
பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். வீட்டுவேலை பார்த்து என்னைப் படிக்கவைத்தார் என் அம்மா. படிப்பை முடித்தவுடன் எனக்கு வேலை கிடைத்தது. அலுவலகத்தில் எனக்கு அறிமுகமானார் என் கணவர். இருவரும் காதலித்தோம். தன் அக்காவைத் திருமணம் செய்துகொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. எனக்குக் கல்விக்கடனை அடைக்க வேண்டியது இருந்தது. அனைத்தையும் முடித்துவிட்டு, நான்கு வருடங்கள் கழித்தே எங்கள் பெற்றோர்களிடம் காதலைச் சொல்லி, திருமணத்துக்கு சம்மதம் வாங்கினோம்.
ஒரு வருடத்துக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடந்தபோது, கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால், ஆளுக்கு இரண்டு லட்சத்துக்குக் கடன் இருந்தது. அது, எங்கள் திருமணத்துக்காக நாங்கள் வாங்கிய கடன். காரணம், எங்களைப் போலவே அவர் குடும்பமும் வறுமையான குடும்பமே. எனவே, எங்கள் திருமணத்துக்கு நாங்களே செலவுசெய்ய வேண்டிய நிலை. இருவருமே பர்சனல் லோன் போட்டு, எங்கள் திருமணச் செலவுகளை சமாளித்தோம்.

இப்போது எனக்கு 27 வயதாகிறது. என் கணவருக்கு 30 வயது. எங்கள் கடன் பாதி முடிந்துவிட்டது. எனவே அடுத்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக என் மாமனாருக்கு ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனைச் செலவு 3 லட்சம் ஆகிவிட்டது. உறவினர்களிடம் கடன் வாங்கித்தான் சமாளித்தோம். இப்படி கடன் மாற்றி கடன் கட்டும் வாழ்க்கை எங்களை வெறுக்கவைத்துவிட்டது. என்றாலும், சிறு வயது முதலே இதுபோல அடி மேல் அடி பட்டுத்தான் வளர்ந்தவர்கள் என்பதால், நானும் கணவரும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டோம். இப்போது உள்ள கடனை அடைத்துவிட்டு, பிறகு இந்த 3 லட்சம் கடனை இருவருமாகச் சேர்ந்து அடைக்கலாம் என்றும், அதுவரை இரண்டு, மூன்று வருடங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளோம்.
ஆனால், உறவினர்கள் எல்லாம், என் வயதைக் காரணம் சொல்லி, குழந்தையைத் தள்ளிப்போடுவது தவறு என்கிறார்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது, ‘30 வயதுக்கு மேலும் தாராளமாகக் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 30 வயதுக்குள் முதல் குழந்தை என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பது. தவிர்க்கவே முடியாத காரணம் இல்லாதபட்சத்தில் இந்த முடிவை எடுக்காதீர்கள்’ என்றார். எங்கள் பெற்றோரோ, ‘காசைக் கையில வெச்சுட்டா எல்லாரும் குழந்தை பெத்துக்கிறாங்க? இதுக்கும் கடனுக்கும் முடிச்சுப்போடக் கூடாது’ என்கிறார்கள்.

நானும் கணவரும் பிராக்டிக்கலாக யோசிக்கிறோம். நாங்கள் வளர்ந்த வறுமைச் சூழல் அல்லாமல், எங்கள் குழந்தையை கொஞ்சம் நல்ல பொருளாதார நிலையில் வரவேற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நல்ல மருத்துவமனையில் பிரசவம் முதல் நல்ல பள்ளியில் அட்மிஷன் வரை என, எங்களைவிட முன்னேறிய ஒரு பொருளாதாரச் சூழலில் எங்கள் பிள்ளையை வளர்க்க ஆசைப்படுகிறோம். இப்போது எங்களுக்கு உள்ள கடனுடன், செக்கப், மருந்து மாத்திரைகள், ஸ்கேன், டெலிவரி, இதைவிட ஒரு நல்ல வீடு என்று... இவையெல்லாமே எங்களைப் பொருளாதாரச் சுமையில் அழுத்தவே செய்யும். பாரங்கள் நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து, பின்னர் பெற்றோர் ஆகலாம் என்ற எங்கள் முடிவு சரியா?
வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.