இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், தற்போது இங்கிலாந்தின் இளம் பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் இவர் பல வரலாறுகளை படைத்துள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல் முறை. பக்கிங்காம் அரண்மனையில் இருந்தபடி கௌரவ ஆட்சியாளராக செயல்படும் பிரிட்டிஷ் மன்னரை விட பணக்காரர் யாரும் இதுவரை பிரதமர் ஆனதில்லை.
ரிஷியின் சொத்து மதிப்போ, மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். இப்படிப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ரிஷி சுனக் , இங்கிலாந்து பிரதமரானதுக்கு தனது மகள் காரணம் எனக் கூறியுள்ளார், அவர் மனைவியான அக்ஷதாவின் தாய் சுதா மூர்த்தி.

ரிஷி சுனக், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பா நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அக்ஷதாவுக்கு கணிசமான பங்குகள் இருக்கின்றன. இதுதவிர நாராயணமூர்த்தியின் கட்டாமரான் வென்சர்ஸ் முதலீட்டு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது ரிஷி குடும்பம். இதுதான் அவர்களை பிரிட்டிஷ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
இந்நிலையில் ஒரு வீடியோவில் பேசிய சுதா மூர்த்தி, ``நான் என் கணவரை தொழிலதிபராக்கினேன். என் மகள், அவரின் கணவரை இங்கிலாந்தின் பிரதமராக்கியுள்ளார். மனைவியின் மகிமைதான் இதற்குக் காரணம். மனைவி, கணவரை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.
ஆனால், என் கணவரை என்னால் மாற்ற முடியவில்லை. வியாழக்கிழமைகளில் நாங்கள் விரதம் இருப்போம். இன்ஃபோசிஸ் ஆரம்பித்ததும் வியாழக்கிழமைதான். என் மருமகன் ரிஷியின் முன்னோர்கள் மதத்தை மிகவும் பின்பற்றுபவர்கள், தற்போது ரிஷியும் அவ்வாறே உள்ளார். அவரும் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

அக்ஷதா, உலகின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரின் மகள். மற்றும் சுமார் 730 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்ட தனிப்பட்ட செல்வத்துடன், அவர் ஒரு சக்திவாய்ந்த பெண்மணியாக உள்ளார்.