Published:Updated:

ஆன்லைன்ல டிரெஸ் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை நோட் பண்ணிக்கங்க!

உடைகளின் அளவு, நிறம், தரம் மற்றும் டெலிவரியில் ஏற்படும் சந்தேகங்கள், குளறுபடிகள், தரமில்லாத பொருளை ரிட்டர்ன் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த சில எளிய குறிப்புகள் உங்களுக்காக.

1
Size

சரியான அளவு

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்கு உடை வாங்கினாலும் பிராண்டுக்கு பிராண்டு அளவுகளில் வித்தியாசம் இருக்கும். ட்ரையல் பார்த்து வாங்க முடியாத காரணங்களால் அளவைப் பொறுத்தவரை நிறைய சந்தேகங்கள் எழும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு, உங்கள் உடலமைப்பின் சரியான அளவை முதலில் தெரிந்து வைத்துக்கொள்வதுதான். உங்களுக்குத் தெரிந்த தையல் கலைஞரிடம் சென்று நீங்கள் விரும்பும் உடைகளுக்கான உங்களின் சரியான அளவை எடுத்துத் தரச்சொல்லி குறித்துக்கொள்ளுங்கள்.

கச்சிதமான அளவே கம்பீரத்தை கொடுக்கும். 

வீட்டிலேயே மெஷரிங் டேப் உதவியுடனும் அளந்துகொள்ளலாம். சரியான ஃபிட்டிங்கில் உடை வாங்க வேண்டும் என்றால், கனமான உடையை தவிர்த்து மெல்லிய உடையை அணிந்து அளவெடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக அளவெடுக்கும் நேரத்தில் பெண்கள் 'பேடட் பிரா' மற்றும் 'ஷேப்வேர்' அணிவதை தவிர்க்கவும். அப்போதுதான் துல்லியமான அளவை எடுக்க முடியும். வீட்டிலேயே அளவு எடுக்க முடிவுசெய்தால் உதவிக்கு ஒருவர் இருப்பது அவசியம்.

2
உங்கள் தோற்றத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்களின் சீக்ரெட் உங்கள் உடையின் ஃபிட்னஸ்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சைஸ் சார்ட்

நீங்கள் வாங்க விரும்பும் உடை 'பேன்ட்' எனில், ஆன்லைனில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பேன்ட்டின் இடுப்பிலிருந்து பாதம் வரையிலான நீளம் மற்றும் இடுப்பின் சுற்றளவை சரிபார்க்கவும். மத்த உடைகளுக்கு ஏற்றவாறு மார்புச் சுற்றளவு, கழுத்து மற்றும் கைகளின் அளவு என நீங்கள் குறித்து வைத்துள்ள அளவுகளை, நீங்கள் ஆடைகள் வாங்க விரும்பும் இணையதள பக்கத்திலுள்ள 'சைஸ் சார்ட்'டுடன் (Size Chart) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு ஷாப்பிங் இணையதளம் செல்லும்போதும் அதனதன் சைஸ் சார்ட்டை சரிபார்ப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், தளத்துக்குத் தளம், அளவுகள் மாறுபடும்.

3
எந்தத் தளத்தில் கண்கவர் புகைப்படங்களும் டிசைன்களும் இருக்கிறது என்பதில் காட்டும் கவனத்தை விமர்சனங்கள் மீதும் திருப்புங்கள்.

விமர்சனங்கள் முக்கியம்

ஷாப்பிங் இணையதளங்களில் தொடர்ந்து உடைகள் வாங்கிவரும் வாடிக்கையாளர்களின் விமர்சனம், அத்தளம் சேவை செய்யும் விதம், பொருள்களின் தரம் போன்றவற்றின் தகவல்கள், புதிய வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்விமர்சனங்களே தளத்துக்கான ஸ்டார் மதிப்பீட்டின் உண்மைத்தன்மையை உணர்த்தும். தளங்களுக்கான விமர்சனம் மட்டுமல்ல, தளத்தினுள் நீங்கள் விரும்பும் உடையின் புகைப்படம் பார்க்க அழகாக இருந்தாலும் அதன் அளவு, நிறம், தரம் போன்றவற்றின் உண்மைத் தன்மை மற்றும் அதன் நிறை குறைகளையும் விமர்சனத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

4
உங்கள் உடலமைப்பைக் கூட்டி, குறைத்து என மேஜிக் செய்யக்கூடியது மெட்டீரியல்தான். 

மெட்டீரியலில் கவனம்

நாம் கொடுக்கும் பணத்துக்கு இணையான பொருளை வாங்குகிறோமா என்பதில் விழிப்புடன் இருப்பது அவசியம். புகைப்படத்தின் அழகில் மயங்கி வாரக்கணக்கில் காத்திருந்து ஆசைப்பட்டு வாங்கிய ஆடை, நாம் நினைத்ததுபோல் இல்லாமல் போனால் நிச்சயம் அதைவிடப் பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. எனவே, துணியின் வகையைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

மெட்டீரியலின் தரம் முக்கியம்

காட்டன், பாலியஸ்டர், விஸ்கோஸ், க்ரேப் சில்க், லினன், ஜூட் என எண்ணிலடங்கா துணிவகைகள் தற்போது மார்க்கெட்டில் குவிந்துள்ளன. முடிந்தால் அவற்றை நேரில் பார்த்து அதன் தன்மையை உணருங்கள். இதனால் உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற மெட்டீரியல் எது என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். இல்லையெனில், ஆன்லைனில் நீங்கள் விரும்பும் உடையின் மெட்டீரியல் என்ன வகை என்பதை குறித்துக்கொண்டு அதன் தன்மையை இணையதளத்தில் தேடி தெரிந்துகொண்டு அது உங்கள் உடலமைப்புக்கு பொருந்துமா என முடிவு செய்யுங்கள்.

5
லைட், டார்க், பிரைட் என எப்படி இருந்தாலும் இந்த நிறம் என் சருமத்துக்கு பொருந்தும் என உங்களை நினைக்க வைக்கும் நிறங்களை தயங்காமல் உங்கள் கார்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நிறங்களில் சந்தேகம்

செல்ஃபோன், லேப்டாப், டெஸ்க்டாப், ஐ-பாட் போன்ற வெவ்வேறு எலக்ட்ரானிக் பொருள்களின் டிஸ்ப்ளே தரம், ஒன்றுக்கொன்று மாறுபடும். ஆன்லைனில் நாம் தேர்ந்தெடுக்கும் உடையின் நிறம் டிஸ்ப்ளே தரத்தைப் பொறுத்து வேறுபடும். அதனால் உடையின் துல்லியமான நிறத்துக்கு உத்தரவாதமில்லை. எனவே, நிறங்களைப் பொறுத்தவரையில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது சிறந்தது.

"என் வார்ட்ரோபில் இருக்கும் உடைகளை வாங்குங்கள்..!'' - அலியா பட் கோரிக்கை. ஏன்?
ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம் அவசியம்.

மேலும், ரிட்டர்ன் பாலிசிஸ் மற்றும் கஸ்டமைசேஷன் ஆப்ஷனை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தளத்தில் தொடர்ந்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். அதுபோல நீங்கள் உபயோகிக்கும் தளங்களில் உங்கள் விமர்சனங்களை விட்டுச் செல்வது, பின்வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு