Published:Updated:

நீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்
3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்

ராணி

பிரீமியம் ஸ்டோரி

ந்தவொரு நல்ல நிகழ்ச்சிக்கும் பொருத்தமான அன்பளிப்பைத் தேடுவது பெரிய சவால். எதைக் கொடுத்தாலும், பெரும்பாலும் அதே சாயலில் அவர்களிடம் இன்னொன்று இருக்கும். அப்படிப்பட்ட பொருள்கள் அநேகமாக இன்னொருவருக்கு கைமாறி விடுவதுதான் இயல்பு. நாம் கொடுக்கும் அன்பளிப்பை, காலத்துக்கும் மறக்காமல் வைத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட அன்பளிப்புகள் அமைவதுதான் சிரமம்.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராணி, அதற்கொரு தீர்வு வைத்திருக்கிறார். இவர் உருவாக்கும் 3டி இம்ப்ரெஷன் மோல்டுகள் காலத்துக்கும் பத்திரப்படுத்தப்பட வேண்டியவை. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லா வயதினரின் கைகள் கால்களை 3டி முறையில் பதிவெடுத்து, மோல்டாக்கி, நினைவுச்சின்னமாக்கித் தருவதில் நிபுணர் ராணி.

‘`பி.காம் படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு எந்த வேலைக்கும் போகலை. ரெண்டு பசங்க இருக்காங்க. குடும்பச் செலவைச் சமாளிக்க நானும் ஏதாவது செய்யலாம்னு யோசிச்சேன். அப்போ ஒரு விஷயம் என்னை ரொம்ப ஈர்த்தது. அதுதான் இந்த 3டி இம்ப்ரெஷன் மோல்டு. வெளிநாடுகளில் இந்த ஆர்ட் ரொம்பவே பிரபலம். நம்மூரில் நிறைய மக்களுக்கு இதைப் பற்றி தெரியலை. முறைப்படி ஒரு பயிற்சியாளர்கிட்ட கத்துக்கிட்டு ஏழு வருஷங்களா பண்ணிட்டிருக்கேன்’’ - தன்னை அறிமுகம் செய்துகொள்கிற ராணி, இந்த 3டி இம்ப்ரெஷன் மோல்டின் சிறப்புகள் பற்றியும் பேசுகிறார்.

 ராணி
ராணி

‘`பிறந்த குழந்தைகளை போட்டோ எடுத்துவைக்கிறது, தொப்புள்கொடியைப் பத்திரப்படுத்துவது மாதிரியான சில விஷயங்களை நிறைய பெற்றோர் செய்வாங்க. வெளிநாடுகளில் கொஞ்சம் அட்வான்ஸ்டா போய் பிறந்த குழந்தைகளின் கைகளையும் கால்களையும் அந்தச் சுருக்கங்களோடும் நகங்களோடும் 3டி இம்ப்ரெஷன் முறையில மோல்டா செய்து வைக்கிறாங்க. குழந்தைகள் வளர்ந்த பிறகு இதைக் காட்டும்போது அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நம்முடைய நேசத்துக்கும் மரியாதைக்கும் உரிய யாருக்கும் இப்படியொரு மோல்டு செய்து அன்பளிப்பா கொடுக்க முடியும்’’ என்கிறவர், இதைக் கற்றுக்கொண்டு பிசினஸாகச் செய்ய நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னென்ன தேவை... முதலீடு?

ஆரம்பத்தில் 3,000 ரூபாய் முதலீடு போதுமானது. இந்த முதலீட்டில் குழந்தை களுக்கென்றால் இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்கள் செய்யலாம். பெரியவர் களுக்கென்றால் ஒரு கை அல்லது ஒரு கால் செய்யலாம். இம்ப்ரெஷன் எடுப்பதற்கான பிரத்யேக பவுடர் கடைகளில் கிடைக்கிறது. கோல்டு, சில்வர், பிங்க் மற்றும் நீல நிறங்களில் கலர் சேர்க்கலாம். பெண் குழந்தைகள் என்றால் பிங்க், ஆண் குழந்தைகளுக்கு நீலம் என்பது பொதுவிதி.

எத்தனை நாள் வேலை?

ஒரு ஜோடி கைகளுக்கு அல்லது கால்களுக்கு மூன்று நாள்கள் தேவைப்படும். வெயில் காலத்தில் மோல்டு சீக்கிரம் உலர்ந்துவிடும். மழை நேரத்தில் கூடுதலாகச் சில மணி நேரம் தேவைப்படும். குழந்தையின் பெயரைச் சேர்ப்பது ஃப்ரேம் செய்வது போன்ற வேலைகளுக்குக் கூடுதலாக ஒரு நாள் தேவைப்படும்.

எப்படிச் செய்வது?

யார் ஆர்டர் கேட்கிறார்களோ அவர்கள் வீட்டுக்குச் சென்று அதற்கான பவுடர் கலவையில் இம்ப்ரெஷன் எடுத்துக்கொண்டு வர வேண்டும். பிறகு அதை உலர வைப்பது, கலர் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். இம்ப்ரெஷன் எடுக்கும்போது குழந்தைகளை எந்த வகையிலும் துன்புறுத்தாமல் செய்துவிட முடியும். வெறும் மூன்று நிமிடங்கள்தான் இதற்குத் தேவைப்படும். வெளிநாடுகளில், பிறந்த குழந்தைக்குக்கூட இதைச் செய்கிறார்கள். நம்மூரில் ஆறு மாதக் குழந்தையிலிருந்து செய்யலாம். மோல்டு எடுக்க உபயோகப்படுத்தும் பவுடர், சருமத்துக்கு எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தாது. பக்கவிளைவுகளைத் தராது. எனவே, பயம் வேண்டாம்.

நீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்

குழந்தை மாவுக் கலவைக்குள் கைகளை எப்படி விடுகிறதோ அதே மாதிரிதான் இம்ப்ரெஷன் எடுக்க முடியும். சில குழந்தைகள் கையை இறுக்கமாக மூடிக்கொள்ளும். ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர் களுக்கும் செய்யும்போது கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நமது தேவைக்கேற்ப இம்ப்ரெஷன் எடுக்கலாம்.

வருமானம்... லாபம்?

ஒரு ஜோடி கைகளை 3டி இம்ப்ரெஷன் முறையில் முழுதாகச் செய்துகொடுக்க 3,000 ரூபாய் செலவாகும் ஃப்ரேம் செய்வதற்கான செலவு தனி. நடனக் கலைஞர்களுக்கு கால்கள், எழுத்தாளர்களுக்கு கைகள் என அவரவர் துறை சார்ந்து இந்த மோல்டுகளை உருவாக்கலாம். ஒவ்வொரு மோல்டுக்கும் 500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

பயிற்சி மற்றும் கட்டணம்?

ஒரு நாள் பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம். தேவையான பொருள்களுக்கும் சேர்த்து கட்டணம் 3,000 ரூபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு