பிரீமியம் ஸ்டோரி

ட்டுப் புடவைகளின் மேல் தீராக் காதல் இருந்தாலும், நம் முந்தைய தலைமுறைப் பெண்கள்போல பட்டை உடுத்துவதும் பராமரிப்பதும் நமக்குச் சுலபமான விஷயமாக இருப்பதில்லை. அதைத் தரம் பார்த்து வாங்குவதும், அப்படி பல்லாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய புடவையைப் பராமரிப்பதும் இன்றைய பெண்களுக்குச் சிரமமானதொரு பணியாகவே இருக்கிறது. ‘`பட்டின் தரத்தைச் சில முக்கிய விஷயங்கள் வைத்து மதிப்பிடலாம்’’ என்று சொல்லும் சென்னை, பாலம் சில்க்ஸ்ஸின் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவி, பட்டுப் பராமரிப்புக்கான ஆலோசனைகளும் வழங்கினார்.

தேர்ந்தெடுக்கும் முறைகள்...

 பிராண்ட்:

பொதுவாக பட்டில் எந்த பிராண்ட் வாங்கினால் தரமாக இருக்கும் என்று அனுபவத்திலோ, மற்றவர்களின் பரிந்துரையிலோ உங்களுக்குள் ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கும். அதைப் பின்பற்றலாம்.

ஸ்டிக்கர்:

தரம் குறித்த விளக்கம் அளிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுக்கவும். ஒருவேளை ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை எனில், அந்த வகையான புடவைகளைத் தவிர்க்கவும்.

பட்டான பட்டல்லவோ..!

`1ஜி’ பட்டு:

முந்தைய காலத்தில் அசல் தங்க ஜரிகைப் பட்டுப் புடவைகளை அணிபவர்கள் அது பழையதாகிவிட்ட நிலையில், புடவையை உருக்கி அதில் சேர்க்கப்பட்ட தங்கம், வெள்ளியைப் பிரித்தெடுத்துக்கொள்வார்கள். ஆனால், இன்று அந்த நடைமுறை சாத்தியம் இல்லை. எனவே 1 கிராம் கோல்டு (1 Gram gold) பட்டு ரகங்களைத் தேர்வு செய்வது நலம். இவை தூய தங்க ஜரிகைப் பட்டு வகைகளாகும். எடை 600 கிராமுக்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு என்று சொல்லி ஆனால், 600 கிராமுக்குக் குறைவாக எடை இருப்பின் அவற்றை போலிகள் என்று அறியலாம்.

சுங்கு முடிகள்:

தரமான பட்டு எனில், புடவையின் முந்தானையில் போடப்படும் சுங்கு முடிகள் சீராக இருக்கும். போலியான பட்டு எனில் சுங்கு முடிகள் சீரற்று இருப்பதுடன், அவற்றின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

பாதுகாக்கும் வழிமுறைகள்...

நிழலில் உலர்த்தவும்:

ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. நிழலில் உலர்த்திய பின் எடுத்து மடித்து வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை துவைப்பதாக இருந்தாலும் கூட, நிழலில் உலர்த்திய பின்னரே துவைக்கவும்.

டிரை வாஷ்:

பட்டுப் புடவைகளை டிரை வாஷ் செய்து வாங்குவது அதன் ஆயுளை அதிகரிக்கும். டிரை வாஷ் கடையில், பருத்தி ஆடைக்குக் கொடுக்கும் சாஃப்ட் ஃபினிஷிங் கொடுக்கச்சொல்லி வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் புடவை உடுத்த கடினமாக இருக்கும்.

பூந்திக் கொட்டை:

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக் கொட்டையைக்கொண்டு வீட்டிலேயே பட்டுப் புடவையை அலசலாம். ஒரு புடவைக்கு ஒரு காய் பயன்படுத்தினால் போதும். அந்தக் காயின் தோலைத் தண்ணீர் அல்லது வெந்நீரில் ஊறவைக்க, ஷாம்பூ போல நுரை வரும். அந்தத் தண்ணீரில் புடவையை அமிழ்த்தி எடுத்து, அலசிய பின் நிழலில் உலர்த்தலாம். பட்டுப் புடவையை அடித்துத் துவைக்கவோ, முறுக்கிப் பிழியவோ, வெயிலில் காயவைக்கவோ கூடாது.

பட்டான பட்டல்லவோ..!

பேபி ஷாம்பூ:

அதிக கெமிக்கல் கலப்பில்லாத பேபி ஷாம்பூ கலந்த தண்ணீரிலும் பட்டுப் புடவையை அமிழ்த்தி எடுத்து அலசலாம். 

பாலிதீன் கவருக்கு நோ!

பட்டுப் புடவையை அலமாரியில் வைக்கும்போது அட்டைப் பெட்டியுடனோ, பாலிதீன் கவரில் சுற்றியோ வைக்கக் கூடாது. அப்படியே வைத்தால் போதுமானது.

 வேட்டி துணி:

பட்டுப் புடவையை அலமாரியில் வைக்கும்போது வேட்டி துணிகளில் சுற்றிவைக்கலாம். அழுக்கும் படியாது, காற்றோட்டமாகவும் இருக்கும்.

வசம்பு:

நாப்தலீன் உருண்டைகளைப் பயன்படுத்தும்போது அதன் மணம் பட்டுப் புடவையில் தொற்றிக்கொள்ளும்.

பட்டான பட்டல்லவோ..!

மேலும், வேதிவினையால் அது பட்டுப் புடவையில் உருகி அதன் நிறங்களையும் பாதிக்கக்கூடும். எனவே, அதற்குப் பதிலாக வசம்பு பயன்படுத்தினால் இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

அயர்ன் செய்ய வேண்டுமா:

பட்டுப் புடவைகளை பலரும் அயர்ன் செய்து அலமாரியில் வைப்பது வழக்கம். ஆனால், பட்டை ஒருமுறை உடுத்திய பின்னர் நிழலில் உலர்த்தி, கைகளாலேயே மடித்து அலமாரியில் வைத்துவிடலாம். பின்னர் அடுத்த முறை உடுத்த வேண்டிவரும்போது, அந்தத் தருணத்தில் எடுத்து அயர்ன் செய்துகொள்ளலாம். அயர்ன் செய்த பட்டுப் புடவைகள் பல மாதங்களாக அலமாரியில் பயன்படுத்தாமல் இருக்கும்போது, அதன் மடிப்புகளில் நூல் முறிந்துவிடும் என்பதால் இந்தப் பரிந்துரை.

மடிப்புகளை மாற்ற வேண்டும்:

பட்டுப்  புடவைகள் மாதக்கணக்காக, வருடக்கணக்காக பயன்படுத்தப்படாமல் அலமாரியில் இருக்கும்போது, அதன் மடிப்புகளில் நூல் நைந்துபோய்விடும். எனவே, பயன்படுத்தாத பட்டுப் புடவைகளை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அலமாரியிலிருந்து எடுத்து, தரையிலோ, சோபா, படுக்கை மீதோ விரித்துவிட்டு, ஆறு மணி நேரம் கழித்து, பழைய மடிப்புக்கு எதிராக மாற்றி மடித்து அலமாரியில் வைக்கவும்.

- வெ.வித்யா காயத்ரி

படங்கள்: அஸ்வின் தி க்ளிக்கர் போட்டோகிராபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு