Published:Updated:

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

ரென்டல் ட்ரெஸ்

திருமண வைபவங்களின் போது நம்மை முதலில் வசீகரிப்பது மணமக்களின் ஆடை அலங்காரங்கள்தானே? வேலைப்பாடுகள் நிறைந்த டிசைனர் டிரெஸ்கள் போன்ற ஆடம்பரமான ஆடைகளை அணிவதற்கு  அனைவருக்கும் விருப்பம்தான்  என்றாலும், திருமண பட்ஜெட்தான் மணமக்களின் ஆடை எதுவென நிர்ணயிக்கிறது. ஒரே ஒரு நாளுக்காக லட்சக்கணக்கில் செலவழித்து ஆடைகள் வாங்க எல்லோராலும் இயலாது. ஆனால், அப்படிப்பட்டவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ‘வாடகைக்குத் திருமண உடைகள்’ எனும் சேவை வேகமாகப் பரவி வருகிறது.

திருமணத்துக்காகவே பிரத்யேக ஆடைகளை வாடகைக்கு வழங்கி வரும், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த `ஜஸ்ட் ஃபார் எ டே’  நிறுவனத்தின் உரிமையாளர் உமாவிடம் பேசினோம்.

“நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு, மெஹந்தி, சங்கீத் என, திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அசத்தலான ஆடைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. மணமகளுக்கான டிரெஸ் கலெக்‌ஷனில் புது வரவு, புதுப்புது டிசைன்கள் என அனைத்தும் கிடைப்பதால், பெரும்பாலும் மணமகளுக்கான ஆடைகளையே வாடகைக்கு எடுக்கின்றனர். குறிப்பாக ‘லெஹெங்கா’ எனப்படும் வட இந்திய ஆடையே மணப்பெண்களின் விருப்பமாக இருக்கிறது.

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

மணமகளுக்கான ஆடைகள் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை வாடகைக்குக் கிடைக்கின்றன. 1,500 ரூபாய் வாடகை உடையில் பூ வேலைப்பாடுகள் குறைவாக இருக்கும். 10,000 ரூபாய் வாடகை உடை குந்தன் கற்கள் பதித்த ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அசத்தலாக இருக்கும். இந்த உடையின் ஒரிஜினல் விலை லட்சங்களில் இருக்கும். மணமகளுக்கான ஆடைகளைத் திருப்பித் தருவதற்குக் கூடுதல் கால அவகாசம் வழங்குகிறோம். நாளை திருமண வரவேற்பு என்றால், இன்று ஆடைகள் வாடகைக்கு எடுத்து, மறுநாள் முகூர்த்தமும் முடிந்து, அதற்கும் அடுத்த நாள் உடைகளைத் திருப்பி அளித்தால் போதும். இதற்கு ஒரு நாள் வாடகையே வசூலிக்கிறோம்.

மணமகனுக்கான வாடகை உடைகளில் அனைவரும் கோட் சூட்டையே அதிகம் விரும்புகின்றனர். இதிலும் குந்தன் கற்கள், மணிகள், எம்பிராய்டரி செய்யப்பட்டவை எனப் பல டிசைன்கள் உள்ளன. இதுதவிர ஷெர்வானி, ப்ளேசர் என மணமகனுக்கான ஆடைகள் 1,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரை ஒருநாள் வாடகைக்குக் கிடைக்கும். மணமக்கள் திருமணத்துக்கு இரண்டு வாரங்கள் முன்பு நேரடியாக வந்து, அவர்களுக்குப் பிடித்தமான மற்றும் பொருத்தமான ஆடைகளைத் தேர்வு செய்து, அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் போட்டுப் பார்த்த பின்னரே வாடகைக்கு புக் செய்கிறார்கள். பெண்களுக்கான வெடிங் பிளவுஸ் அளவுகளில் அனைவருக்கும் வித்தியாசம் வரும். அந்த நேரத்தில் அவரவருக்குத் தகுந்த அளவில் பிளவுஸைச் சரிசெய்த பின்தான் வாடகைக்குக் கொடுக்கிறோம்.

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

வாடகை உடைகள் என்றாலே, `அதை ஏற்கெனவே பயன்படுத்தி இருப்பார்களே’ என்கிற எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்புதான். ஆனால், வாடகைக்கு விடும் ஆடைகளை நன்றாகக் துவைத்து, உலர்த்திய பின்புதான் அடுத்தவருக்கு வாடகைக்கு விடுகிறோம். அதோடு, ஆடைகளுடன் வியர்வையை உறிஞ்சும் பேட் (Underarm Sweat Pads) வழங்கிவிடுவோம். இதை அதிகம் வியர்க்கும் அக்குள் பகுதியில் இருக்கும்படி உடையில் ஃபிக்ஸ் செய்துகொள்ளலாம். இதனால் உடைகளில் வியர்வை போன்ற விஷயங்களுக்கே இடமில்லை.

உடைகள் தேர்வு செய்யும்போதே, திருமண வீட்டினரின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு உடைகளுக்குப் பொருத்தமான நகைகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்வகையில், அவற்றையும் வைத்திருக்கிறோம். பாரம்பர்ய நகைகள், குந்தன் நகைகள் என நெத்திச்சுட்டி முதல் கொலுசு வரை வாடகைக்குக் கிடைக்கின்றன. நகைகளைப் பொறுத்தவரை முழு செட்டும் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தாமல், தேவையான நகைகளை விருப்பம்போலத் தேர்வு செய்துகொள்ளலாம். இவற்றுக்கு 1,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கிறோம்.

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

புடவை, லெஹெங்காவை ஆயிரங்களிலோ, லட்சங்களிலோ விலைக்கு வாங்கி, அதை ஒரு சில மணி நேரங்கள், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள். அதன்பிறகு வாழ்நாளில் ஒரு சில முறை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த உடைகளை மற்றவருக்குக் கொடுக்கவும் மனம்வருவது கடினமே. பீரோவில் பூட்டி வைத்திருக்கும் உடைக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற கேள்வியே அனைவரையும் வாடகை உடைகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஆடம்பரமாக ஜொலிக்க வாடகை உடைகள்!

முன்பெல்லாம் மணமக்கள் மட்டுமே ஆடம்பரமான ஆடைகளை வாடகைக்கு எடுத்து வந்தனர். இப்போது மணமக்களின் தம்பி, தங்கை, தோழிப்பெண், துணை மாப்பிள்ளை, குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் வாடகை உடையை ஆர்வமாக உடுத்த ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து மாதத்துக்கும் புதிய டிசைன்கள், புதிய வரவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதற்குத் தக்கவாறு பழைய டிசைன் உடைகளையே வருடக்கணக்கில் வைத்திருக்காமல், காலத்துக்கு ஏற்றவாறு ட்ரெண்டியான உடைகள் மற்றும் நகைகளை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் இந்தத் தொழிலில் முக்கியமானது. அப்போதுதான் வாடிக்கையாளர்களைக் கவர முடியும்” என அழகாகத் தொழில் சார்ந்த விஷயங்களைச் சொல்கிறார் உமா.

- சோ.கார்த்திகேயன்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

மாடல்: மைதிலி