பிரீமியம் ஸ்டோரி

வ்வொரு விசேஷ நிகழ்வுக்கும் பெண்களுக்கு ஆடையிலிருந்து ஆபரணங்கள் வரை ஒரு ஃப்ரெஷ் லுக் தேவைப்படுகிறது. ‘புதிதாக, ட்ரெண்டியாக, அதேசமயம் பட்ஜெட்டுக்குள்ள...’ என்று விரியும் அவர்களின் தேடலுக்குப் பரிசாக அறிமுகமாகியிருக்கின்றன... சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ். ‘`இன்றைய பெண்களின் ரசனையில் கவரிங் நகைகளின் காலமெல்லாம் மலையேறிவிட்டிருக்கிறது. தங்க நகைகளுக்கு அடுத்து இப்போது சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ்தான் டிரெண்டு’’ என்கிறார், பெங்களூரில் உள்ள ‘குஷால்’ஸ் ஃபேஷன் ஜுவல்லரீஸ்’ நிறுவனர் அங்கித் குலேச்சா.

சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ்!

“சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ் 9-ம் நூற்றாண்டே கண்டுபிடிக்கப்பட்ட நகைகள். அந்த நூற்றாண்டு தெய்வச் சிலைகளுக்கும், வடிவங்களுக்கும் அணிவிக்கப்பட்ட அணிகலன்கள் அவை. பாரம்பர்யமான இந்திய டெம்பிள் ஜுவல்ஸ் பின்னர் தங்க உலோகத்தில் விலை உயர்ந்த கற்கள் பதித்துச் செய்யப்பட்டன. காலப்போக்கில், இத்தகைய நகைகளைப் பரதநாட்டியக் கலைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகச் சராசரி பெண்களும் அந்த வகை ஆபரணங்களை அணிய ஆரம்பித்தனர். லட்சுமி, விநாயகர் எனத் தெய்வ உருவங்களில் வடிவமைக்கப்படும் இந்த டெம்பிள் ஜுவல்ஸ் அணிவது அதிர்ஷ்டம் கொண்டுவரும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உண்டு. ‘ஒரு விழாவுக்கு ஒரு நகை’ என்ற பெண்களின் ஆசைக்குத் தகுந்தமாதிரி பட்ஜெட் விலையில் சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ்ஸை வாங்கிவிடலாம் ’’ என்ற அங்கித், அதன் உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு பற்றிப் பேசினார்.

சில்வர் டெம்பிள் ஜுவல்ஸ்!

“92.5% சுத்தமான வெள்ளியில் தங்க முலாம் பூசி சில்வர் டெம்பிள் நகைகள் உருவாகுகின்றன. பொதுவாக வெள்ளியை ‘சாஃப்ட் மெட்டல்’ (Soft Metal) என்பார்கள். அதனால், மிகவும் நுணுக்கமான டிசைன்களையும் இந்த உலோகத்தில் எளிதாக வடிவமைக்க முடியும். எளிதில் மெருகு குறையாமலிருக்கும் இந்த நகைகள், சரியான பராமரிப்பில்லாமல் மெருகு குறைந்தாலும், மீண்டும் தங்க முலாம் செய்து பயன்படுத்தலாம்’’ என்ற அங்கித்,  இமிட்டேஷன் நகைகளைவிட இந்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் எந்த வகையில் சிறப்பானது என்பது பற்றியும் பேசினார்.

‘`இமிட்டேஷன் நகைகளுக்கும், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வெள்ளி நகைகளில் கிடைக்கும் துல்லியமான வடிவமைப்பு இமிட்டேஷன் நகைகளில் கிடைக்காது. சில்வர் டெம்பிள் நகைகளை வடிவமைப்பவர்கள் பெரும்பாலும் தங்க நகைகளை வடிவமைப்பவர்கள்தாம் என்பதும் அதற்குக் காரணம். மேலும், தங்க நகைகளில் பயன்படுத்தப்படும் ரூபி, முத்து, மரகதம் போன்ற விலைமதிப்புமிக்க கற்கள்தாம் சில்வர் டெம்பிள் நகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் வாடிக்கையாளர்களிடையே சில்வர் டெம்பிள் நகைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. மறுவிற்பனை வாய்ப்பு (Resale Value) சில்வர் டெம்பிள் நகைகளுக்கு இல்லை என்றாலும், பயன்படுத்திய வெள்ளி நகைகளைத் திரும்பவும் நகைக்கடைகளில் கொடுத்து உருக்கி, அந்த வெள்ளியையோ வெள்ளிக்கான மதிப்பையோ பெற்றுக்கொள்ளலாம்’’ என வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசி முடித்தார் அங்கித்.

-  எம்.ஆர்.ஷோபனா

படங்கள் உதவி : குஷால்ஸ் ஜுவல்லரீஸ்

சில்வர் நகைகளைப் பாதுகாக்க..!

     * சில்வர் டெம்பிள் நகைகளை பட்டர் பேப்பர் அல்லது  `பிளாஸ்டிக் பவுச்’சில் (Plastic pouch) மட்டுமே வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

     * வெள்ளி நகைகளை வெல்வெட் பெட்டிகளில் வைக்கக் கூடாது.

     * மரப்பெட்டியைத் தவிர எந்த வகையான உலோகப் பெட்டியிலும் இந்த நகைகளை வைக்க வேண்டாம்.

     * நகைகள் மீது தண்ணீர், ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருள்கள் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

     *ஒவ்வொரு முறை அணிந்து கழற்றியதும். சுத்தமான காட்டன் துணியினால் நகைகளில் படிந்திருக்கும், தூசி மற்றும் வியர்வையைத் துடைத்துவிட்டு, பெட்டியில் வைத்துப் பத்திரப்படுத்துவது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு