பிரீமியம் ஸ்டோரி

ணமகள் திருமணத்துக்கான தன் உடையை, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி அடையும் சாகசம் போல, புதுசாக, ரவுசாக, தினுசாக தேர்ந்தெடுக்க நினைப்பார். ஆனால், உங்கள் திருமணத்துக்கு உங்கள் அம்மாவின் திருமணப் புடவையை அணிவதை உங்களால் யோசிக்க முடியுமா? உங்களின் பாட்டி, கொள்ளுப் பாட்டியின் திருமணப் புடவையை நீங்கள் அணிந்துகொண்டு மணமுடிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓல்ட் இஸ் கோல்டு!

இப்படி ஒரு விநோதம், ஜெருசலேம், பெத்லகம் நகரில் உள்ள மேரி லோரியின் குடும்பத்தில் நடந்து வருகிறது. மேரியின் திருமண கவுனை 120 வருடங்களாக, 11 தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தின் பெண்கள் தங்கள் திருமண ஆடையாக அணிந்துவருகிறார்கள்.

மேரி லோரி வாரனுக்கு 1896-ல் தேவாலயத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தது. அவர் அணிந்திருந்த, அழகான, கோல்டன் கலரில் பஃப் கை டிசைன் கொண்ட, 18 இன்ச் இடுப்பளவே கொண்ட, வழுவழுப்பான அந்த வெடிங் கவுன், தனது அடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் வாழையடி வாழையாக  திருமண கவுனாக இருக்கப்போகிறது என மேரிக்கு அப்போது தெரியாது.

மேரியும் அவர் குடும்பத்தினரும் மேரியின் வெடிங் கவுனை பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 50 வருடங்கள் கழித்து 1946-ல் ஜேன் உட்ரப் என்ற பெண், பாரம்பர்ய விரும்பியாக, தன் பாட்டியின் வெடிங் கவுனையே தன் திருமணத்தன்று அணிந்திருக்கிறார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே குடும்பத்தைச் சேர்ந்த வர்ஜீனியா உட்ரப் என்ற பெண்ணும், அதே வெடிங் கவுனை தன் உடல்வாகுக்கு ஏற்ப சிறிது ஆல்ட்ரேஷன் செய்து தனது திருமணத்தன்று அணிந்திருக்கிறார் 1960-ல் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சாரா செய்லர், கவுனின் கதை கேட்டு, தன் திருமணத்துக்கும் அதே கவுனை, சில ஆல்ட்ரேஷன்கள் செய்து அணிய... அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 16 வருடங்களாக அந்த கவுன் மீண்டும் பெட்டிக்குள் உறங்கியது.

1976-ல் லேய்ர்ட் மெக்கோனல், மீண்டும் அந்த கவுனை தன் வெடிங் கவுனாக அணிந்ததுடன், அதன் வரலாறு பற்றி தங்கள் குடும்பத்துப் பெண்கள் அனைவரிடமும் பெருமையுடன் பகிர்ந்தார். அந்த கவுனை அணிந்த நான்காவது மணப்பெண், சாரா. அவர் திருமணத்தில் கலந்துகொண்ட ஐந்து வயதுக் குட்டிப்பெண் லெஸ்லி உட்ரப் கிங்ஸ்டனுக்கு, திருமண விழாவின் ஒரு அங்கமாக அந்த வெடிங் கவுன் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டது. 17 வருடங்களுக்குப் பிறகு லெஸ்லி மணப்பெண் ஆனபோது, அதே வெடிங் கவுனை அணிந்தார்.

ஓல்ட் இஸ் கோல்டு!

லெஸ்ஸியின் திருமணத்துக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு, இந்த ஆடையை தேர்வு செய்தவர் ஜேனர். ஒரு வருடம் கழிந்து 1986-ல் ஜேன் ஆக்டன் தன் திருமணத்துக்கு இந்த ஆடையை அணிந்தபோது, கலர் போட்டோக்கள் புழக்கத்துக்கு வந்திருந்தன. அதுவரை புகைப்படங்களில் வெள்ளியாக பதிவு செய்யப்பட்ட கவுன், இம்முறை தன் பொன்நிற தேகத்தை புகைப்படங்களில் பொலிவுடன் வெளிப்படுத்தியது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு 1989-ல் வர்ஜீனியா கீரன்ஸ், இந்த கவுனை 80-களின் ஃபேஷனுக்கு தகுந்தாற்போல சிலபல மாற்றங்கள் செய்து தன் திருமணத்தன்று அணிந்தார். அதன் பிறகு 1991-ல் ஆன் ஆக்டென், வர்ஜீனியா செய்து இருந்த டிசைன்களை அகற்றி, 70-களில்  சாரா அணிந்திருந்த டிசைனுக்கு மாற்றி கவுனை அணிந்து, தன் திருமணத்தில் ஆன்டிக் லுக் போஸ் கொடுத்தார்.
கடைசியாக சென்ற வருடம், அபிகாயில் கிங்ஸ்டன் தன் திருமணத்துக்கு அந்தப் பாரம்பர்ய உடையை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுக்க, இது சமூக வலைதள காலமாதலால் மேரி பாட்டியின் வெடிங் கவுன் கதை, உலகம் முழுக்கச் சென்றடைந்தது.

அந்தக் குடும்பத்தின் அடுத்த மணப்பெண் யார், இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து இந்த கவுன் ஒரு மணமகளை அலங்கரிக்க, ஆசீர்வதிக்க இருப்பது தெரியவில்லை. ஆனால் 120 வருடங்கள், 11 திருமணங்கள், உடையில் பலவித மாற்றங்கள் செய்தும் இன்றும் அழகுடனும், நேர்த்தி குறையாமலும் அட்டகாசமாக மின்னும் அந்த கவுனுக்கு இணை உலகில் இல்லை!

- கே.அபிநயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு