Published:Updated:

சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!

புடவை

குடும்ப விசேஷங்களுக்கும், கல்லூரி மற்றும் அலுவலக நிகழ்ச்சிகளுக்கும், மடிப்பு கலையாமலும் உடல் அமைப்பை அழகுபடுத்தும் விதத்திலும் ரசனையோடு புடவை கட்டுவதுதான் பெண்களுக்குப் பெரிய சவால். தனக்குத்தானே புடவை கட்டிக்கொள்வதைவிட, யாரேனும் கட்டிவிட்டால் அது மிகவும் நேர்த்தியாக இருக்கும். அதிலும் மணப்பெண்ணுக்குப் புடவை கட்டுவதென்றால், கூடுதல் நேர்த்தியும் அழகியலும் அவசியம்.

முன்பெல்லாம் மணமகளுக்கான மேக்கப் செய்கிற அழகுக்கலை நிபுணரே மணமகளுக்குப் புடவையையும் அணிவித்துவிடுவார். இன்றைக்கோ, அழகுக்கலை நிபுணர் மற்றும் புடவை கட்டிவிடும் நிபுணர் என ஒவ்வொரு தேவைக்கும் தனித்துவமான நிபுணர்களைத் தேர்வுசெய்து கொள்கின்றனர்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!

அந்தவகையில், கச்சிதமாகப் புடவை கட்டிவிடுவதில்  நிபுணரான, சென்னையில் உள்ள ‘மோக்‌ஷா பிரைடல் ஸ்டூடியோ’வின் உரிமையாளர் கல்யாணி, புடவை கட்டிவிடுவதில் சந்தித்த சவால்களையும், அதன் நுணுக்கங்களையும் நம்மிடம் பகிர்கிறார்.

“இல்லத்தரசியா இருந்த நான், பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்து, முழுநேர மேக்கப் ஆர்ட்டிஸ்டா மாறினேன். என்னுடைய அனுபவத்தில், மேக்கப் போடுவதைவிட புடவை கட்டுவதற்குத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல்வாகு. ஒல்லியோ, குண்டோ, நாம புடவை கட்டிவிட்டா அவங்க அழகா தெரியணும். அதனால மிகவும் கவனமா, அதேநேரம் ரசித்துப் புடவை கட்டிவிடுவேன்.

பொதுவாக மணமகளின் உடல்வாகு எப்படி இருந்தாலும், தன்னை ஒல்லியாகக் காட்டிக்கொள்ளவே விரும்புவார். புடவை வாங்கும்போதே, அது தனக்குப் பொருத்தமா இருக்குமானு ஆலோசனை கேட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவுதான். திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத் தேர்வு செய்யும் மணமகள், புடவை விஷயத்திலும் எங்களைப் போன்ற நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.

முன்பெல்லாம் அயர்ன் பாக்ஸ் மூலம் இஸ்திரி போட்டுதான் புடவைகளுக்கான மடிப்பைச் சரிசெய்வார்கள். இப்போது புடவையைச் சீராக அயர்ன் செய்ய ஸ்டீம் மெஷின்கள் வந்தாச்சு. அதனால மணப்பெண்ணுக்குப் புடவை கட்டிவிடும்போது, தேவையான ப்ளீட்ஸ் வைத்தபின் அயர்ன் செய்வது மிகச் சுலபமா இருக்கு” என்கிற கல்யாணி, புடவையை செலக்ட் செய்வது குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்தார்...

“பொதுவாக காஞ்சிபுரம் புடவைகளே மணப்பெண்களின் சாய்ஸாக இருக்கும். பார்க்க அழகாக இருந்தாலும், காஞ்சிபுரம் புடவைகள் ஹெவி வெயிட்டாகத்தானே இருக்கும்? புடவையை `பின்’ செய்யும்போது, சில நேரங்களில் ‘பின்’ வளைந்து உடைந்துவிடுவதும் உண்டு. அதனால், சாஃப்ட் சில்க் புடவைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினால், அணிந்துகொள்வதற்குச் சுலபமாக இருக்கும்.

அடுத்ததாக... புடவைகளுக்கு ஏற்ப மேட்சிங் பிளவுஸ் அணிவது ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டது. புடவையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டாக இருக்கும் பிளவுஸ்களை அணிவதுதான் இப்போதைய ஃபேஷன்’’ என்கிற கல்யாணி, புடவை கட்டும் முறை குறித்து சில டிப்ஸ்களை வழங்குகிறார்...

 கல்யாணப் புடவையைக் கடைசி நேரத்தில் அயர்ன் செய்யாமல், முந்திய நாள் அன்றே ப்ளீட்ஸ் வைத்து அயர்ன் செய்து, முந்தானைக்கான `பின்’ போட்டு வைத்துக்கொள்வது நல்லது.

 நிறைய `பின்’ குத்துவதால் புடவை கிழிந்துவிடும் என்பது தவறு. சரியான இடத்தில், தேவையான அளவுக்கு `பின்’ செய்துகொண்டால் புடவை பாதுகாப்பாக, உடல்வாகுக்கு ஏற்ப பொருந்திப் போகும்.

 புடவையின்மீது எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவுக்கு பிளவுஸ் மீதும் கவனம் வைப்பது அவசியம். பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் பிளவுஸ் நன்றாகப் பொருந்தினால்தான், புடவையும் அதற்கேற்ப கச்சிதமாக அமையும்.

 லோ நெக் பிளவுஸ் என்றால், பிரேசியர் அணியாத வகையில் பேடட் பிளவுஸாகத் தைத்துக்கொள்வது, உடல் தோற்றத்தைச் சீராகக் காட்டும்.

 ஹீல்ஸ் உயரத்துக்கு ஏற்ப புடவையை நேர்த்தியாகக் கட்டிக்கொள்வது அவசியம்.

 வேலைப்பாடுகள் அதிகமுள்ள டிசைனர் புடவைகளுக்கு, நுணுக்கமான வேலைப்பாடுகள் இல்லாத லைட் வெயிட் நகைகளைத் தேர்வு செய்யவும். இதனால் புடவையில் நகைகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்.

“ இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பொறுமையா இருப்பது முக்கியம். சில கஸ்டமர்கள் சினிமா நட்சத்திரங்களைப் போல மேக்கப்பை எதிர்பார்ப்பாங்க. ஆனா, அவங்களோட சரும நிறத்துக்கும், முக அமைப்புக்கும் அவங்க எதிர்பார்த்த மேக்கப் கைகூடி வராது. அதனால மேக்கப்புக்குப் பிறகு திருப்தி அடைய மாட்டாங்க. அந்த மாதிரி நேரத்துல அவங்களுக்குப் பிரச்னையைப் புரியவைத்தும், முகவெட்டுக்குப் பொருந்தக்கூடிய மேக்கப் குறித்த விவரங்களை எடுத்துச்சொல்லியும், அவர்களுடைய மனநிலையை மாற்றியபின் மேக்கப் செய்து அனுப்புவதுதான் நம் சாமர்த்தியம்” என அனுபவப் பாடம் சொல்லி முடிக்கிறார் கல்யாணி.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசனையுடன் நேர்த்தியாகச் செய்தாலே நாமும் நிபுணராகிவிடலாம்தானே?

- பொன்.விமலா

படம்: அசோக் அர்ஸ்