Published:Updated:

புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!
புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

ட்ரெண்டு

பிரீமியம் ஸ்டோரி
புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

ட்டுக்கு மயங்காத மங்கைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பட்டின்மேல் பெண்களுக்கு கட்டுக்கடங்காத காதல் இருக்கிறது. ஒரு புடவையை வாங்கி அப்படியே கட்டும் காலம்மாறி வாங்கிய புடவையில் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்து மெருகேற்றி கட்டுவதில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு அப்புடவையை மென்மேலும் மெருகேற்ற வந்திருக்கும் முறைதான் ‘டசல்ஸ் வேலைப்பாடு’. குறிப்பாக அதிகம் செலவழித்து பகட்டாக எடுக்கப்படும் முகூர்த்த பட்டுப் புடவைக்கு டசல்ஸ் வேலைப்பாடுகள் செய்யப்படுவதுதான் இப்போதைய ட்ரெண்டு.

“புடவை முந்தியில் டசல்ஸ் (Tassels) வொர்க் பண்றது, தமிழ்நாட்டில் இன்னும் அவ்வளவா பிரபலமாகல. சென்னையிலேயே சிலர்தான் செய்துட்டு இருக்காங்க என்ற நிலையில, ராஜபாளையத்துல இருந்துட்டே நான் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு வரை கஸ்டமர்ஸுக்கு செய்து கொடுத்துட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், ராஜபாளையத்தைச் சேர்ந்த ரம்யா ராம்குமார்.

புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

சில்க் த்ரெடால் புடவை முந்தியில் குஞ்சம் வேலைப்பாடுகள் செய்துகொடுக்கும் ரம்யா,  பெண்களின் அலங்கார ஆர்வத்துக்கு இன்னும் வண்ணம் கூட்டுகிறார்.

``சின்ன வயசில் இருந்தே பெயின்ட்டிங், எம்ப்ராய்டரினு நிறைய ஆர்ட் வொர்க்குகளில் ஆர்வமா இருப்பேன். ஆனா, அதையெல்லாம் ஒரு பொழுதுபோக்காதான் செய்துட்டு இருந்தேன். சமீபத்தில் என் பொண்ணு ஹர்ஷா சென்னை, கலாஷேத்ராவில்  பதினொன்றாம் வகுப்பில் சேர, கணவர் ராம்குமார் அவரோட வேலைகளில் பிஸியா இருக்க, எனக்கு வீட்டில் நிறைய நேரம் கிடைச்சது. அது, புதுசா ஒரு கிராஃப்ட் வொர்க் கத்துக்கலாம்னு நினைக்க வெச்சது.

இம்முறை, அதிகம் அறியப்படாத, புதுமையான ஒரு கிராஃப்ட்டா கத்துக்கணும்னு நினைச்சேன். அதோட, அதை பொழுதுபோக்கா மட்டும் செய்யாம, தொழில் முறையில் செய்யணும்னு முடிவெடுத்தேன். அப்போதான் எனக்கு தன்னம்பிக்கை கிடைக்கும், கஸ்டமர்களின் தேவை, திருப்திக் காக புதுசு புதுசா மனசு தேட ஆரம்பிக்கும். அப்படி நான் தேர்ந்தெடுத்ததுதான், டசல்ஸ் வொர்க்.

புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

நானும் என் தோழியும், பெங்களூரில் பயிற்சி வகுப்புக்குச் சென்று டசல்ஸ் வொர்க் கத்துக்கிட்டோம். ஆரம்பத்தில் என்னோட புடவையில், என் உறவினர் பெண்களோட புடவையில்னு இதை செய்ய ஆரம்பிச்சேன். அதைப் பார்த்த பெண்கள், ‘இது புதுசா, அழகா இருக்கே! எங்களுக்கும் செய்து கொடுங்க’னு கேட்டு வந்தாங்க. ஃபேஸ்புக்கில் ‘எத்னிக் நாட்ஸ் (Ethnique Knots)’னு ஒரு பேஜ் ஆரம்பிச்சு, நான் செய்த வேலைப்பாடுகளை எல்லாம் புகைப்படங்கள் எடுத்து அதில் பதிவிட...உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம்னு  பல ஊர்களில் இருந்தும் கஸ்டமர்கள் கிடைச்சாங்க. ‘ராஜபாளையம் போன்ற ஒரு இரண்டாம் தர நகரத்துல இந்த பிசினஸுக்கு எப்படி வரவேற்பு இருக்கும்?’னு யோசிச்சேன். ஆனா, ‘புடவை அலங்காரத்தில் பெண்களை சந்தேகப்படலாமா?!’னு எங்க ஊர்ப் பெண்கள் அடுத்தடுத்து ஆர்டர்கள் கொடுத்து அசத்திட்டாங்க. என் கணவர், தோழி, உறவுத் தோழமைகள் இவங்களாலதான் இதில் இப்போ நான் வெற்றிகரமா காலூன்றியிருக்கேன்” எனும்போது தன் சின்னப் புன்னகையை விரிவாக்கும் ரம்யா, அடுத்ததாக டசல்ஸ் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

``டசல்ஸ்  வொர்க் செய்ய சில்க் த்ரெட், ஸ்டோன்ஸ் பீட்ஸ்னு பயன்படுத்துறேன். அந்த மெட்டீரியல்களை எல்லாம் சென்னை, பெங்களூருலதான் வாங்குவேன். புடவைக்கு மேட்சிங்கா செய்ய, அரிதான கலர் சில்க் த்ரெட்கள்கூட அங்க கிடைக்கும். இது முழுக்க முழுக்க ஹேண்ட் வொர்க். புடவை முந்தி ஓரத்தை ஓவர்லாக் செய்துட்டு, எம்ப்ராய்டரி ஊசியில் போடற பாரம்பர்ய டசல்ஸ், க்ரோஷே (Crochet) ஊசியில் போடற கிராண்ட் டசல்ஸ்னு இரண்டு வகைகளில், கிட்டத்தட்ட 50 டிசைன்களில் போட்டுத் தர்றேன்.

புடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு!

கஸ்டமர்களின் பட்ஜெட், ஸ்டோன், பீட்ஸ், பால்ஸ்னு பயன்படுத்துற மெட்டீரியல், இரண்டு அடுக்கு க்ரோஷே டசல்ஸ், ஐந்து அடுக்கு க்ரோஷே டசல்ஸ்னு தேர்ந்தெடுக்கிற டிசைன்... இதையெல்லாம் பொறுத்து ஒரு புடவைக்கு குறைந்தது 300 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2,500 ரூபாய் வரை டசல்ஸ் வொர்க் செய்யலாம். ஒரு புடவைக்கு 300, 400 ரூபாய் வொர்க் செய்ய ஒரு நாள் ஆகும். 2,500 ரூபாய் வொர்க் செய்ய நான்கு நாட்கள் ஆகும்.  திருமண மாதங்களில் மணப்பெண் முகூர்த்தப் புடவையோட, அந்தக் குடும்பத்தின் மற்ற பெண்களுக்கும், நிச்சயதார்த்தம், திருமணம், ரிசப்ஷன்னு எல்லா புடவைகளையும் கொடுத்து நம்மளை பரபரப்பாக்கிடுவாங்க’’ என்ற ரம்யா, இதைத் தொழிலாக அணுகும் பெண்களுக்கு சில ஆலோசனைகள் தந்தார்...

``ஒரு புடவைக்கான மெட்டீரியல் செலவு அதிகபட்சம் 100, 200 ரூபாய்தான் ஆகும். நம்ம கற்பனைத்திறனும் உழைப்பும்தான் இதில் 90% மூலதனம். முழு நேரமா டசல்ஸ் வொர்க் செய்துகொடுத்தா, குறைந்தபட்சம் பத்தாயிரத்தில் இருந்து அதன் மடங்குகளில் சம்பாதிக்கலாம். கடந்த ஒன்பது மாதங்களாதான் நான் இதை செய்துட்டு இருக்கேன். பயிற்சியில் 20 டிசைன்கள்தான் கற்றுக்கொடுத்தாங்க. ஆனா, கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஈடுகொடுக்க, நானே யோசிச்சு யோசிச்சு போட்டுப் பார்த்துனு, இப்போ 50+ டிசைன்கள் செஞ்சுட்டு இருக்கேன். பட்டுப்புடவை மட்டுமில்ல, ஆயிரம் ரூபாயில் எடுக்கும் காட்டன் புடவையில் கூட, ‘எனக்கு 500 ரூபாய்க்கு டசல்ஸ் வொர்க் செய்துகொடுங்க’னு கேட்கிற பெண்களும் இருக்காங்க. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, புடவை சார்ந்த தொழிலைப் பொறுத்தவரை, நம்ம பெண்களை 100% நம்பலாம். நிச்சயம் நம்மை வெற்றியாளர் ஆக்கிடுவாங்க!”

- குழந்தைக்கு கண்மையிடும் கவனத்துடன், தன் புடவைகளை குஞ்சங்கள் மடங்காமல் மடித்துவைக்கிறார் ரம்யா!

- ஜெம்.எம்.ஜனனி, வெ.வித்யா காயத்ரி

படங்கள்: ஆர்.எம். முத்துராஜ், வி.சதீஷ்குமார்
நன்றி: ‘பாக்யா’ பியூட்டி பார்லர், அண்ணாநகர், மதுரை
மாடல்: சுகன்யா ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு