Published:Updated:

பிரைடல் பிளவுஸில் அசத்த இதெல்லாம் அவசியம்!

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரைடல் பிளவுஸில் அசத்த இதெல்லாம் அவசியம்!

பிளவுஸ்

பார்ப்பவரையெல்லாம் அழகால், நேர்த்தியால், வடிவமைப்பால் பொறாமை கொள்ளவைக்கும் பிரைடல் பிளவுஸ்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு... அதீதம்! நேரம், பணம், ரசனை, கடின முயற்சி  என அனைத்தையும் கொட்டி ஒரு பிளவுஸை உருவாக்கி மணப்பெண்ணுக்கு அழகு செய்வது எளிதான காரியமல்ல.

திருமணப்பேச்சு முடிவாகும்போதே பெண்கள் தங்களுக்கான உடை வடிவமைப்பவரைச் சந்தித்து, தங்களது விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் கலந்தாலோசிப்பது அவசியம். நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு போன்ற நிகழ்வுகள் எங்கு, எத்தனை நாள்கள் நடைபெறப் போகின்றன, கிராமத்திலா நகரத்திலா என்பது போன்ற விவரங்களையும் வடிவமைப்பவரிடம் சொல்லிவிட்டால், அவர் நமக்கான உடையை மிக நேர்த்தியாகச் செய்துகொடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

பிரைடல் பிளவுஸ் டிசைன் செய்வதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களைப் பகிர்கிறார், சென்னையில்  ‘பாலி பிரைடல் ஸ்டூடியோ’ நடத்திவரும் சண்முகவள்ளி.

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!

சரும நிறம்தான் முக்கியம்

மணப்பெண் தேர்ந்தெடுக்கும் உடை, அதிக  விலை மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்ததா, இப்போதைய ட்ரெண்டில் இருக்கிறதா என்பதைக் கணிப்பதற்கு முன்பு தேர்ந்தெடுக்கும் உடையின் நிறம், மணப்பெண்ணின் சரும நிறத்துக்குப் பொருத்தமானதா என்பதைக் கவனிப்பது அவசியம்.  அதேபோன்று திருமண மண்டபம், மணமேடையின் அலங்காரம் மற்றும் திருமணத்துக்கான தீம்  போன்றவற்றையும் கவனத்தில்கொண்டுதான் உடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சுண்டினால் கன்னம் சிவக்கும் நிறத்தில் இருப்பவர்களுக்கு வெளிர் நிறங்களைத் தவிர்த்துவிட்டு ஊதா, ரேஸ்பெர்ரி பிங்க், எலுமிச்சைப் பச்சை, மாதுளை நிறம், மிட்நைட் ப்ளூ போன்ற நிறங்களில் ஆடை அணிந்தால், மகாராணி போன்ற தோற்றம் நிச்சயம். அதேபோன்று தக்காளிச் சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. மின்ட் கிரீன், எமரால்டு கிரீன், டார்க் பீச் ஆகிய வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

கோதுமை நிறத்தில் மின்னும் சருமத்தினருக்கு, இயற்கை சார்ந்த வண்ணங்களில் தேர்வு செய்யும் ஆடைகள் பொருத்தமாக இருக்கும். மிதமான மரகதப் பச்சை நிறம், ராயல் ப்ளூ, மஞ்சள், சிவப்பு, ஹாட் பிங்க் போன்ற நிறங்கள் மாநிறத்தவர்களின் அழகைக்கூட்டும். அதே சமயம் பீச் கலர், கிரே, மெரூன், பர்ப்பிள், மிட்நைட் ப்ளூ ஆகிய நிறங்களைத் தவிர்ப்பது அவசியம்.

கறுப்பு நிறத்தவர்களுக்கு, ஐஸ் ப்ளூ, டஸ்ட்டி பிங்க், மிதமான மரகதப் பச்சை நிறம், மின்ட் கிரீன், ஆரஞ்சு நிறங்கள் சரியான பொருத்தம். ஒயின் கலர், மஞ்சள், தங்க வண்ணம், காப்பர், நியான் போன்ற வண்ணங்கள் கறுப்பு நிறத்தவர்களுக்குப் பொருந்தாது. அதனால் எக்காரணம் கொண்டும் அடர் வண்ண நிற ஆடைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

திருமணப் புடவையைப் பொறுத்தவரை தற்போதைய ட்ரெண்டு என்றால் அது பிங்க் மற்றும் ஊதா நிறங்கள்தான். மற்றபடி நிறத்தில் கவனம் செலுத்துவதுபோல டிசைனிலும் கவனம் செலுத்துவது நல்லது. அந்த வகையில், ஒல்லியாக இருப்பவர்களுக்கு, பெரிய பார்டர் கொண்ட சேலையும், பூக்கள் நிறைந்த ஆடைகளும் அழகூட்டும். சற்று பருமனாக இருப்பவர்களை பார்டர் சிறியதாக இருக்கும் சேலைகள் மற்றும் டிசைன்கள் குறைவாக உள்ள ஆடைகள் ஒல்லியாகக் காட்டும். திருமண நிகழ்வு அனைத்தும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்படுவதால், ஆடையைத் தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்துவது அவசியம்.

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!

பிளவுஸ் தேர்வு

சேலையைத் தேர்ந்தெடுப்பதைவிட அதற்கான பிளவுஸ் தேர்வில்தான் இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, இதுவரை யாரும் அணியாத வகையில் பிளவுஸ் டிசைன் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் புடவையுடன் சேர்ந்துவரும் பிளவுஸ் துணியில்தான் பிளவுஸ் தைப்பார்கள். ஆனால், புடவைக்கு என்ன மாதிரியான பிளவுஸ் டிசைன் செய்ய முடிவு செய்கிறார்களோ, அதற்குத் தகுந்த துணிகளை வாங்கி டிசைன் செய்யப்படும் கஸ்டமைஸ்டு வெடிங் பிளவுஸ்தான் இப்போதைய ட்ரெண்டு.

புகைப்படங்களில் தனித்துத் தெரிய விருப்பமுள்ள பெண்கள், கான்ட்ராஸ்ட் வண்ணங்களிலான பிளவுஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், சேலையில் ஜரிகை அதிகம் இருக்கும்பட்சத்தில் கான்ட்ராஸ்டான நிறங்களில் பிளவுஸ் தேர்வு செய்வதைத் தவிர்க்கவும். தங்கநிற ஜரிகை அதிகம் உள்ள சேலைக்கு, புடவையின் நிறத்தோடு தொடர்புடைய அடர்நிற பிளவுஸைத் தேர்வு செய்யலாம். புடவையின் நிறமும் அதன் பார்டரின் நிறமும் கான்ட்ராஸ்டாக இருந்தால், புடவையுடன் சேர்ந்துவரும் துணியிலேயே பிளவுஸ் தைத்துக் கொள்ளவும்.

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!எளிமையான விருந்து போன்ற நிகழ்வுகளுக்கு, ரோஸ் அல்லது மஞ்சள் நிற பிளவுஸ்கள் பொருத்தமானவை. பிளவுஸ் கலரைத் தேர்வு செய்யும்போது, நிகழ்ச்சியில் என்ன மாதிரியான நகைகள் அணியப்போகிறோம் என்பதையும் கருத்தில்கொள்ளவும். ஏனெனில், மஞ்சள் வண்ண பிளவுஸ் அணிந்து தங்க நகைகள் அணியும்போது இரண்டும் ஒன்றுசேர்ந்து முகத்தை டல்லாகக் காண்பிக்கும். அதுவே தங்க நகைக்குச் சிவப்பு, அடர் பச்சை, ஊதா போன்ற நிறங்களில் பிளவுஸ் இருந்தால் நகைகள் எடுப்பாகவும், மணமகளின் முகம் கூடுதல் பொலிவாகவும் இருக்கும். உங்கள் டிசைனரைச் சந்திக்கும் முன்பே எந்த விழாவுக்கு எப்படிப்பட்ட உடைகள் வேண்டும், என்ன மாதிரியான நகைகள் அணியப்போகிறீர்கள் என்கிற தெளிவான தகவலோடு வந்தாலே டிசைனரின் வேலை சுலபமாகிவிடும்.

பிளவுஸ் டிசைன்

பிரைடல் பிளவுஸில் ‘எல்போ ஸ்லீவ்’ எனப்படும் முழங்கை அளவு ஸ்லீவ்தான் இப்போதைய ட்ரெண்டு. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு முழங்கைக்கு மேல் வரையிலான ஸ்லீவ் மற்றும் சற்று பருமனாக இருப்பவர்களுக்கு, முழங்கையைத் தாண்டிய ஸ்லீவ் பிளவுஸ்தான் பொருத்தம்.  அதேபோல் தோள்பட்டையின் அளவைப் பொறுத்து, கழுத்து டிசைனை முடிவு செய்வோம். ஒல்லியான பெண்களுக்கு டபுள் நெக் மற்றும் அகலமான தோள்பட்டை உடையவர்களுக்கு ஸ்ட்ரெயிட் மற்றும் லீப் நெக் அழகு சேர்க்கும்.

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!

பிளவுஸில் செய்யும் எம்ப்ராய்டரியைப் பொறுத்தவரை, புட்டா போடுவது,  நேர்க்கோடு, கட்டம், வளைவு என்று ஜியோமெட்ரிக் டிசைன் செய்யலாம். சேலையில் இருக்கும் பூவையே பிளவுஸில் டிசைன் செய்வது பழைய ட்ரெண்டு. சேலையில் பூக்கள் இருந்தால் பிளவுஸில் ஜியோமெட்ரிக்  டிசைன் செய்வதுதான் இப்போதைய ட்ரெண்டு. பாரம்பர்ய மாங்காய், மயில் போன்ற வடிவங்கள், ட்ரெண்டியான ஜியாமெட்ரிக் டிசைன்ஸ் என நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு டிசைனில் வலம்வருவதுபோல ஒவ்வொரு பிளவுஸிலும் தனித்துவமாக டிசைன் செய்யலாம். முத்துகள், குந்தன் ஸ்டோன்ஸ், ஜர்தோஸி, டெம்பிள் ஜுவல்லரி போன்ற டிசைன்கள்தான் பெரும்பான்மையினரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.  மற்றபடி ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பாடுகளும், பருமனாக உள்ளவர்களுக்கு குறைந்த அளவிலான வேலைப்பாடுகளும் செய்யப்பட்ட பிளவுஸ்தான் பொருத்தமானது.

பிளவுஸ் மெட்டீரியல்

பிரைடல் பிளவுஸில் அசத்த  இதெல்லாம் அவசியம்!


உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பியூர் சில்க் மெட்டீரியல் சரியாக இருக்கும். மேலும், கைகளுக்கும் உடல் பகுதிக்கும் வேறு வேறு வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு ரா சில்க் பொருந்தும். குறிப்பாக சேலை மேட் ஃபினிஷ்ஷில் இருந்தால், பிளவுஸை ரா சில்க் மெட்டீரியலில் தைக்கலாம்.

பராமரிப்பு

எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள பிளவுஸில் லைனிங் வைத்து த் தைப்பது மிக முக்கியம். இல்லையென்றால் ஏ.சி ஹாலாக இருந்தாலும் வியர்க்கும். லைனிங் வைப்பதற்கு சன் கிரேப் மெட்டீரியல் உபயோகிக்கலாம். அண்டர் ஆர்ம் பேட்ஸ் எனப்படும் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய பேட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இதில் டிஸ்போஸபிள் மற்றும் வாஷபிள் என இரண்டு ரகங்கள் இருக்கின்றன. டிசைனரிடம் வாஷபிள் பேட் வைத்து பிளவுஸ் தைக்கச் சொல்லலாம். இதனால், திருமணப் புகைப்படங்களில் வியர்வை தெரியும் பிளவுஸுடன் நிற்பதைத் தவிர்க்க முடியும். துணிக்கடைகளில் காஸ்ட்லியான பிரைடல் பிளவுஸ்களை வைத்துக்கொள்வதற்கென பவுச்சஸ் கிடைக்கின்றன. அதில் பிளவுஸை வைத்துப் பராமரிக்கும்பட்சத்தில் பிளவுஸ் நீண்ட காலம் உழைக்கும். 

- யாழ் ஸ்ரீதேவி

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

மாடல்: மனீஷா