‘`சின்ன வயசில் இருந்தே எனக்கு கிராஃப்ட்டில் ஆர்வம் அதிகம். அப்படித்தான் ஃபேஷன் நகைகளையும் செய்யக் கத்துக்கிட்டேன். இப்போ அதுவே என் பிசினஸ் ஆகிடுச்சு. குந்தன் ஜுவல்ஸ் முதல் க்வில்லிங் ஜுவல்ஸ் வரை எல்லாம் செய்வேன்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி, பல் மருத்துவர். இங்கு நமக்காக அவர் செய்து காட்டுவது, ரெசின் ஜுவல்!

என்னென்ன தேவை?
ரெசின், ஹார்ட்னர், யூவி ரெசின் (பசை போன்றது), நெயில் பஃப்பர் (Nail buffer), உப்புத்தாள் (Sand paper), யூஸ் அண்டு த்ரோ கப், யூஸ் அண்டு த்ரோ ஸ்பூன், காய்ந்த பூக்கள் (ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), செயின், ஸ்ட்ரா, மோல்டு, பெயில் (Bail - ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), ரெசின் டோமிங் ட்ரே (ரெசின் சிந்தினால் எளிதில் சுத்தம் செய்ய).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படிச் செய்வது?
படம் 1: யூஸ் அண்டு த்ரோ கப்பில் 10 மில்லி கிராம் ரெசின் எடுத்துக்கொள்ளவும்.
படம் 2: ரெசின் கப்பில் 4 மில்லி கிராம் ஹார்ட்னர் ஊற்றவும்.
படம் 3: ரெசினையும் ஹார்ட்னரையும் யூஸ் அண்டு த்ரோ ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.
படம் 4: கலக்கிய கலவையை ஸ்பூனால் எடுத்து ஊற்றிப் பார்க்கவும். படத்தில் காட்டியுள்ளது போன்று கம்பிப் பதம் வர வேண்டும்.
படம் 5: ரெசின் டோமிங் டிரேயில் மோல்டை வைத்து, அதில் ரெசின் கலவையை ஊற்றவும்.
படம் 6: ரெசினை ஊற்றும்போது பபுள்ஸ் வரும் என்பதால் ரெசின் ஊற்றிய பின் படத்தில் காட்டியுள்ளதுபோல ஸ்ட்ராவால் ஒருமுறை மோல்டின் மீது ஊதவும்.
படம் 7: உலர்ந்த பூக்களை ஒன்றின் பின் ஒன்றாக மோல்டில் உள்ள ரெசின் மீது மெதுவாக வைக்கவும்.
படம் 8: இதை இரண்டு நாள்கள் உலரவிடவும். பின்னர் மோல்டில் இருந்து எடுத்தால் அழகிய பெண்டன்ட் ரெடி.
படம் 9: பெண்டன்ட்டை உப்புத் தாளின் மீது வைத்து ஒரு முறை தேய்த்து எடுக்கவும். இது பிசிறுகள் இல்லாத நீட் லுக் கொடுக்கும்.

படம் 10: பின்னர் நெயில் பஃப்பரால் ஒருமுறை ஷேப் செய்து கொள்ளவும்.
படம் 11: பெண்டன்டின் மேல் பகுதியில் பெயிலை யூவி ரெசின் கொண்டு ஒட்டி ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து உலரவிடவும்.
படம் 12: உலர்ந்ததும் பெயிலின் துளையில் செயினைக் கோத்துக்கொள்ளவும்.
படம் 13: அழகிய ரெசின் ஜுவல் தயார்.
இதுபோல உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப புதுப்புது டிசைன் களை உருவாக்கலாமே!
உங்கள் கவனத்துக்கு...
ரெசின் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நகை செய்யும்போது கிளவுஸ் அணிந்துகொள்ளவும்.
- சு.சூர்யா கோமதி படங்கள் : க.பாலாஜி