். அவருடைய அச்சம் நீங்கியபாடில்லை, குற்றவுணர்வுக்கு என்ன காரணம் என்றும் தெரிந்தபாடில்லை. சமீபத்தில்கூட தூக்கத்தில், ‘என்னை ஒண்ணும் பண்ணிட வேண்டாம், மன்னிச்சு விட்டுடணும்’ என்று புலம்பினார்.
`உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்' என்றாலும், ஒரு மனைவியாக என் கணவரை மீட்கத்தானே நினைப்பேன் நான்... அதற்கு என்னதான் வழி?
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)