Published:Updated:

எம்.ஆர்.ராதா கோட், ஜெயலலிதா கூலர்ஸ், நதியா காதணி... ரெட்ரோ ஃபேஷன்!

எம்.ஆர்.ராதா கோட், ஜெயலலிதா கூலர்ஸ், நதியா காதணி... ரெட்ரோ ஃபேஷன்!
எம்.ஆர்.ராதா கோட், ஜெயலலிதா கூலர்ஸ், நதியா காதணி... ரெட்ரோ ஃபேஷன்!

எம்.ஆர்.ராதா கோட், ஜெயலலிதா கூலர்ஸ், நதியா காதணி... ரெட்ரோ ஃபேஷன்!

1940 முதல் 1960 வரையிலான காலகட்டம்தான் மேடை நாடகங்களின் தாக்கம் குறைந்து, திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகமான காலகட்டம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே கலாசார நுணுக்கங்கள், ஆடம்பர உடைகள், ஆடல், பாடல் போன்ற `ஸ்பைஸ் அப்' விஷயங்கள் திரைப்படங்களில் அதிகம் சேர்க்கப்பட்டன. இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. தங்களை மெருகேற்றிக்கொள்ள பல்வேறு முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். `ஃபேஷன்’, `ஸ்டைல்’ போன்ற வார்த்தைகள் மக்கள் பரவலாகப் பேசத் தொடங்கிய காலகட்டமும் அதுதான். அந்த வகையில் 1950-கள் முதல் 80-கள் வரை பொது மக்களை அதிகம் ஈர்த்த கோலிவுட் நடிகர், நடிகைகளின் ஸ்டைல் மற்றும் சாமானிய மக்களையும் பின்பற்ற வைத்த `ரெட்ரோ ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகள்’ என்னவென்று பார்ப்போம்.


1950-ஸ் ஃபேஷன் :


1941-ம் ஆண்டு N.S.கிருஷ்ணன் நடிப்பில் `அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் வெளிவந்திருந்தாலும், எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதி நடிப்பில் வெளிவந்த திரைப்படமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் உடுத்தியிருக்கும் உடைகள் அனைத்தும், மத்திய கிழக்கு நாடுகளின் பாரம்பர்ய உடைகள். பட்டுத் துணியிலான சட்டை, தற்போது வடஇந்தியாவில் பரவலாக உபயோகப்படுத்தும் பட்டியாலா வகை பேன்ட்டுகள், `மொஜிரி’ வகை காலணிகள், ஓவர்கோட் என வெவ்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஈர்க்கப்பட்டு வடிவமைத்த உடைகள் அவை. இது `எத்னிக்’ ரகம் என்றால், 1954-ம் ஆண்டு, எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்து தமிழ்நாடே கொண்டாடித் தீர்த்த திரைப்படம் `ரத்தக்கண்ணீர்’ மூலம், வெஸ்டர்ன் உடைகளின் தாக்கம் அதிகமானது. `ஃபாரின் ரிட்டர்ன்’ எம்.ஆர்.ராதாவின் கோட் சூட், டை போன்றவை பெருமளவில் தமிழ்நாட்டில் தடம் பதித்தது.


1960- ஸ் ஃபேஷன் :


தீவிரமான குடும்பக் கதைக்களங்களுக்கு நடுவே, கலகலவென சிரிக்க வைத்த அந்தக் காலத்து கலர்ஃபுல் Romcom திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை’. இந்தத் திரைப்படத்தின்மூலம், ஊட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களும், `கர்ல்’, `bun’ போன்ற ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல், ஷார்ட் கமீஸ், பட்டியாலா மற்றும் Tights வகை சல்வார், கோட் மாடல் Night Dress போன்ற உடைகளும் மக்களின் ஃபேவரிட் லிஸ்டில் சேர்ந்தது. டிரெண்ட் செட் வரிசையில், 1966-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த `அன்பே வா’ படத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கவே முடியாது. அன்றுவரை வெள்ளை, நீலம் போன்ற லைட் ஷேடு நிறங்கள்தான் மக்களின் சாய்ஸ். ஆனால், சிவப்பு, பச்சை போன்ற பிரைட் நிறங்கள், உடலை ஒத்தியிருக்கும் சட்டைகள், விதவிதமான காலணிகள் என ஃபேஷன் டிரெண்டை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்ற திரைப்படம் இது.


1970-ஸ் ஃபேஷன் :


பெரும்பாலும் இந்தக் காலகட்டத்தில் வந்த உடைகளையும் ஸ்டைல்களையும்தான் `ரெட்ரோ’ என்று கூறப்படுகிறது. `பொன்மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்...’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதே தங்க நிறம்தான் கண்முன் நிறையும். 1970-ம் ஆண்டு, சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான `சொர்க்கம்’ திரைப்படத்தில், கான்செப்ட் ஷூட் முதல் கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ் வரை அத்தனையும் டாப் க்ளாஸ். இந்தக் காலகட்டத்தின் ஸ்டைல் ஐகான் ஜெயலலிதா என்றே சொல்லலாம். இவரின் கதாபாத்திரத் தேர்வு மட்டுமல்ல உடைகளின் தேர்வும் மிகவும் போல்டாகத்தான் இருக்கும். இன்றும் மக்களால் அதிகம் விரும்பப்படும் 'போல்கா’ பேட்டர்ன் உடைகள், கிராப் டாப், பிரைட் நிறப் புடவை, High-Neck டீ-ஷர்ட், மிகப் பெரிய `கூலர்ஸ்’, ஹேர் பேண்டு என அனைத்தையும் இவரின் திரைப்படங்களில் காண முடியும். 3/4 ஸ்லீவ், ஸ்லீவ்லெஸ் போன்ற வெவ்வேறு ஸ்லீவ்கள் மற்றும் `டாங்ளர்’ வகை காதணிகளை அறிமுகம் செய்தது இதே ஆண்டில் வெளிவந்த `தேடி வந்த மாப்பிளை’, `தலைவன்’ போன்ற திரைப்படங்கள்தான்.


1980-ஸ் ஃபேஷன் :
80-கள், திரைத்துறை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. `ஸ்டைலிஷ் சகாப்தம்’ என்றே சொல்லலாம். நதியா, அமலா, கௌதமி, குஷ்பு, ரேவதி, ராதிகா போன்றவர்களின் வருகையால் தமிழக மக்களின் ஃபேஷன் சென்ஸ் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. இவர்களுள் ஐகானிக் இடத்தைப் பிடித்தவர் நதியா. 1985-ம் ஆண்டு வெளியான `பூவே பூச்சூடவா’ திரைப்படம்மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான நதியா, தன் வித்தியாச ஸ்டைலிங்மூலம் மக்கள் மனதை கொள்ளைகொண்டார். `பண்’ அல்லது `கொண்டை’, `பொட்டு’, `காதணி’ என்று அத்தனையும் `நதியா’ அடைமொழியோடு மார்க்கெட்டில் விற்க ஆரம்பித்தனர். படங்கள் மட்டுமல்ல, அவர் பெயரில் வெளியான காஸ்டியூம்களும் மெகா ஹிட்.


`அக்னி நட்சத்திரம்’ - அமலாவின் வெஸ்டர்ன் அவுட்ஃபிட், `புன்னகை மன்னன்’ - ரேவதியின் சல்வார் கமீஸ் மற்றும் மிடி டிரஸ், `குரு’  - ஸ்ரீதேவியின் ஷார்ட் டிரஸ் மற்றும் புடவை போன்ற சில எவர்க்ரீன் ஆடைகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலகட்டம் 80-ஸ்.
`பில்லா’, `தர்மத்தின் தலைவன்’, `ராஜாதி ராஜா’ போன்ற திரைப்படங்களில் ரஜினிகாந்த் உடுத்திய `கோட் சூட்’ வேற லெவல் டிரெண்டானது. இதைத் தொடர்ந்தே `ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட்’ மக்களிடையே பாப்புலர் ஆனது.

 
இந்த ரெட்ரோ டிரெண்டில் உங்க ஃபேவரிட் எது?

அடுத்த கட்டுரைக்கு