அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

கணவரின் பெஸ்டியால் கவலை; புரியவைப்பது எப்படி?

ஒரு வாசகியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வாசகியின் கடிதம்

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

மூன்று மாதங்களுக்கு முன் எனக்குத் திருமணமானது. கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வீட்டுக்கு அருகில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் நான் வேலை செய்கிறேன். மாமனார், மாமியாருடன் வசிக்கிறோம். பிறந்த வீடு, புகுந்த வீடு, வேலை என வாழ்க்கையில் எனக்கு இப்போது எல்லாமே சுகம். ஆனால், கணவரின் பெஸ்டியால், அனுபவிக்க வேண்டிய எல்லா சந்தோஷத்தையும் இழந்து, கவலைபீடித்துக் கிடக்கிறேன்.

பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம்தான். நிச்சயதார்த்தம் முடிந்து பேச ஆரம்பித்தபோது, கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்ததையும், அது பிரேக் அப் ஆனதையும் சொன்னார். நானும் என் டீன் ஏஜ் லவ், காலேஜ் கிரஷ் பற்றியெல்லாம் பகிர்ந்துகொண்டேன். அப்போது அவர், தன் பெஸ்ட் ஃப்ரெண்ட், பெஸ்டி என்று ஒரு பெண்ணைப் பற்றிச் சொன்னார். அந்தப் பெண்ணும் இவரும் பள்ளி நாள்களில் இருந்தே ஃப்ரெண்ட்ஸ். வேறு வேறு கல்லூரிக்குச் சென்று விட்டாலும் நட்பு தொடர்ந்தது என்றும், இப்போது அந்தப் பெண் ஒரு வங்கியில் பணிபுரிவதாகவும் கூறினார். எங்கள் நிச்சயதார்த்தம் அன்று அவருக்கு அலுவலகத்தில் முக்கியமான வெளியூர் டிரெயினிங் இருந்ததால் வரமுடியவில்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார்.

ஒரு வாசகியின் கடிதம்
ஒரு வாசகியின் கடிதம்

எங்கள் திருமணத்துக்கு அந்தப் பெண் வந்தபோது, என் கணவர் அவரை, ‘சொன்னேன்ல... என் பெஸ்டி’ என்று அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண் திருமண மேடையிலேயே என் கணவரைத் தோளைத்தட்டிப் பேசியது, கேக் ஊட்டியது என அதிக உரிமை எடுத்துக்கொண்டார். என்னிடம், ‘17 வருஷ ஃப்ரெண்ட்ஷிப். இவன் ஏதாச்சும் தப்புப் பண்ணினா, கண்டிக்கணும்னா எனக்கு போன் பண்ணுங்க’ என்றார். நானும் சிரித்தபடி தலையாட்டினேன்.

திருமணத்துக்குப் பின், என் கணவர் அந்தப் பெண்ணிடம் ரெகுலராகப் பேசுவதையும், சாட் செய்வதையும் அறிந்துகொண்டேன். ஆனால், அதில் தவறாக எதுவும் இல்லை. இரண்டு நண்பர்களுக்கு இடையேயான பகிர்தல், கேலி, கிண்டல்தான் என்றாலும், ஒரு சினிமா பார்த்தாலோ, கிரிக்கெட் மேட்ச் பற்றிக் கதைக்கவோ, தன் வேலையில் ஒரு பிரச்னை என்றாலோ, வெளியூர் செல்லவேண்டி வந்தாலோ என... என் கணவர் பகிரத் தேடும் ஆளாக அந்தப் பெண்தான் இருக்கிறார். இவற்றைப் பற்றியெல்லாம் அவர் என்னிடமும் பேசினாலும், அது ஒரு தகவல் பரிமாற்றமாகவே இருக்கிறது. ஆனால், அதுவே அந்தப் பெண்ணிடம் பேசும்போது அது ஒரு சுவாரஸ்யமான உரையாடலாக இருக்கிறது என்பதை நான் கவனித்தேன்.

ஒரு வாசகியின் கடிதம்
ஒரு வாசகியின் கடிதம்

நான் 90’ஸ் கிட்தான். ஃப்ரெண்ட்ஷிப், பெஸ்டி ரிலேஷன்ஷிப் பற்றியெல்லாம் அறிவேன். ஆனால், என் கணவரின் பெஸ்டி என்று வரும்போது, பொசசிவ்னெஸ்ஸை என்னால் தவிர்க்க முடியவில்லை. என் கணவருக்கு எதிலும் நான்தான் முதன்மையானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக, அந்தப் பெண் பற்றி நான் என் கணவரிடம் நேரடியாகக் கேட்டாலோ, ‘எனக்கு இது பிடிக்கல’ என்று சொன்னாலோ, என்மீதான அவர் மதிப்பு என்ன ஆகும் என்பதால் அதைச் செய்யவில்லை. என்றாலும், என்னால் இதைக் கடந்து செல்லவும் முடியவில்லை.

அந்தப் பெண், புதிதாக ஒரு பொருள் வாங்கினால் எதைத் தேர்வு செய்வது என்று என் கணவருக்கு போட்டோ அனுப்புவது முதல், ஜாப் ஆஃபர்ஸ் வரை எதையுமே என் கணவரிடம் கேட்டுத்தான் முடிவெடுக்கிறார். அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருடைய திருமணத்துக்குப் பின்னும் இருவரும் இப்படியே தொடர்ந்தால், அவர் வாழ்க்கையிலும் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்றே தோன்றுகிறது. அல்லது, அப்போது அவராகவே என் கணவரிடமிருந்து விலகிவிடுவார் என்று தோன்றுகிறது. ஆனால், அதுவரை என்னால் இதே பொறுமையுடன், புரிந்துணர்வுடன் காத்திருக்கவும் முடியாது.

என்ன தீர்வு?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)